2 ஆவது முறையாக திமுக கைப்பற்றிய திருப்பூர் மேயர் யார்?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் 37 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக 2-வது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றியது. 
2 ஆவது முறையாக திமுக கைப்பற்றிய திருப்பூர் மேயர் யார்?

திருப்பூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் 37 வார்டுகளில் வெற்றி பெற்ற திமுக 2-வது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றியது. 

திருப்பூர் மாநகராட்சியானது 2008 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து அப்போது நகரமன்றத் தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த க.செல்வராஜ் முதல் மேயராகப் பதவி வகித்தார். இதைத்தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சிக்கு 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 

இதையடுத்து, அதிமுகவை சேர்ந்த ஆ.விசாலாட்சி திருப்பூர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்றது. இதில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் சிக்கண்ணா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. 

இதில், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக-24, இந்திய கம்யூ-6, மார்க்சிஸ்ட்-1, காங்கிரஸ்-2, மதிமுக-3, முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 37 வார்டுகளில் திமுக., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 19 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இதில் அதிமுக-18, த.மா.கா.-1.
 

இந்தத் தேர்தலில் 60 வார்டுகளிலும் தனித்து நின்ற பாஜக 2 வார்டுகளிம், அதிமுக சார்பில் சீட் கிடைக்காததால் வார்டு எண் 10-இல் சுயேச்சையாகப் போட்டியிட்ட பிரேமலாதாவும், திமுக சார்பில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்ட வேலம்மாளும் வெற்றி பெற்றுள்ளனர்.
 

முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, இல.பத்மநாபன், தினேஷ்குமார், செந்தில்குமார்
முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி, இல.பத்மநாபன், தினேஷ்குமார், செந்தில்குமார்

மேயர் பதவியைக் கைப்பற்றுவது யார்?: 

திருப்பூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியதைத் தொடர்ந்து மேயர் பதவியைக் கைப்பற்ற அக்கட்சி நிர்வாகிகளிடையே 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் ஆதரவாளரும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் வடக்கு மாநகர திமுக பொறுப்பாளர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜின் ஆதரவாளரான செந்தில்குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி ஆகிய 4 பேரில் ஒருவருக்கு மேயர் பதவிக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. 

எனினும், திமுக தலைமை யாரை மேயராகத் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மட்டுமின்றி திருப்பூர் மாநகர மக்களிடையேயும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

அதிமுக மேயர் வேட்பாளர் தோல்வி:

திருப்பூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் திருப்பூர் மாநகராட்சி 35 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டிருந்தார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான முத்துகிருஷ்ணனிடம் 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

வார்டு எண்: 35

பதிவான வாக்குகள்:5,250

முத்துகிருஷ்ணன்(திமுக):2,358

குணசேகரன்(அதிமுக):2,295

வாக்கு வித்தியாசம்:63
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com