கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்

கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பு ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
கும்பகோணத்தின் முதல் மேயராகிறார் ஆட்டோ ஓட்டுநர்

கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராகும் வாய்ப்பு ஆட்டோ ஓட்டுநர் சரவணனுக்கு வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.

156 ஆண்டுகள் பழைமையான நகராட்சியாக இருந்த கும்பகோணம் சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்த முதல் மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 48 வார்டுகளில் திமுக 38 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகள் தலா ஒரு வார்டிலும் என மொத்தம் 42 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

எனவே, கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி திமுகவுக்கே ஒதுக்கீடு செய்யப்படும் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதில், முதல் மேயராகும் வாய்ப்பு முன்னாள் நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன், தாராசுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் இரா.அசோக்குமாருக்கு கிடைக்கும் என அவர்களது ஆதரவாளர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கும்பகோணம் மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணி வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், யாருக்கு முதல் மேயராகும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.

இந்நிலையில், 17-ஆவது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆட்டோ ஓட்டுநரான கே. சரவணன்(42) மேயர் வேட்பாளராவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது.

கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வரும் சரவணன் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக நகரத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி, அதன் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார். இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு மனைவி தேவி, மூன்று மகன்கள் உள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரான சரவணன் மேயர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

துணை மேயராகிறார் சு.ப. தமிழழகன்:

கும்பகோணம் துணை மேயர் பதவி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை மேயர் வேட்பாளராக சு.ப. தமிழழகனை திமுக தலைமை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com