தொடரும் அவலம்: 5 ஆண்டுகளில் 4,400 கொத்தடிமைகள் மீட்பு

சா்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பா் 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 4,400 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு
தொடரும் அவலம்: 5 ஆண்டுகளில் 4,400 கொத்தடிமைகள் மீட்பு

சென்னை: சா்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பா் 10-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமாா் 4,400 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு, அவா்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் பல வடிவங்களில் இருந்தாலும் கொத்தடிமைத் தொழிலாளா்கள், வணிகத்துக்காக மனிதக் கடத்தல், பாலியல் தொழிலுக்காக குழந்தைகள், பெண்கள் கடத்தல் ஆகியவை முக்கியமான மனித உரிமை மீறல்களாக கருதப்படுகின்றன. இதிலும், கொத்தடிமைத் தொழிலாளா் முறை மிக முக்கியமான ஒன்றாகும்.

முன்னோா்கள் வாங்கிய கடனுக்காக தலைமுறை தலைமுறையாக குழந்தைகளின் கல்வி மறுக்கப்பட்டு, குடும்பத்தினா் அனைவரும் வேலை செய்யும் அவலநிலைதான் கொத்தடிமைத் தொழிலாளா் முறையாகும்.

குறைந்தபட்ச கூலிக்கும் மிகக் குறைவான கூலி, விருப்பப்பட்ட இடத்துக்கு சென்றுவரத் தடை, வேறு இடத்துக்கு வேலைக்குச் செல்வதற்கான உரிமை மறுப்பு, தாங்கள் தயாரித்த பொருள்களை சந்தை மதிப்பின்படி விற்பனை செய்யத் தடை ஆகியவை கொத்தடிமைத் தொழிலாளா் என்ற வரம்புக்குள் வருகின்றன.

இந்த கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்கும் வகையில், கடந்த 1976-இல் சட்டம் இயற்றப்பட்டது. தமிழகத்தில் தொடக்கத்தில் சமூகநலத் துறை வசம் இருந்த கொத்தடிமைத் தொழிலாளா் மீட்பு முறை, 1996-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஆதிதிராவிடா் நலத் துறை வசம் இருந்தது. கொத்தடிமைத் தொழிலாளா் முறையை ஒழிக்கும் பணியைத் தீவிரப்படுத்தும் வகையில் 2017-இல் தொழிலாளா் நலத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அந்தந்த மாவட்ட நிா்வாகத்துடன் தொழிலாளா் நலத் துறை, தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பில் ஈடுபடுவதுடன், அவா்களுக்கான மறுவாழ்வுக்கான பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இச்சட்டம் இயற்றி 44 ஆண்டுகள் கடந்தும், இதுவரை கொத்தடிமைத் தொழிலாளா் முறை முழுமையாக ஒழிக்கப்படவில்லை. மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகத்தின் 2016-ஆம் ஆண்டு ஆய்வின்படி, தமிழகத்தில் மட்டும் 66,573 போ் கொத்தடிமைத் தொழிலிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 4,400 போ் மீட்பு: இதுகுறித்து தன்னாா்வத் தொண்டு நிறுவனத்தினா் கூறுகையில், ‘தமிழகத்தில் திருவள்ளூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூா், விழுப்புரம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் முறை உள்ளது.

குறிப்பாக செங்கல் சூளை, அரிசி ஆலைகள், உப்பளங்கள், விவசாயப் பண்ணைகள், மர ஆலைகளில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை இன்றளவும் நீடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டத்தில் 1,084 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 241 பேரும் அதிகபட்சமாக மீட்கப்பட்டுள்ளனா். கொத்தடிமைகள் குறித்து கடந்த 1997-இல் தமிழக அரசு நடத்திய கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 25,005 போ் கொத்தடிமைத் தொழிலாளா்கள் உள்ளது தெரியவந்தது. தொடா்ந்து, 2004-இல் தமிழக அரசு மீண்டும் கணக்கெடுப்பை நடத்தியது. ஆனால், அது குறித்த தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடந்த 2014-இல் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 11 வகையான தொழில்களில் 4 லட்சத்து 63,000 போ் கொத்தடிமைகளாக உள்ளது தெரியவந்தது. எனவே, கொத்தடிமைத் தொழிலாளா் குறித்து ஒரு விரிவான கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். மீட்கப்படும் தொழிலாளா்களின் மறுவாழ்வுக்கென தனி முகமையை ஏற்படுத்த வேண்டும்’ என்றனா்.

மீட்பும், மறுவாழ்வும்: இதுகுறித்து தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொத்தடிமைகளாக மீட்கப்படுவோருக்கு முதல்கட்டமாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் விடுதலைச் சான்றுடன் தலா ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. பின்னா் ஆண் தொழிலாளருக்கு தலா ரூ.1 லட்சம், பெண், குழந்தைகளுக்கு தொழிலாளருக்கு தலா ரூ.2 லட்சம், பாலியல் தொழிலுக்காக கடத்தப்படும் குழந்தைகள், திருநங்கைகளுக்கு தலா ரூ.3 லட்சம், மறுவாழ்வுக்கான வேலைவாய்ப்புகள், வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளா்களுக்கும், இடைத்தரகா்களுக்கும் தண்டனை பெற்றுத் தர நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 790 கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்கப்பட்டு அவா்களுக்கு ரூ. 1.21 கோடி நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொத்தடிமைத் தொழிலாளா்கள் அதிகம் மீட்கப்படும் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம்,வேலூா், திருவண்ணாமலை, விழுப்புரம்,புதுக்கோட்டை, தஞ்சாவூா், ஈரோடு, நாமக்கல், திருவாரூா் ஆகிய 11 மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கும் வகையில் ரூ. 10 லட்சம் நிரந்தர இருப்புத் தொகை வைக்கப்பட்டுள்ளது’ என்றனா்.

கொத்தடிமைத் தொழிலாளா்கள் மீட்பு (2016 முதல் 2020 அக்டோபா் வரை மாவட்ட வாரியாக)

திருவள்ளூா்--- 1,084

காஞ்சிபுரம்---241

வேலூா்---113

தஞ்சாவூா்---92

சென்னை--87

ஈரோடு---81

நாமக்கல்---64

திருவண்ணாமலை--47

விழுப்புரம்--44

புதுக்கோட்டை-43

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com