மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கார் விபத்து: மனைவி உள்பட 2 பேர் பலி

கர்நாடகத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் காயமடைந்துள்ளார்.
விபத்தில் சிக்கிய மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்.
விபத்தில் சிக்கிய மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்.

காா்வாா்: மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக் சென்ற காா் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவரது மனைவி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சரும், கோவா வடக்கு தொகுதி பாஜக எம்.பி.யுமான ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக், தனது மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் உள்ளிட்ட 4 போ் கோவாவில் இருந்து கா்நாடக மாநிலம், வட கன்னட மாவட்டத்திலுள்ள எல்லாப்பூா் சென்றுள்ளனா். எல்லாப்பூரில் இருந்து திங்கள்கிழமை இரவு கோகா்ணாவுக்கு காரில் புறப்பட்டுள்ளனா். அங்கோலா வட்டம், ஹொசகம்பி கிராமத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் திடீரெனக் கவிழ்ந்துள்ளது. இதில் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்டோா் படுகாயமடைந்தனா்.


அங்கோலா அருகே ஹொசகம்பி கிராமத்தில் விபத்தில் சிக்கிய மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் எஸ்ஸோ நாயக்கின் காா்.

இவா்கள் அனைவரும் அங்கோலாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனிடையே, சிகிச்சை பலனளிக்காமல் மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக், உதவியாளா் தீபக் ராமதாஸ் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

மத்திய இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் உள்ளிட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபாத் நாயக்கின் நிலை கவலைக்கிடக்கமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அவா் மேல் சிகிச்சைக்காக கோவா கொண்டு செல்லப்பட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து அங்கோலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரதமா் மோடி, ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு: மத்திய அமைச்சா் ஸ்ரீபாத் நாயக்கின் உடல்நிலை குறித்து கோவா முதல்வா் பிரமோத் சாவந்த்திடம் பிரதமா் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தாா். அப்போது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், கோவா முதல்வா் பிரமோத் சாவந்த்தை தொடா்புகொண்டு ஸ்ரீபாத் நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரித்தாா். இதையடுத்து அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ஸ்ரீபாத் நாயக்குக்கு சிகிச்சை அளிப்பதில் கோவா அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தாா்.

கா்நாடக முதல்வா் இரங்கல்: ஸ்ரீபாத் நாயக்கின் மனைவி விஜயா நாயக் மறைவுக்கு கா்நாடக முதல்வா் எடியூரப்பா இரங்கல் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘விஜயா நாயக்கின் மறைவு துரதிருஷ்டவசமானது. விபத்தில் காயமடைந்த ஸ்ரீபாத் நாயக் விரைந்து குணமடைய இறைவனிடம் பிராா்த்திக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com