இடிந்து விழும் நிலையில் சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையம்:  கர்ப்பிணிப் பெண்கள் அச்சம்

சீர்காழி நகராட்சி பள்ளியில் இயங்கும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் வர அச்சப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்திடவும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்...
சீர்காழி ஈசானியத்தெருவில் உள்ள நகர ஆரம்ப சுகாதாரநிலையம் சிதிலமடைந்த கட்டிடம்.
சீர்காழி ஈசானியத்தெருவில் உள்ள நகர ஆரம்ப சுகாதாரநிலையம் சிதிலமடைந்த கட்டிடம்.


சீர்காழி: சீர்காழி நகராட்சி பள்ளியில் இயங்கும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் வர அச்சப்படுவதால் மாற்று ஏற்பாடு செய்திடவும், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். 

சீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 40 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவபரிசோதனைகளுக்கும், சிகிச்சைப் பெறவும் வந்து செல்கின்றனர். இங்கு சர்க்கரை வியாதி, இரத்த கொதிப்பு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் வாரந்தோறும் செவ்வாய்கிழமை கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி,மருந்து-மாத்திரைகளும், புதன்கிழமை பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 1மருத்துவ அலுவலர், 3 செவிலியர்கள் மற்றும் 1 லேப்டெக்னீசியன்கள், 1மருந்தாளுனர்,1பணியாளர் பணியாற்றுகின்றனர். 

சீர்காழி ஊழியக்காரன்தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் செயல்படும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம்.

இந்த சுகாதாரநிலையத்தால் நகர் பகுதி மற்றும் மிக அருகில் உள்ள கிராமமக்கள் பயனடைந்துவருகின்றனர். 

இந்நிலையில், சுகாதாரநிலையம் கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. மேற்கூறையின் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் நிலையில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தின் மேல் உள்ள பகுதி மிகுந்த ஆபத்தான நிலையில் உள்ளதால் அங்கு பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த அச்சமடைகின்றனர். 

சுகாதார நிலையத்தின் பின்புறம்,பக்கவாட்டில் கழிவுநீர் தேங்கியும் சுகாதாரசீர்கேடான நிலை தொடர்கிறது. இதனிடையே சீர்காழி பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மழைநீர் கசிந்து மருந்து,மாத்திரைகள் நனைந்து சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடம் மேலும் வலுவிழந்து உள்ளதால் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் நலன் கருதி ஏதேனும் உயிர் ஆபத்து ஏற்படாமல் இருக்க சுகாதார நிலையத்தினை கடந்த 20 நாள்களுக்கு மேலாக சீர்காழி ஊழியக்காரன்தோப்பு பகுதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு மாற்றியுள்ளனர். 

பள்ளியில் இயங்கும் சுகாதாரநிலையத்தில் வழக்கமான மருத்துவபணிகளை மருத்துவர்கள்,செவிலியர்கள் மேற்கொள்கின்றனர். இருந்தபோதும் நீண்ட நாள்கள் பள்ளியிலேயே மருத்துவமனையை தொடர முடியாததாலும் மீண்டும் பழைய கட்டிடத்திற்கு போகவேண்டி உள்ளதால் மருத்துவர்கள் அச்சமடைந்து வருகின்றனர். 

சீர்காழி ஊழியக்காரன்தோப்பில் உள்ள நகராட்சி பள்ளியில் செயல்படும் நகர ஆரம்ப சுகாதாரநிலையம்.

கடந்த ஆண்டே இந்த சுகாதாரநிலையத்தில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பு,சேதம் ஏற்பட்டபோதே வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் புதிய கட்டிடம் கட்ட ஆய்வு மேற்கொண்டபோது, தற்போது சுகாதாரநிலையம் இயங்கும் இடம் குளம்,புறம்போக்கு என்பதால்,அங்கு புதிய கட்டிடம் கட்ட இயலாது எனவும் அதற்கு மாற்றாக அருகில் உள்ள காமராஜர் அவென்யு நகரில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டலாம் என மாற்று இடம் பார்க்கப்பட்டது. 

ஆனால் பூங்கா இடத்தில் கட்டிடம் கட்ட விதிமுறை இல்லை என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதோடு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையும் மறந்துபோனது. தற்போது மீண்டும் கனமழையால் மேலும் மாற்று இடத்தில் இயங்கும் சுகாதாரநிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்ற மிக அவசியமான கோரிக்கை வலுத்துவருகிறது. 

சீர்காழியில் தருமபுரம் ஆதினத்திற்கு உள்பட்ட கோவில் இடத்தில் ஏதேனும் ஒன்றை வருவாய்த்துறை,நகராட்சி நிர்வாகம் விலைகொடுத்தோ, தானமாக பெற்றோ அங்கு புதிய கட்டிடம் கட்ட முழுமுயற்சி மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com