போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி
By DIN | Published On : 01st March 2022 10:24 AM | Last Updated : 01st March 2022 10:24 AM | அ+அ அ- |

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன்பட்டியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே பல தரப்பட்ட போதைப்பொருள்களை பயன்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்கத்துடன் கலந்து பேசினர். போதைப் பழக்கத்தை தடுக்க பள்ளி மாணவர்களுக்கு கபடி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் பேரில் பள்ளி மாணவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குட்டியம்மாள் வரவேற்று பேசினார். போட்டிகளை தலைமை ஆசிரியர் நாகரத்தினம், சார்பு ஆய்வாளர் மூவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
12 போட்டிகள் மூன்று பிரிவாக நடத்தப்பட்டது. சீனியர் பிரிவில் அருள்குமார் அணியும், சூப்பர் சீனியர் பிரிவில் கவாஸ்கர் அணியும், ஜுனியர் பிரிவில் தரீஸ் அணியினரும் வெற்றி பெற்றனர். முதல் பரிசாக கோப்பை வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்களிடையே உள்ள போதை பழக்கத்தை மாற்றுவதற்காக இந்த விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது என பரிசுகளை வழங்கிய கூடலூர் வடக்கு காவல் சார்பு ஆய்வாளர் பொன். கணேசன் பேசினார்.
விழா முடிவில் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.