சுயேச்சையிடம் தோற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் மகன்!
By DIN | Published On : 23rd February 2022 02:01 PM | Last Updated : 23rd February 2022 02:01 PM | அ+அ அ- |

திருச்சி: திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜனின் மகன், ஜவஹர்லால் நேரு சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியுற்றதை அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மாநகராட்சியில் மொத்தம் உள்ள 65 வார்டுகளில் தமாகா-வுக்கு ஒரு வார்டை ஒதுக்கி அந்த இடத்திலும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடச் செய்தது அதிமுக. இதன்காரணமாக 65 வார்டுகளிலும் இரட்டை இலை போட்டியிட்டது. திமுக கூட்டணியில் திமுக 51 இடங்களிலும், காங்கிரஸ் 5, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகியவை தலா இரு இடங்களிலும், மனிதநேய மக்கள் கட்சி ஓரிடத்திலும் (உதயசூரியன் சின்னம்) போட்டியிட்டது.
இதில், திமுக கூட்டணி 59 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக 3 இடங்களிலும், அமமுக ஓரிடத்திலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றால் மேயர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு உள்ளது எனவும், முன்னாள் அமைச்சர் மற்றும் திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் வெல்லமண்டி என். நடராஜனின் மகன் என்ற பலத்துடன் 20ஆவது வார்டில் போட்டியிட்ட ஜவஹர்லால், சுயேச்சை வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்த வார்டில், பாமக சார்பில் யுவராஜ், பாஜக சார்பில் முரளிதரன், திமுக சார்பில் சுருளிராஜன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கங்காதரன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சக்திவேல், அமமுக சார்பில் லோகநாதன், லோக்தந்தரிக் ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம், தேசிய மக்கள் கட்சி சார்பில் விக்னேஷ், சுயேச்சைகளாக அன்புதாசன், சங்கர், சீனிவாசன், கணேஷ்ராம், சரவணன், மருதமுத்து, எல்ஐசி சங்கர் என மொத்தம் என மொத்தம் 16 பேர் போட்டியிட்டனர்.
இதில், சுயேச்சையாக போட்டியிட்ட எல்ஐசி சங்கர் 2,647 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சரின் மகன் ஜவஹர்லால் நேரு 1,692 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மாநகராட்சியில் பெரும்பாலான இடங்களில் தோல்வி, சில இடங்களில் வைப்புத் தொகை கூட அதிமுக-வுக்கு கிடைக்கவில்லை.
இருந்தாலும், முன்னாள் அமைச்சரின் மகன், சுயேச்சையிடம் தோல்வியடைந்திருப்பதுதான் அக்கட்சியினருக்கு பெரிதும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கான தடபுடலான ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்திருந்த ஜவஹர்லால் நேரு, ஏமாற்றத்துடன் தோல்வியடைந்து திரும்ப நேரிட்டது.
வேட்பாளர் தேர்வின்போதே முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த சூழலில், மாநகராட்சி வார்டுகளில் அதிமுக படுதோல்வியடைந்திருப்பதும், மகனை கூட வெற்றி பெறச் செய்ய முடியவில்லை என்பதும் மாவட்டச் செயலர் பதவிக்கு பலவீனமாக உள்ளதாக அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகியுள்ளது.