பாலியல் வன்கொடுமையைக் கண்டுகொள்ளாத நோபல் எழுத்தாளர்! மகள் வேதனை!

எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ
எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ

நோபல் பரிசு வென்ற பிரபல எழுத்தாளரின் மகள் எழுதிய கட்டுரை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்பட்டு, உலகம் முழுக்க வாசகர்களைப் பெற்றவர் எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ (Alice munro). வாசகர்களாலும், விமர்சகர்களாலும் உலகின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவராக முன்ரோ கருதப்படுகிறார்.

அவர் எழுதிய டான்ஸ் ஆஃப் ஹேப்பி ஷேட்ஸ் (Dance of the Happy Shades),  ஹூ டூ யூ திங்க் யூ ஆர்? (Who Do You Think You Are?) உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள் பிரபலமானவை. இலக்கியத்தில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2013 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

கனடா அரசின் பல்வேறு விருதுகளை வென்ற ஆலிஸ் முன்ரோ கடந்த மே மாதம் தன் 92 வயதில் காலமானார்.

இந்த நிலையில், ஆலிஸ் முன்ரோவின் நினைவுகள் குறித்து அவரின் மகள் ஆண்ட்ரியா ராபின் ஸ்கின்னர் பிரபல பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ஆண்ட்ரியாவின் வளர்ப்புத் தந்தையான ஜெரால்ட் ஃபிரம்ப்ளின் 1976-ல் ஆண்ட்ரியாவின் 9 வயதிலிருந்து அவரை பாலியல் ரீதியாக கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதனால், வளர வளர தனக்கு இன்சோமேனியா (தூக்கமின்மை) உள்ளிட்ட நோய்கள் வந்ததையும் குறிப்பிடுகிறார்.

மேலும், கதையொன்றில் வளர்ப்புத் தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணிற்காக வருத்தப்பட்ட தன் தாயும் எழுத்தாளருமான ஆலிஸ் மன்ரோவிற்கு ஆண்ட்ரியா 1992-ல் கடிதம் எழுதுகிறார். அதில், ஃபிரம்ப்ளின் செய்த பாலியல் ரீதியான கொடுமைகளையும் குறிப்பிடுகிறார். ஆனால், இதை அறிந்த பின்பும் ஆலிஸ் மன்ரோ தன் கணவரை விட்டு விலகவில்லை.

இது யாருக்கோ நடந்ததுபோல் ஆலிஸ் மன்ரோ நடந்து கொண்டதையும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து, 2005-ல் காவல்துறையில் ஃபிரம்ப்ளின் மேல் ஆண்ட்ரியா புகார் அளிக்கிறார். விசாரணையில், ஃபிரம்ப்ளின் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கிறது. பின், 2013-ல் அவர் மறையும் வரை ஆலிஸ் மன்ரோ அவருக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.

எழுத்தாளர் ஆலிஸ் முன்ரோ
வலதுசாரிகளுக்கு எதிராக அமைந்த தேர்தல் முடிவுகள்: பிரான்ஸில் கலவரம்!

ஆண்ட்ரியா ராபின் ஸ்கின்னர் எழுதிய கட்டுரையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்தபின்பும், தன் தாய் ஆலிஸ் வளர்ப்புத் தந்தையுடன் இருந்ததை மன்னிக்க முடியவில்லை என்கிற வேதனையைப் பகிர்ந்திருக்கிறார். இறுதியாக, என் தாய் பற்றி உலகம் அறிந்த கதைகளில் என் கதையும் இருக்கட்டும் என்பதையும் ஆண்ட்ரியா கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எழுத்தாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகள், விருப்பங்களை விலக்கியே அவர்களை அணுக வேண்டும் என்பார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருந்த ஆலிஸ் மன்ரோ தன் சொந்த மகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறாரே என அவரின் வாசகர்கள் மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com