தாக்குப்பிடிக்க முடியாததால்தான் தளர்வுகள்; இயல்பு நிலை திரும்பவில்லை, எச்சரிக்கை!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத் தளர்வுகள் யாவும். நாட்டில் கரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பதால் அல்ல,  பொருளாதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதால் மட்டுமே...
எச்சரிக்கை, கரோனா ஓய்ந்துவிடவில்லை...
எச்சரிக்கை, கரோனா ஓய்ந்துவிடவில்லை...

மத்திய, மாநில அரசுகளால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத் தளர்வுகள் யாவும். நாட்டில் கரோனா ஒழிந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது என்பதால் அல்ல,  பொருளாதார ரீதியில் நாடாலும் மக்களாலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதால் மட்டுமே.

ஆனால், கரோனா நோய்த் தொற்றுப் பரவலும் அதன் தீவிரமும் சற்றும் குறையவில்லை, அப்படியேதான் இருக்கிறது. இன்னமும் சொல்லப்போனால் முன்பைவிட மோசமாகவும் இருக்கிறது.

இவற்றை உறுதிசெய்ய ஒவ்வொரு நாளும் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் வெளியிடப்படும் கரோனா பாதிப்பு பற்றிய புள்ளிவிவரங்களே போதுமானவை.

நாட்டில் தொடக்கத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை முதல் ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 110 நாள்கள் ஆனது. அடுத்த 59 நாள்களிலேயே 10 லட்சமாக உயர்ந்துவிட்டது. 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக அதிகரிப்பதற்கு 21 நாள்கள் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்த 16 நாள்களில் 30 லட்சமாகிவிட்டது. தொடர்ந்த ஒரு வாரம், பத்து நாள்களில், இன்று திங்கள்கிழமை 36 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் 78,761 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. இந்தியாவில் இதுவரையில் இதுவே மிக அதிக அளவு.

மிக அதிக அளவில் கரோனா பாதிக்கப்படும் நாடாக மாறிக் கொண்டிருக்கிறது இந்தியா. தொடர்ந்து, ஐந்தாவது நாளாக 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் வேறுவழியுமில்லாமல் பொது முடக்கத் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு அதிக அளவிலான தொற்றாளர்கள் கண்டறியப்படுவதற்கு அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதும்கூட ஒரு காரணம் எனலாம். இரு மாதங்களுக்கு முன் ஒரு நாளில் 2 லட்சம் பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டன. ஆனால், தற்போது ஏறத்தாழ 10 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும், இந்தியாவைப் பொருத்தவரை நம்பிக்கையளிக்கும் ஒரு விஷயம், குணமடைவோரின் எண்ணிக்கை - 76.62 சதவிகிதம் பேர் குணம் பெற்றுள்ளனர்.

எனினும், இதே போக்கு தொடரும்பட்சத்தில் நோய்த் தொற்றும் உயிரிழப்புகளும் அதிகரிக்கவே செய்யும்.

நாட்டில் தற்போது ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பேர் வரை உயிரிழந்துகொண்டிருக்கின்றனர். இதுவரையில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எந்த இடத்திலும் கரோனா பாதிப்பு குறைவதற்கான வழிவகையே தென்படவில்லை. இன்றைய அறிவியல் ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட சோதிட ஆய்வாளர்கள் சொல்வதைப் போல, ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின்னால் தானாகக் குறைந்தால் மட்டுமே நோய்த் தொற்றுப் பரவல் குறையும் போல.

இந்த நிலையில்தான், இன்னொரு பக்கம் மிக மோசமாகச் சரிந்துகொண்டிருக்கும் பொருளாதார நிலைமையைச் சமாளிக்கவும் அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படும் மக்களைக் காக்கவும் எனப் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கரோனாவுடன் இணைந்தே வாழ வேண்டிய கட்டாயம் உணரப்பட்டுள்ள நிலையில், மக்கள்தான் எச்சரிக்கையாகத் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எனவே மக்கள், கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான எல்லாவிதமான முன்னெச்சரிக்கைகளுடன் நடந்துகொள்வது மட்டுமே பாதுகாப்பானது.

பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுவிட்டதால், மால்கள், கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டதால் மட்டுமே இயல்பு நிலை திரும்பிவிட்டதாகப் பொருளில்லை. இனியும் வேறு வழியில்லை என்பதால் மட்டுமே இந்த முடிவுகள்.

இக்கட்டான இந்தத் தருணத்தில் ஓரளவு காப்பாற்றக் கூடியவை முகக் கவசம், கைச் சுத்தம், சமூக இடைவெளி ஆகியவை மட்டுமே, இந்த மூன்றையும் கவனமாகக் கடைப்பிடிக்காவிட்டால் வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போலதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com