விவசாய நிதியுதவித் திட்டத்திலும் முறைகேடு என்றால் விவசாயிகளின் நிலை என்ன?

கரோனா அச்சத்திலும் விவசாயிகள் அல்லாத 78 ஆயிரம் பேரை இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பது வேதனையாக உள்ளது. 
விவசாய நிதியுதவித் திட்டத்திலும் முறைகேடு என்றால் விவசாயிகளின் நிலை என்ன?

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரதமரின் விவசாய நிதியுதவி (பி.எம். கிசான் சம்மான்) திட்டத்தில் முறைகேடு நடப்பதாக வெளியான புகாரை அடுத்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பிரதமரின் விவசாய நிதியுதவி (பி.எம். கிசான் சம்மான்) திட்டம் 2018-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி 3 தவணைகளாக 4 மாதங்களுக்கு ஒரு முறை விவசாயிகளின் வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் பயனை பெறுவதற்கு விவசாயிகள் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா-சிட்டா சான்றிதழ், ஆதார் எண், வங்கி கணக்கு எண்ணை பெற்றுக்கொண்டு வேளாண் அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர். பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன்பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது பயனாளிகளை மாவட்ட ஆட்சியரால் மட்டுமே பட்டியலில் இணைக்க முடியும் என்ற நிலை இருந்தது. அவருக்கு மட்டுமே அதற்கான கடவுச்சொல் வழங்கப்பட்டது. அதை வேளாண்மைத் துறையினா் பெற்று பதிவேற்றம் செய்வதில் சிரமம் இருந்த நிலையில், வேளாண் இணை இயக்குநருக்கும் அந்த அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட்டது. பின்னா், அவரிடமிருந்து வட்டார அளவிலான வேளாண் அலுவலா்களுக்கு அதிகாரம் பகிரப்பட்டது.   

இந்நிலையில், கடலூா் மாவட்டம் பிள்ளையார் மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாதோரின் வங்கி கணக்கில் ரூ.4 ஆயிரம் செலுத்தப்பட்டது.  இந்தத் திட்டத்தில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து நிதி உதவி வரப்பெற்றதாகப் புகாா் எழுந்தது. இந்த நிதியுதவியை தாங்கள்தான் பெற்றுத் தந்ததாகக் கூறி, தனக்கு ரூ.1000 கமிஷனாக கொடுக்கும்படி விவசாயிகளை அணுகியதால் சா்ச்சை எழுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் கடவுச்சொல் திருடப்பட்டு மோசடி நடைபெற்றதும் அம்பலமாகியுள்ளது.  

கடலூா் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 1.79 லட்சம் போ் இணைந்துள்ளனா். இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதுவும், வேளாண்மை துறை அனுமதியோடு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இவா்களில் 78 ஆயிரம் போ் கரோனா காலத்தில் இணைந்துள்ளனா். இவா்களில் சுமாா் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போலியானவா்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இதுகுறித்த விசாரணைக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் பிறப்பித்த உத்தரவின்பேரில், வேளாண் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். 

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிகயளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை உள்பட 13 மாவட்ட ஆட்சியா்கள், வேளாண்மைத் துறையினருடன் தமிழக அரசின் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலா் ககன்தீப்சிங் பேடி வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தாா். 

இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் நிலத்திற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலும் அதனை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் தான் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் பணமானது செலுத்தப்படும். ஆனால் கடலூரில் விவசாயிகள் அல்லாதோரின்  500க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கில் தற்போது ரூ.4,000 செலுத்தப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பிரதமரின் விவசாய நிதியுதவி (பி.எம். கிசான் சம்மான்) திட்டத்தில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பின்னா் இந்தத் திட்டத்தில் சோ்ந்தவா்கள் குறித்து வருவாய்த் துறையினா், வேளாண்மைத் துறையினா் இணைந்து விசாரணை நடத்தி உண்மையான பயனாளிகளை அடையாளம் காணவும்; தவறானவா்களை இந்தத் திட்டத்தில் இணைத்த கணினி மையத்தினா் அல்லது தனி நபா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலூா் மாவட்டத்தில் சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கரோனா அச்சத்திலும் விவசாயிகள் அல்லாத 78 ஆயிரம் பேரை இந்த திட்டத்தில் இணைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டிருப்பது வேதனையாக உள்ளது. 

நாளுக்கு நாள் வேதனையில் வெந்து தவிக்கும் விவசாயிகளுக்கான சிறு உதவிக்கான திட்டத்திலும் கொள்ளை என்றால் விவசாயிகளின் நிலை என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com