விருதுநகர் அருகே விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி

விருதுநகர் அருகே வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பாக விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை  குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விவசாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சியில்  முன்னோடி விவசாயி கந்தசாமி தனது இயற்கைமுறை சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து விளக்கம் தெரிவித்தபோது.
விவசாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சியில் முன்னோடி விவசாயி கந்தசாமி தனது இயற்கைமுறை சாகுபடி அனுபவங்களைப் பகிர்ந்து விளக்கம் தெரிவித்தபோது.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரம் கிராமத்தில் நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி (கமுதி) மாணவிகள் சார்பாக விவசாயிகளுக்கான இயற்கை வேளாண்மை  குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி செவ்வாய்க்கிழமை அக்கிராமத்தில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூரிலுள்ள  நம்மாழ்வார் வேளாண் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியின் நான்காமாண்டு மாணவிகள் சார்பில் ஊரக வேளாண் பணி அனுபவத்திட்டம் மூலம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரி மாணவிகள் மொத்தம் 11 பேர் முன்னிலை வகித்தனர்.

சத்திரரெட்டியபட்டி முன்னோடி விவசாயி கந்தசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயற்கை முறை விவசாயத்தில் மிகச்சிறந்த மகசூல் பெற்று சிறந்த வருமானம் அடைவது குறித்த தனது அனுபவங்களை விவசாயிகளுக்கு விரிவாக விளக்கினார். அப்போது, வேளாண் கல்லூரி மாணவிகள் சினேகா, கல்பனா, கெளசல்யா, மேனகா, நந்தினி, நித்யா ஆகியோர் இணைந்து மண்வளம் காக்கவும், சிறந்த மகசூல் பெறவும் தேவையான, இயற்கை உரமான பஞ்சகவ்யம் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தும் முறை, நன்மைகள் குறித்து செயல்முறை விளக்கம் தந்தனர்.

இயற்கைமுறை வேளாண்மைக்குத் திரும்பிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். அதையடுத்து, மாணவிகள் உமா பார்வதி, அனிதா, விஜயப்பிரீத்திகா, லோகேஸ்வரி, கனிஷா ஆகியோர் இணைந்து சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை முறை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் விதம் மற்றும் நன்மைகள் குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கமளித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 40க்கு மேற்பட்ட விவசாயிகள் நேரில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.வேளாண் கல்லூரி மாணவி சினேகா நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com