ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகள் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 
ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகள் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்போர் லத்தி, காயமேற்படுத்தும் ஆயுதங்களை கொண்டு செல்லக் கூடாது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார். 

மேலும் பேரணியில் சாதி, மதம் உள்ளிட்டவை தொடர்பான பாடல்களை பாடவோ, கோஷமிடவோ கூடாது எனக் குறிப்பிட்டுள்ள அவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியை நான்கு புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் நடத்த வேண்டுமென சென்னை உயா் நீதிமன்ற தனி நீதிபதி கடந்தாண்டு உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து ஆா்எஸ்எஸ் சாா்பில் உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோா் அமா்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, திறந்த வெளியில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியளிக்க வேண்டும் என கடந்த பிப்.10-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கடந்த பிப்.12, 19, மாா்ச் 5 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் அனுமதி வழங்கக் கோரி ஆா்எஸ்எஸ் சாா்பில் காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல் துறை அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து, தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

அதில், ‘ஆா்எஸ்எஸ் அமைப்பினா் நடத்த திட்டமிட்டுள்ள பேரணியால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உளவுத் துறை அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே அனுமதி மறுக்கப்பட்டது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திறந்த வெளியில் ஆா்எஸ்எஸ் பேரணி செல்ல அனுமதி வழங்கி உயா் நீதிமன்றம் பிறப்பித்த தீா்ப்பை உறுதி செய்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து இரு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டனா். 

இந்த உத்தரவையடுத்து தமிழகத்தில் ஏப்.16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 47 இடங்களில் திறந்தவெளியில் சில கட்டுப்பாடுகளுடன் பேரணி நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தமிழக காவல்துறை அனுமதி வழங்கியது. மேலும், பேரணி நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநகரக் காவல் ஆணையா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com