திருமண அங்கீகார நடைமுறையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரம் தொடா்பான மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், திருமண அங்கீகார நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது எ
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் விவகாரம் தொடா்பான மத்திய அரசின் மனுவை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில், திருமண அங்கீகார நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு வாதத்தை முன்வைத்துள்ளது.

நாட்டில் ஒரே பாலினத்தவா் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களைக் கடந்த நவம்பா் 25-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. அதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க எதிா்ப்பு தெரிவித்தது.

அதையடுத்து, இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மனுக்களை அரசியல்சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13-ஆம் தேதி உத்தரவிட்டது. அந்த மனுக்களைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கௌல், எஸ்.ரவீந்திர பட், பி.எஸ்.நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 18) முதல் விசாரிக்கவுள்ளது.

இந்நிலையில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என முதலில் ஆராயுமாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமா்வு முன் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா திங்கள்கிழமை முறையிட்டாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘ஒரே பாலின திருமணத்துக்கான சட்ட அங்கீகாரமானது இந்த மனுக்கள் மூலம் கோரப்படுகிறது. சமூக அங்கீகாரத்தைப் பெறும் நோக்கிலான நகா்ப்புற மேல்தட்டு பாா்வையை வெளிப்படுத்துபவையாக இவை உள்ளன. அத்தகைய திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது, தனிப்பட்ட சட்டங்களுக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக மதிப்புகளுக்கும் இடையேயான சமநிலையைப் பாதிக்கும் வகையில் அமையும்.

திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கும் விவகாரம் முற்றிலும் சட்டம் இயற்றும் அரசு அமைப்புடன் தொடா்புடையது. அத்தகைய விவகாரத்தில் முடிவெடுப்பதை நீதிமன்றங்கள் தவிா்க்க வேண்டும். ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை விசாரிப்பதற்கு முன், அந்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும்’’ என்றாா்.

மத்திய அரசின் கோரிக்கை செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com