ராஜமலை நிலச்சரிவு: கூடி வாழ்ந்த உறவுகள் மண் மூடி மாண்ட சோகம்

மூணாறு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 6 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இப் பகுதியில் பல இடங்களில் சிறு பாலங்கள்,
கணேசன் - மயில்சாமி 
கணேசன் - மயில்சாமி 

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த உறவு முறையிலான தேயிலை தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், ஒரே இரவில் மண்ணில் மூடி மாண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூணாறு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 6 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இப் பகுதியில் பல இடங்களில் சிறு பாலங்கள், சாலை, மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ராஜமலைப் பகுதியில் கடந்த ஆக.6-ம் தேதி(வியாழக்கிழமை) பெரும் சீற்றத்துடன் பெய்த மழை அச்சுறுத்துவதாகவே இருந்துள்ளது. பெட்டிமுடி எஸ்டேட் பகுதி பாதுகாப்பான இடமாகவே இருந்தாலும், இரவு 1.30 மணிக்கு ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் இரண்டரை கி.மீ., தூரம் வரை மண் மற்றும் பாறைகள் மேவியது.

இதில், பெட்டிமுடி எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்புகள் முழுமையாக புதையுண்டன. மழை சீற்றத்திற்கு நடுவே நள்ளிரவை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவு, அதிகாலை 4 மணிக்குதான் கண்டறிப்பட்டுள்ளது. 

இந்த நிலச் சரிவில் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்த 78 பேர் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. தற்போது வரை நிலச் சரிவில் புதையுண்டு இறந்த 26 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் உடைமைகள், கால்நடைகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், மண் மேவியும் பாழாகியுள்ளது.

கூடி வாழ்ந்த உறவுகள்: டாடா நிறுவனம் மூணாறு பகுதியில் செவன் ஹில் எஸ்டேட்டை அடுத்து, பெட்டிமுடி எஸ்டேட்டை உருவாக்கியது. இதில், 4 தொகுப்புகளாக தொழிலாளர்கள் குடியிருப்பு அமைந்திருந்தது. இந்த குடியிருப்புகளில் தங்கியிருந்து வேலை செய்து வந்த தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் உறவு முறையிலான குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் சிலரது குழந்தைகள் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

ராஜமலை நிலச் சரிவில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மயில்சாமி, அவரது மனைவி ராஜேஸ்வரி, சகோதரர்கள் கணேசன், அனந்தசிவம் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மண்ணில் புதையுண்டு இறந்தனர். இதில் தற்போது வரை மயில்சாமி, ராஜேஸ்வரி, கணேசன் ஆகியோரிடன் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது.

மயில்சாமியின் மூதாந்தையர் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் மூணாறில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர். மயில்சாமி, அவரது சகோதரர் கணேசன் ஆகியோர் கடந்த 14 ஆண்டுகளாக கேரள வனத் துறையில் தற்காலிக அடிப்படையில் ஜீப் ஓட்டுநர்களாக பணியாற்றிள்ளனர். மயில்சாமியின் மற்றொரு சகோதரரான அனந்தசிவம் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இக் குடும்பம் 3 தலைமுறைக்கு முன்பு மூணாறு பகுதியில் குடியியேறியதாக கூறப்படுகிறது. 

ராஜமலையில் விடாத மழைக்கு இடையே மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. உறவு முறையாக வாழ்ந்து ஒரே இரவில், மண்ணில் புதையுண்டு மாண்டவர்களின் உடல்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பூர்வீக குடிகளால் இறுதி மரியாதை செய்யப்பட்டு ராஜமலை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.

பெட்டிமுடியில் மீட்பு பணி நடைபெறும் இடங்களில் உருக்குலைந்து குவிந்துள்ள தோட்டத் தொழிலாளர்களின் உடமைகள், அவர்களது வாழ்வியல் தடயமாக காட்சியளிப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com