வேலூர் மாநகராட்சி மேயராகிறார் முதுநிலை ஆசிரிய பட்டதாரி!

வேலூர் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் எம்ஏ., பி.எட்.,
31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் எம்ஏ., பி.எட்.,

வேலூர்: வேலூர் மாநகராட்சி மேயராக திமுக சார்பில் 31-ஆவது மாமன்ற உறுப்பினர் சுஜாதா ஆனந்தகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். முதுநிலை ஆசிரிய பட்டதாரியான இவர், ஆசிரியர் பணிக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்க உள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் வெற்றி பெற்றவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர். இதன்தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு மேயர், துணைமேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலில் திமுக 44 வார்டுகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து மேயர், துணைமேயர், நான்கு மண்டலக் குழு தலைவர் பதவிகள், அனைத்து நிலைக்குழு பொறுப்புகள் ஒட்டுமொத்தமாக திமுகவின் கைகளுக்குச் சென்றுள்ளன.

இதையடுத்து, வேலூர் மாநகராட்சி மேயர் பொறுப்புக்கு 31-ஆவது வார்டில் வெற்றி பெற்றுள்ள சுஜாதா ஆனந்தகுமார்,  துணைமேயர் பொறுப்புக்கு 8-ஆவது வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.சுனில்குமார் ஆகியோர் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, மாநகராட்சி மேயராக பொறுப்பேற்க உள்ள சுஜாதா ஆனந்தகுமார்(37) எம்ஏ., பி.எட்., படித்துள்ள முதுநிலை ஆசிரிய பட்டதாரியாவார். கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த இவர் ஆசிரியப் பணிக்காக போட்டித் தேர்வுகளை எழுதி வந்தவர். இவர், 2011-இல் திமுகவில் இணைந்து 2016 முதல் மாநகர மகளிரணி அமைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார். இவரது கணவர் ஆனந்தகுமார் 1991-இல் திமுகவில் இணைந்து கிளைச்செயலர், வார்டு பிரதிநிதி என பொறுப்புகளை கடந்து தற்போது தொமுச மாவட்ட டாஸ்மாக் அமைப்பாளராக உள்ளார். இவர் ஏற்கனவே 1996-2001 வரை கொணவட்டம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2011-இல் நடந்த மாநகராட்சித் தேர்தலில் சுஜாதா ஆனந்தகுமார் முதன்முறையாக திமுக சார்பில் 56-ஆவது வார்டில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது இரண்டாவது முறையாக 31-ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் மேயராகவும் பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு சுகேஷ்சஸ்வதன் (பிளஸ் 1), நிகேஷ் சாஸ்வதன் (7ஆம் வகுப்பு) என இரு மகன்கள் உள்ளனர்.

துணைமேயராக பொறுப்பேற்க உள்ள எம்.சுனில்குமார்(46), 1996-இல் திமுகவில் இணைந்து மாவட்ட பிரதிநிதி, மாநகர துணைஅமைப்பாளர் என பல பொறுப்புகளை கடந்து தற்போது பகுதிசெயலராக உள்ளார். ஏற்னவே, 2001-இல் தாராபடவேடு பேரூராட்சி வார்டு உறுப்பினராகவும், 2006-இல் நகராட்சி உறுப்பினராகவும், 2011-இல் மாநகராட்சி முதலாவது மண்டல தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கட்டுமான ஒப்பந்தப்பணி, கேபிள் டிவி தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com