காங்கிரஸில் ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.
காங்கிரஸில் ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்காததால் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் திங்கள்கிழமை இணைந்தார்.

கட்சியில் சேர்ந்ததும், ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கான படிவம் ஜெகதீஷ் ஷெட்டரிடம் அளிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடர் வெற்றியைப் பெற்றிருந்த பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தினர். இதனால் ஏமாற்றமடைந்த அவர், எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்தல் அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்துப் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, தர்மேந்திர பிரதான், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் ஜெகதீஷ் ஷெட்டரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க இயலாது என்ற கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். மேலும் கட்சியில் பெரிய பதவியை தருவதாகவும், எதிர்காலத்தில் வேறு நல்ல பதவிகளை வழங்குவதாகவும் கூறினர்.

இதற்கு செவிசாய்க்காத ஜெகதீஷ் ஷெட்டர், ஞாயிற்றுக்கிழமை தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்த அவர், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, பெங்களூரில் உள்ள காங்கிரஸ் மாநிலத் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது: முன்னாள் முதல்வர், இருமுறை எதிர்க்கட்சித் தலைவர், பாஜக மாநிலத் தலைவராக இருந்த நான், பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

பாஜகவில் இருந்து விலகாமல் தடுக்க பலமுனைகளில் இருந்து எனக்கு நெருக்கடி தரப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே கட்சியின் மூத்த தலைவராக நான் அனுபவித்த மன வேதனையை யாரும் புரிந்துகொள்ள முடியாது.

கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாருடன் இணைந்து கர்நாடகத்தில் குறிப்பாக வடகர்நாடகத்தில் பாஜகவை வளர்த்தெடுத்தவன் நான். பாஜகவில் எனக்கு எல்லா பதவிகளும், மரியாதையும் அளிக்கப்பட்டன. அதற்கு ஈடாக கட்சியின் விசுவாசமான தொண்டனாக கட்சியை அடிமட்டத்தில் இருந்து வளர்க்க அரும்பாடுபட்டுள்ளேன்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா போன்றவர்களை நான் விமர்சிக்க மாட்டேன். அவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. இங்கு நடப்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனக்கு அதிகாரம் வேண்டாம் என்றார் அவர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "கட்சியின் கொள்கைகளை ஏற்று, அவரது சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் சேர்ந்துள்ளார். ஆர்எஸ்எஸ், ஜனசங்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை இதுவரை கூறியதில்லை.

காங்கிரஸ் கட்சியை வளர்க்க ஜெகதீஷ் ஷெட்டர் பயன்படுவார். குறிப்பாக, வடகர்நாடகத்தில் காங்கிரஸின் பலம் கூடும். இதனால் ராகுல் காந்தி கூறியதுபோல சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களில் வெல்வோம். ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸில் சேர்ந்துள்ளதால், அந்த நம்பிக்கை பெருகியுள்ளது' 
என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com