பாரம்பரிய முறையில் நவீன உத்தி: விவசாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் முதுகலைப் பட்டதாரி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விரும்பி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் முதுகலை பட்டதாரி ஒருவர், பாரம்பரிய முறையில் நவீன உக்திகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார். 
வயலுக்கு நடுவே உணவு உண்ணும் உழவன் இரா.முருகன்.
வயலுக்கு நடுவே உணவு உண்ணும் உழவன் இரா.முருகன்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே விரும்பி விவசாயத்தில் ஈடுபட்டு வரும் முதுகலை பட்டதாரி ஒருவர், பாரம்பரிய முறையில் நவீன உக்திகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதில் ஆர்வம்காட்டி வருகிறார். 

விவசாயம், காடு வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்தும் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்களிலும், பல்வேறு தரப்பினரிடையேயும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உலகம் முழுவதும் பசி பட்டினியின்றி மக்கள் நிம்மதியாக நிலைத்து வாழ்வதற்கு, விவசாயிகளின் தொடர் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்களின் உற்பத்தி முக்கிய காரணமென்றால் இது மிகையல்ல. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது, விவசாயிகளின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் பழமொழிகளின் ஒன்றாகும்.

இதனை பெருமளவில் தற்கால சமூகம் புரிந்து கொண்டதால் விவசாயம் செய்பவர்களை ஏளமான பேசிய நிலை மாறி, வணங்கி போற்றி புகழ்ந்து பேசும் அளவிற்கு சமூகத்தில் விவசாயிகளின் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால், சமீப காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், முதுகலை பட்டதாரிகளும், அதீத நாட்டத்தோடு விவசாயத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

இந்த வரிசையில், வாழப்பாடி அடுத்த மாரியம்மன்புதுார் கிராமத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி உழவன் இரா. முருகன் 45 குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளார்.

வரலாற்றுத்துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், இப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வருவதால், தொடர்ந்து இரண்டாவது முறையாக வாழப்பாடி ஒன்றியக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வட்டார காய்கறி உற்பத்தி விவசாயிகள் சங்க தலைவராகவும், வனத்துறையினர் கிராம வனக்குழு தலைவராகவும், கிராம கல்விக்குழு தலைவராகவும் தொடர்ந்து பதவி வகித்து வருகிறார்.

மாரியம்மன்புதுார் கிராமத்தில் தனக்கு சொந்தமான பூர்வீக நிலத்தில் மட்டுமின்றி, குத்தகைக்கு நிலமெடுத்தும் பல்வேறு நாட்டுகர காய்கறிகளை, பாரம்பரிய முறையோடு, நிலப்போர்வை, சொட்டுநீர்பாசனம், கம்பி பந்தல், உள்ளிட்ட நவீன  உத்திகளை பயன்படுத்தி பயிரிட்டு சாகுபடி செய்து வருகிறார்.

சிறுவர்களுடன் மரக்கன்றுகளை நடும் உழவன் இரா.முருகன்.

விவசாயத்தின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால் தனது பெயரை 'உழவன்' இரா.முருகன் என மாற்றிக் கொண்டார். இவரது மனைவி கஸ்துாரியும் இவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

இத்தம்பதியரின் மகன்கள் நவீன், கவீன், பிரவீன் ஆகியோரும், விடுமுறை நாட்களில் தந்தையின் வழிகாட்டுதலின்படி விவசாய பணிகளை ஆர்வத்தோடு மேற்கொண்டு வருகின்றனர்.

உழவன் இரா. முருகன், விவசாயம் மட்டுமின்றி, அரசு காடு வளர்ப்புத் திட்டத்தை தனது கிராமத்தில் தொடங்கி, வனப்பகுதியில் காடு வளர்ப்பதிலும், மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதிலும், வனவிலங்குகளை பாதுகாப்பதிலும், வனத்துறையுடன் இணைந்து செயலாற்றி வருகிறார். கிராமங்களில் புகும் வனவிலங்குகளை மீட்டு வனப்பகுதியில் சேர்த்து வரும் இவர், விவசாயம், காடு வளர்ப்பு மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து, சமூக வலைதளங்களில் தற்கால சந்ததியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்களிலும், பல்வேறு தரப்பினரிடையேயும் வரவேற்பும் பாராட்டும் குவிந்து வருகிறது.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் உழவன் இரா. முருகன் கூறியதாவது:
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். சேலம் அரசு கலைக்கல்லுாரியில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றேன். எனது தந்தைக்கு பிறகு எனக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்ட பூர்வீக நிலத்தில் மட்டுமின்றி, குத்தகைக்கு நிலம் பிடித்தும் விவசாயம் செய்து வருகிறேன். வருவாய் மிக குறைவாகவே கிடைத்தாலும், சில நேரங்களில் உற்பத்தி செலவுக்கே உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டாலும் கூட,  மற்றவர்களின் பசியை போக்க உணவு உற்பத்தி செய்து கொடுப்பதாக மனதிற்குள் தோன்று உணர்வு, விவசாயத்தை கைவிடாமல் தொடரச் செய்து விடுகிறது.

எனது குழந்தைகள் மட்டுமின்றி உறவினர்கள் நண்பர்களின் வீட்டு குழந்தைகளுக்கும் விவசாயம், காடு வளர்ப்பு மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வருகிறேன். எனது பெயரை ‘உழவன்’ இரா.முருகன் என மாற்றிக்கொண்டேன். விவசாயம் செய்வதினால் பொருளாதார ரீதியாக இலக்கை  அடைய முடியாவிட்டாலும் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளதில் தனி சுகம் கிடைப்பது உண்மை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com