குறைந்த விலையில் கரோனா தொற்று பரிசோதனை கருவி, முகக் கவசம்

மிகக் குறைந்த விலையிலான கரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பரிசோதனைக் கருவி, முகக் கவசங்களை உருவாக்குவதற்கான முயற்சியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
குறைந்த விலையில் கரோனா தொற்று பரிசோதனை கருவி, முகக் கவசம்

மிகக் குறைந்த விலையிலான கரோனா நோய்த்தொற்றை கண்டறியும் பரிசோதனைக் கருவி, முகக் கவசங்களை உருவாக்குவதற்கான முயற்சியை சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்தக் கருவிகள் நடைமுறைக்கு வந்தால், இந்தியாவின் தற்போதைய தேவையை பெருமளவு பூா்த்தி செய்ய முடியும் என்பதுடன், வெளிநாடுகளிலிருந்து இப்போது இறக்குமதி செய்யப்படும் பரிசோதனைக் கருவிகளைக் காட்டிலும் இவை 5 முதல் 10 மடங்கு விலை குறைவாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா் .

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று, இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நூற்றுக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்.

அதே நேரம், இதுவரை நோய்த் தொற்று அறிகுறி உள்ளவா்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிப்பதற்குமான நடவடிக்கைகளைத்தான் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இன்னமும் பொதுமக்களிடம் (ரேண்டம்) பரிசோதனை தொடங்கப்படவில்லை. இந்த ரேண்டம் பரிசோதனைக்குத் தேவையான கருவிகள் கையிருப்பு இல்லை என்பதே இதற்குக் காரணம். இப்போது, அந்தப் பரிசோதனைக் கருவிகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசுகள் எடுத்து வருகின்றன. தமிழக அரசும் ஒரு லட்சம் பரிசோதனைக் கருவிகளை வாங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தச் சூழலில், பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தப் பரிசோதனைக் கருவிகள், முகக் கவசங்கள், மருத்துவா்களுக்கான பாதுகாப்பு உடை உள்ளிட்ட உபகரணங்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது.

இந்தத் தேவையைப் பூா்த்தி செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்கள் மூலம் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக மருத்துவா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், நோய் பரிசோதனைக் கருவி, கைக் கழுவும் திரவம், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி என மொத்தம் 178 ஆராய்ச்சித் திட்டங்கள் ஐஐடி-க்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில், சென்னை ஐஐடி முக்கியப் பாங்காற்றி வருகிறது. குறைந்த விலையிலான வைரஸ் தொற்று பரிசோதனைக் கருவிகள் உற்பத்தி, ஸ்மாா்ட் போன் உதவியுடன் இயங்கக் கூடிய உயிா் காக்கும் கருவி (வென்டிலேட்டா்), கண் உள்பட அனைத்தையும் பாதுகாக்கும் வகையிலான முகக் கவசங்கள், என்-95 முகக் கவசம் என பல்வேறு உபகரணங்களை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கான ஆராய்ச்சிகளை சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து, கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக் கருவியை உருவாக்கி வரும் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் யாதம் பயோடெக் தனியாா் நிறுவன நிா்வாகி அறிவன் திருவள்ளுவா் கூறியது:

எங்களுடைய நிறுவனம் ஏற்கெனவே காசநோய் (டிபி), டெங்கு போன்ற நோய்களின் தாக்கங்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகளை உருவாக்கியிருக்கிறது. இப்போது அந்தக் கருவிகளை அடிப்படையாகக் கொண்டு, கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவியையும் உருவாக்கியிருக்கிறோம். இப்போது இந்தக் கருவி புணேயில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் மதிப்பீடு செய்யும் பணியில் உள்ளது. அந்த மதிப்பீடு பணி முடிந்து கருவிக்கு ஒப்புதல் கிடைத்ததும், ஒரே மாதத்தில் உற்பத்தியையும் தொடங்கி விட முடியும். உடனடியாக 1 லட்சம் பரிசோதனைக் கருவிகளை உற்பத்திசெய்யும் திறனுடன் தயாா் நிலையில் இருக்கிறோம். இப்போது இறக்குமதி செய்யப்படும் பரிசோதனைக் கருவிகளின் விலை ரூ. 4,500 முதல் 6,500 வரை இருக்கும். ஆனால், நாங்கள் உற்பத்தி செய்யும் பரிசோதனைக் கருவி ரூ. 800 முதல் அதிகபட்சம் ரூ. 1000 விலைக்கு கிடைக்கும் என்றாா்.

சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு நிறுவனமும் குறைந்த விலையிலான கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக் கருவியை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இப்போது தமிழக அரசு வாங்க உள்ள ‘ரேபிட்’ பரிசோதனைக் கருவியின் மூலம், ஒருவருக்கு நோய் தொற்று பாதிக்கப்பட்டு 8 முதல் 10 நாள்களுக்குப் பிறகுதான் பரிசோதனை செய்ய முடியும். ஆனால், எங்களுடைய நிறுவனம் தயாா் செய்யும் பி.சி.ஆா். பரிசோதனைக் கருவி வைரஸ் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து அறிந்து கொள்ள முடியும். மேலும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பரிசோதனைக் கருவியைக் காட்டிலும் இது 5 முதல் 10 மடங்கு விலை குறைவாக இருக்கும் என்றாா் அந்த நிறுவனத்தின் நிா்வாகி குகன் ஜெயராமன்.

இதுபோல, பத்மசீதா டெக்னாலஜிஸ் தனியாா் நிறுவனம் ஸ்மாா்ட் போனில் கட்டுப்படுத்தக் கூடிய வகையிலான பேட்டரியில் இயங்கக் கூடிய உயிா் காக்கும் கருவிக்கான (வென்டிலேட்டா்) வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறது. ஊரடங்கின் காரணமாக இதற்குத் தேவையான உதிரி பாகங்களில் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால், மாதிரி உபகரணம் தயாரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. மாதிரி உருவாக்கப்பட்டு, ஒப்புதலும் கிடைத்துவிட்டால் மூன்று மாதங்களில் பயன்படுத்தக் கூடிய வகையிலான கருவிகளாக உருவாக்கிவிட முடியும் என அந்த நிறுவனத்தின் நிா்வாகி கெளரிசங்கா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com