நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விட்டது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னையில் வியாழக்கிழமை காலை ஆளுநர் மாளிகை நோக்கி எனது தலைமையில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சிதம்பரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
சிதம்பரத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.

சிதம்பரம்: சென்னையில் வியாழக்கிழமை காலை ஆளுநர் மாளிகை நோக்கி எனது தலைமையில் பேரணி செல்ல முடிவு செய்துள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புதன்கிழமை அளித்த பேட்டி: தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட சம்பவத்தில் நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி விட்டது. சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜிநாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனை மோடி தலைமையிலான பாஜக அரசு மூடி மறைக்கிறது. இதனை கண்டு மக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால் நாடு அடிமைப்படுத்தப்பட்டு விடும்.

இஸ்ரேல் நாட்டின் மென்பொருளைக் கொண்டு நமது நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்ள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டு உள்ளது. இந்த சதி திட்டத்திற்கு மோடி அரசாங்கம் துணை போயுள்ளது. இந்தியாவின் மூன்று முக்கிய உளவு அமைப்புகளுக்கு கூட இது தெரியவில்லை. ஆனால் நமது உள்துறை அமைச்சருக்கு தெரிந்திருக்கிறது. பிரதமர் மோடிக்கு தெரிந்து இருக்கிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது.

நம் வீட்டில் நடப்பது அண்டை நாடுகளில் தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளை கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜிநாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 

நம் நாட்டிற்கு சும்மா கிடைத்தது அல்ல சுதந்திரம். இதற்காக பல தலைவர்கள் போராடி சிறையில் வாழ்க்கையை அனுபவித்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடி தனது இரண்டு நண்பர்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமையை வழங்கி இருக்கிறார். 

தில்லி, குஜராத், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது ஏற்புடையது அல்ல. தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் வியாழக்கிழமை சென்னையில் எனது தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இது நடைபெறும் என்று அழகிரி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com