தருமபுரியில் திமுக நகர செயலர் மனைவிக்கு தலைவராகும் வாய்ப்பு?

தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 18 வார்டில் வெற்றிபெற்று தருமபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
தருமபுரி நகராட்சி அலுவலகம்.
தருமபுரி நகராட்சி அலுவலகம்.

தருமபுரி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 18 வார்டில் வெற்றிபெற்று தருமபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியின் தலைவராக ஆகும் தற்போதைய திமுக நகர செயலர் மே.அன்பழகனின் மனைவி நித்யாவுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது

தமிழகத்தின் பழமையான நகராட்சிகளில் முக்கியமானது தருமபுரி நகராட்சியாகும். சேலம் மாவட்டத்தில் இணைந்திருந்தபோது தருமபுரி நகராட்சியாக செயல்பட்டு வந்தது. கடந்த 1964 ஏப்ரல் 1-ஆம் தேதி தருமபுரி நகராட்சியானது மூன்றாம் நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1971 ஆக.5-இல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 1987 ஆக.31-இல் முதல் நிலை நகராட்சியாகவும், கடந்த 2008-இல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.

தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இந்த வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, பாஜக மற்றும் சுயேச்சைகள் என 176 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தருமபுரி திமுக நகர செயலர் மனைவி நித்யா.
தருமபுரி திமுக நகர செயலர் மனைவி நித்யா.

இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், மொத்தமுள்ள 33 வார்டுகளில், திமுக 18 வார்டுகளில் வெற்றிபெற்றது. இதேபோல, திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றிபெற்றார். சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டில் வெற்றிபெற்றார். இதேபோல அதிமுக 13 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு தேவையான இடங்களை வெற்றிபெற்று, தருமபுரி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

தருமபுரி நகராட்சி நகர்மன்றத் தலைவர் பதவி, பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே திமுக சார்பில் வெற்றிபெற்ற பெண் வேட்பாளர்களில் ஒருவரை அக்கட்சி தேர்வு செய்யக் கூடும். தருமபுரி நகர செயலராக உள்ள மே.அன்பழகன் மனைவி நித்யா 29-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். எனவே, தருமபுரி நகர்மன்றத் தலைவர் பதவியிடம் இவருக்கு கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல, 27-ஆவது வார்டில் வெற்றிபெற்றுள்ள திமுக பொறுப்புக்குழு உறுப்பினராக உள்ள மாதுவின் மனைவி லட்சுமி, 25-ஆவது வார்டில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முல்லைவேந்தன் மனைவி சத்யா மற்றும் 20-ஆவது வார்டில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சுருளி ராஜன் மனைவி செல்வி ஆகியோரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com