திருநள்ளாறு நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ கொடியேற்றம்
By DIN | Published On : 24th February 2022 12:34 PM | Last Updated : 24th February 2022 12:34 PM | அ+அ அ- |

காரைக்கால்: திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கமாக வியாழக்கிழமை கொடியேற்றம் செய்யப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலை சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில், வெகுவாக பக்தர்களை ஈர்க்கும் தலமாக விளங்குகிறது. ஸ்ரீ திரிநேத்ர பஞ்சமுக வீர ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிரம்மோத்ஸவம் நிகழாண்டு கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ நளநாராயண பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கொடிக்கம்பம் அருகே எழுந்தருளச் செய்யப்பட்டார். காலை 10.30 முதல் 11.30 வரை பட்டாச்சாரியர்கள் சிறப்பு ஹோமம் நடத்தி, வேதமந்திரங்கள் கூறி கொடிக்கம்பத்தில் கருடக் கொடியேற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நிகழ்ச்சியாக மாலை சூரிய பிரபையில் வேணுகோபாலராக பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும் மாலை ஹம்ச வாகனத்தில் நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா புறப்பாடும், சனிக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை சேஷ வாகனத்தில் வைகுந்தராகவும், ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனமும், மாலை கருடசேவையாகவும் பெருமாள் புறப்பாடு செய்யப்படுகிறது.
நிறைவு நிகழ்ச்சியாக திங்கள்கிழமை காலை தேரில் பெருமாள் நளதீர்த்தம் சென்று தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிற்பகல் திருக்கல்யாண உத்ஸவமும், மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.