பாஸ்போர்ட்டில் தாமரை ஏன்? வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்!

தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இப்போது அது தாமரை, பின்னர் அடுத்த மாதம் வேறு ஏதாவதொரு தேசியச் சின்னமாக மாறி இருக்கும்.
LOTUS SYMBOL ON NEW PASSPORTS
LOTUS SYMBOL ON NEW PASSPORTS

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்படுவதை எதிர்த்து எழுப்பிய கண்டனக்குரலை அடுத்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வியாழன் அன்று அதற்கு பதில் விளக்கம் அளித்தது. அதில், புதிதாக வழங்கப்படும் இந்திய பாஸ்போர்ட்களில் தாமரைச் சின்னத்தை அச்சிட்டு விநியோகிப்பது என்பது போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண்பதற்கான மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியே என்றும் அதில் வேறு எந்த மறைமுக நோக்கமும் இல்லை என்றும் அது தெரிவித்திருந்தது. இம்முறையின் கீழ் மற்ற தேசிய சின்னங்களையும் சுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்களில் தாமரை அச்சிடப்பட்ட இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸின் எம்.கே.ராகவன், இந்த விவகாரம் செய்தித்தாள்களில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இது மத்திய அரசாங்கத்தின் "மேலும் காவி" பிரச்சாரத் திட்டத்தின் மற்றொரு முகம் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ஏனெனில், தாமரை பாஜகவின் தேர்தல் சின்னமாகவும் இருப்பதால் அவர் அவ்விதமாகக் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான ரவீஷ் குமார்,  "இந்த முயற்சியானது, நமது தேசிய மலரை பாஸ்போர்ட்டில் பதிப்பிப்பதன் மூலமாகப் போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காண மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியே தவிர, இதில் வேறு எந்த மறைமுக உள்நோக்கமும் இல்லை" என்றார்.

இந்த பாதுகாப்பு அம்சங்கள் சர்வதேச சிவில் விமான அமைப்பின் (ஐ.சி.ஏ.ஓ) வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, என்றும் அவர் தெரிவித்தார்.

"தாமரை தவிர, பிற தேசிய சின்னங்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும். இப்போது அது தாமரை, பின்னர் அடுத்த மாதம் வேறு ஏதாவதொரு தேசியச் சின்னமாக மாறி இருக்கும். இவை தேசிய மலர் அல்லது தேசிய விலங்கு போன்ற இந்தியாவுடன் இணைக்கப்பட்ட அடையாளங்களாகவே இருக்கும்"  - என்றும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com