மானாமதுரையில் மது போதையில் பள்ளி மாணவரை தாக்கிய தலைமையாசிரியர் மீது புகார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவரை மது போதையில்
காயமடைந்த மாணவர் ரெங்கராஜன்.
காயமடைந்த மாணவர் ரெங்கராஜன்.

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவரை மது போதையில் மம்பட்டி கட்டையால் தாக்கிய தலைமையாசிரியர் மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

மானாமதுரை  ஒன்றியம் தெற்குசந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் என்ற மாணவர் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் என்பவர் அறிவியல் ஆசிரியராகவும் உதவித் தலைமை ஆசிரியராகவும் பணி செய்து வருகிறார். தற்போது இந்த பள்ளியில் தலைமையாசிரியர் பணியிடம் காலியாக இருப்பதால் வின்சென்ட் தலைமை ஆசிரியர் பணியிடத்தை பொறுப்பு பணியாக கவனித்து வருகிறார்.

மானாமதுரையில் தனியாக தங்கி பணி செய்து வரும் வின்சென்ட் பள்ளி மாணவர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்ததாகவும் பணி நேரத்தில் மது போதையில் இருப்பதாகவும் மாணவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மாணவர் ரெங்கராஜனிடம் வின்சென்ட் பணம் வாங்கியுள்ளார். சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று விட்டு வின்சென்ட் மது போதையில் பள்ளிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது மாணவர் ரெங்கராஜன் தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் வின்சென்ட் மம்பட்டி கட்டையால் மாணவர் ரெங்கராஜனை சரமாரியாக தலையில் தாக்கினாராம். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக இந்த மாணவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இச்சம்பவம் குறித்து மானாமதுரை சிப்காட் காவல் நிலையத்தில் மாணவர்  சார்பில் புகார் செய்யப்பட்டது. காவல் சார்பு ஆய்வாளர் முகமது தாரிக்குல் அமீன்  கல்குறிச்சி அரசுப் உயர்நிலைப்பள்ளிக்கு   நேரடியாக  வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திலிருந்து சார்பு ஆய்வாளரிடம் வின்சென்ட் மீது கொடுக்கப்பட்ட புகார்  குறித்து விபரம் கேட்கப்பட்டது. இதற்கிடையில் தலைமை ஆசிரியர் வின்சென்ட் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளதாக பள்ளி வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்குறிச்சி பள்ளியில் மாணவரை மதுபோதையில் தலைமை ஆசிரியர் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com