வாழப்பாடி அருகே தீ விபத்து: காயம் அடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு அனுப்பாததால் பரபரப்பு

வாழப்பாடி அருகே தனியார் நூற்பாலையில் நேற்றிரவு நடைபெற்ற தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு அனுப்பாமல் நூற்பாலை நிர்வாகம் காலதாமதம் செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி அருகே  தீ விபத்து: காயம் அடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு அனுப்பாததால் பரபரப்பு

வாழப்பாடி: வாழப்பாடி அருகே தனியார் நூற்பாலையில் நேற்றிரவு நடைபெற்ற தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளியை சிகிச்சைக்கு அனுப்பாமல் நூற்பாலை நிர்வாகம் காலதாமதம் செய்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பெருமாபாளையம் பகுதியில், தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

வியாழக்கிழமை இரவு பஞ்சு பண்டல் செய்யும் இயந்திரத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென்று பரவிய தீ அந்த குடோனில் இருந்த அனைத்து பஞ்சுகளிலும் பற்றியது. அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். இந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுசில்குமார் (26) என்ற இளைஞர் காயமடைந்தார். உடன் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
 
அப்போது காயமடைந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் நூற்பாலை நிர்வாகத்தினர், யாருக்கும் காயம் ஏற்பட்டவில்லையென, ஆம்புலன்சை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், நூற்பாலை நிர்வாகத்தினர் காயமடைந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்காமல், 2 மணிநேரமாக தனியறையில் படுக்க வைத்து விட்டு மெத்தனமாக இருப்பதாக வாழப்பாடி போலீசாருக்கு இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  சென்ற வாழப்பாடி போலீசார், தனியார் நூற்பாலை நிர்வாகத்தினரை எச்சரித்து, தீ விபத்தில் காயமடைந்திருந்த சுசில்குமாரை மீட்டு உடனடியாக மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  

தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து சேதமான நிலையில், பீகார் மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்க்கும் இந்த நூற்பாலையில், தீக்காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், தனியறையில் படுக்க வைத்து மெத்தனம் காட்டியது குறித்து தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com