'பெண்களுக்கு சொத்துரிமை' - உச்ச நீதிமன்றத்துக்கு வழிகாட்டிய முன்னோடிகள்!

பரம்பரை சொத்துகளில் பெண்களுக்கும் சம உரிமை  உண்டு என்று தெளிவான சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கக் கோரி சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்வைத்த பெரியாரின் கனவை முழுமையாக நனவாக்க நம் நாட்டிற்கு இத்தனை ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 

இந்தியாவில் 2005-ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கும் பரம்பரைச் சொத்துகளில் சம உரிமை  உண்டு என்று உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை ஆக. 11-ல் வழங்கியிருக்கிறது.

பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வழங்கும் நோக்கத்திலும், பெண்களின் முன்னேற்றத்துக்கு ஒரு படிக்கல்லாகவும் இந்த தீர்ப்பு இருப்பதாக அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். 

'ஹிந்து வாரிசுரிமைச் சட்டம்' 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி, ஹிந்து கூட்டுக் குடும்பத்துக்குச் சொந்தமான பரம்பரை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமையுண்டு என்று கூறப்பட்டிருந்தது.

தொடர்ந்து பல ஆண்டு கால போராட்டத்துக்குப் பின்னர் 2005 ஆம் ஆண்டு ஹிந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், 'பரம்பரைச் சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உரிமை உள்ளது' என  மாற்றப்பட்டது.

அப்படியென்றால் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்த தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதா? என்ற கோணத்தில் தொடரப்பட்ட வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

'2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாக சொத்தின் உரிமையாளர் இறந்திருந்தாலும், பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு' என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது. 

'மகன் என்பவா் திருமணமாகி, மனைவி வரும் வரை மட்டுமே பெற்றோருக்கு மகனாக இருக்க முடியும். ஆனால், மகள் என்பவா் வாழ்நாள் முழுவதும் பெற்றோருக்கு மகளாக இருக்கிறாா்' என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

முன்னதாக, 2015-ஆம் ஆண்டு ஒரு வழக்கில், தந்தை உயிரோடு இருந்தால் மட்டுமேமகள்களுக்கு மட்டுமே பரம்பரை சொத்துகளைப் பெறும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

ஆனால், 90 ஆண்டுகளுக்கு முன்பே 'பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும்' என்று முழக்கமிட்டவர் பெரியார். பெண்ணுரிமை, பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என சமுதாயத்தில் பெண்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியார், 'அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு' என்றிருந்த காலத்தில்தான் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும்' என 1929 ஆம் ஆண்டிலேயே செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார். 'பெண்களுக்கு சொத்தில் சம பங்கு' என இந்தியாவிலேயே எதிரொலித்த முதல் குரல் அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். 

இதன் பின்னர், அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் 1950களில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்த சட்ட முன்வரைவைக் கொண்டுவந்தார். ஆனால், எதிர்ப்புகளுக்கு இடையே தோற்றுப்போனது.

இதன் பின்னரே, அண்ணாவுக்குப் பின் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் மு. கருணாநிதி, பெரியாரின் கனவை நிறைவேற்றும் விதமாக தமிழகத்தில், 1989-ல் ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தில்  திருத்தம் மேற்கொண்டு ' பெண்களுக்கும் சொத்துரிமை' என கொண்டு வந்தார். அந்தக் காலத்தில் இது ஒரு புரட்சிகரமான செயலாகவே பார்க்கப்பட்டது. 

சரி, தமிழகத்தில்தான் முதன்முதலில் 'பெண்களுக்கு சொத்துரிமை' என்ற சட்டம் கொண்டுவரப்பட்டதா? என்றால், இல்லை, அதற்கு முன்னரே கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்கள், தமிழகத்துக்கு முன்னோடியாக இருந்துள்ளன. 

கேரளத்தில் 1976 ஆம் ஆண்டு 'கேரள ஹிந்து கூட்டுக்குடும்ப (அழிப்பு) சட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன்படி, சொத்தில் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் உரிமை உண்டு என சட்டம் கூறியது. அப்போது அச்சுத மேனன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதன் தொடர்ச்சியாக, ஆந்திரத்தில் 1985 ஆம் ஆண்டு, என்.டி. ராமாராவ் தலைமையிலான அரசும், தொடர்ந்து இந்தியாவில் மூன்றாவது மாநிலமாக கருணாநிதி தலைமையிலான அரசு 1989 ஆம் ஆண்டும் இச்சட்டத்தில் திருத்தம் செய்தது. 

இதன் பின்னரும் 1994 ஆம் ஆண்டிலிருந்து மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் பெண்கள் சொத்துரிமை பெற்றனர். இவற்றைத் தவிர, மற்ற மாநிலங்களில் எல்லாம் மத்திய அரசின் ஹிந்து வாரிசுரிமைச் சட்ட விதிமுறைகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. 

மிட்டக்சரா சட்டத்தை ரத்து செய்ய பரிந்துரைத்த ஹிந்து சட்டக்குழு மற்றும் ராவ் கமிட்டியின் பரிந்துரைகளே மாநிலங்களின் சட்டதிருத்தத்திற்கு காரணமாகக் கூறப்படுகிறது.  

எனினும், பெண்களுக்கான சொத்துரிமை விவகாரத்தில் மேற்கு வங்கம், அசாம் ஆகிய இரு மாநிலங்கள் விதிவிலக்காக உள்ளன. எப்படியென்றால், ஹிந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகள் உள்ளன. அதில், மிட்டக்சரா (MITAKSARA), சட்டத்தின்படி, ஒரு குடும்பத்திலுள்ள ஆண் வாரிசுகள் மட்டுமே பரம்பரைச் சொத்தில் உரிமையுள்ளவர்கள். தயாபாகா சட்டம் (DAYABHAGA) - பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு என்று கூறுகிறது. இதில், மற்ற மாநிலங்கள் மிட்டக்சரா முறையை பின்பற்ற, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் தயாபாகா முறையைப் பின்பற்றி வருகின்றன. 

இந்திய அரசியலமைப்பு ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளை வழங்குகிறது. ஆனால், இன்றும் படித்த மக்களிடம்கூட ஆண்,  பெண் பாகுபாடு பார்க்கப்படுகிறது. 

சொத்துரிமை குறித்து சட்டத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தாலும், மதம் மற்றும் சமூகத்தின் அடிப்படையில் பெண்களுக்கான சொத்துரிமைகள் மாறுபட்டுள்ளன. 

இருந்த போதிலும், இத்தனை ஆண்டுகளாக தந்தையின் சொத்தில் பெண்கள் உரிமை கொண்டாட முடியாத சூழல் இருந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பெண்களுக்கு சம உரிமை வழங்குவதை வலியுறுத்துவதாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

உச்ச நீதிமன்றம் இப்போது தீர்ப்பு வாங்கியிருந்தாலும், 45 ஆண்டுகளுக்கு முன்னரே மாநிலங்களில் இதுகுறித்த சீர்திருத்தங்கள் வர ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், சில அரசியல் தலைவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு வழிகாட்டிய முன்னோடிகளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com