எம்.ஜி.ஆர். யாருக்குச் சொந்தம்?

எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் வாக்குகள் விழும் என்ற எண்ணம், அவர் பெயரைப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு உள்ளது. கால வெள்ளத்தால் தேர்தல் களத்திலும் அழிக்க முடியாத சக்தியாக எம்.ஜி.ஆர். இருக்கிறார் என்பத
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்



எம்..ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் உத்தியை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் சூழல், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் உருவாகியுள்ளதை முன்கூட்டியே தேர்தல் களம் உணர்த்தி வருகிறது.

மேடை நாடகங்கள் தொடங்கி, திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்து, மக்கள் மனதில் குடிகொண்டவர் எம்.ஜி.ஆர். அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான நட்புடன் இருந்த அவர்,  திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே அடிப்படை உறுப்பினராகவும், திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் முக்கிய உந்து சக்தியாகவும் திகழ்ந்தார்.

கடந்த 1957-இல் திமுக பெற்ற 15 சதவீத வாக்கு வங்கியில் எம்.ஜி.ஆரின் பங்கு கணிசமாக இருந்ததை யாராலும் மறுக்க இயலாது. கடந்த 1964-இல் திமுகவுக்கு கிடைத்த ஒரே எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்து, "காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி' என திமுகவில் அண்ணாவுக்கு எதிராகவே அதிகார அரசியல்  செய்யும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தவர்தான் எம்.ஜி.ஆர்.

1967-இல் முதல்வர் வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தபோது கொள்கை முரண்களுடன் கூடிய திமுக கூட்டணியின் வெற்றிக்கும், வாக்கு வங்கி 40 சதவீதமாக உயர்ந்ததற்கும் எம்.ஜி.ஆர். குண்டடிபட்ட காட்சியே முதன்மையாக இருந்தது.

எனவேதான், அமைச்சரவைக்குள் இடம் கொடுக்க முடியாமல் போனபோதுகூட, அமைச்சர் பதவிக்கு இணையான மாநில சிறு சேமிப்புத் திட்ட  துணைத் தலைவர் பதவியை எம்.ஜி.ஆருக்கு வழங்கினார் அண்ணா. 1969-இல் அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி முதல்வராக பக்கபலமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்தான். திமுகவின் பொருளாளராகப் பொறுப்பேற்று, இரண்டாவது பெரிய சக்தியாக உருவெடுத்தார் எம்.ஜி.ஆர்.

1972-இல் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அதிமுகவை உருவாக்கி, தமிழகத்துக்கு முன்பாகவே புதுவையில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தார். தமிழகத்தில் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆரின் ஈர்ப்பு சக்தி இருந்தது.

1977 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியில் 30.3 சதவீத வாக்கு வங்கியைப் பெற்று தமிழத்தின் முதன்மையான அரசியல் சக்தியாக உருவெடுத்தார். 1979-இல் பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில் பதவி கிடைத்தபோது, திமுகவின் தலித் முகமாக இருந்து முரண்பட்டு வெளியேறிய சத்தியவாணி முத்துவுக்கு அந்தப் பதவியைக் கொடுத்தது, 1980 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தலித் முகமான ஜெகஜீவன் ராமை முன்னிலைப்படுத்திய எம்.ஜி.ஆரின் ராஜதந்திர நடவடிக்கைகள் தமிழகத்தில் கிட்டதட்ட 23 சதவீதத்துக்கு மேலிருக்கும் தலித் வாக்கு வங்கியை அதிமுக வசமே தொடர்ந்து தக்கவைக்க உதவியது.

1983-இல் திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக பொதுப் பிரிவில் இருந்த கிறிஸ்தவ நாடார்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றிய மற்றொரு ராஜதந்திர நடவடிக்கை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தியது.

1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றதால், எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபோது, பலமான காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து 38.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார் எம்.ஜி.ஆர்.

ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் சமூக நீதிக் கொள்கையில் உறுதியான கொள்கையுடன் இருப்பவர் எம்.ஜி.ஆர். என்ற நம்பிக்கையைத் தக்கவைக்க, இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகளே சாட்சியாக  இருந்தன. பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கிய எம்.ஜி.ஆர்.தான், 31 சதவீதமாக இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தின் சமூக நீதிக் கொள்கையின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்.

கட்சியின் மூத்த தலைவர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் ஆலோசனையின்படி, பரம்பரை கிராம நிர்வாக அலுவலர்கள் முறையை (கிராம முன்சீப்) ஒழித்து, 10 ஆயிரம் படித்த இளைஞர்கள், அதிலும் குறிப்பாக, 2 ஆயிரம் தலித் இளைஞர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக உருவாக்கியது எம்.ஜி.ஆரின் சமூக நீதிப் பார்வைக்கு மிகச் சிறந்த உதாரணம்.

இலவச மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தியது, பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பொடி, செருப்பு வழங்கியது, மிதிவண்டிகளில் இருவர் பயணம் செய்ய அனுமதியளித்தது உள்ளிட்டவை ஏழைகளுக்காகவே எம்.ஜி.ஆர். ஆட்சியை நடத்தினார் என்பதை பறைசாற்றும் ஆவணங்களாக தற்போதும் காட்சியளிக்கின்றன.

முதல்முறையாக அதிமுக அல்லாத வேறொரு கட்சித் தலைவர் ஒருவர், எம்.ஜி.ஆர். பெயரை தேர்தல் களத்தில் பயன்படுத்தியது கருணாநிதிதான். 1984 தேர்தல் பிரசாரத்தின் போது, "எனது நண்பர் எம்.ஜி.ஆர். குணமடைந்து வந்ததும் ஆட்சியை ஒப்படைத்துவிடுவேன். எனவே, எனக்கு வாக்களியுங்கள்' என கருணாநிதி சொன்னபோதுகூட, எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை. அப்போது, அமெரிக்காவில் இருந்தபடியே நேரடி பிரசாரம் செய்யாமல் முதல்வராகி சாதனை படைத்தார் எம்.ஜி.ஆர்.

இருந்தாலும், எம்.ஜி.ஆர். எனது நண்பர் என்ற உணர்வுபூர்வமான தனது முழக்கத்தை உச்சரிப்பதை தனது இறுதிக் காலம் வரை கருணாநிதி தவறியதில்லை. தொடர்ந்து, மூன்று முறை முதல்வராகப் பதவி வகித்த எம்.ஜி.ஆர். 24.12.1987-இல் மறைந்த பிறகு, எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார் என்ற போட்டியில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் தாங்கள்தான் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு என களம் கண்ட ஜெயலலிதா சேவல் சின்னத்தில் 22.3 சதவீத வாக்குகளையும், எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என்.ஜானகி 9.1 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

இதையடுத்து, அரசியல் களத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, அரசியலிலிருந்து வி.என்.ஜானகி ஓய்வு பெற்றதால், 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இரட்டை இலைச் சின்னத்தை ஜெயலலிதா பெற்று, எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாக உருவெடுத்தார்.

இருப்பினும், 1991 தேர்தலில் சுயேச்சைகளாக களம் இறங்கி எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனி, சாத்தூரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் ஆகியோர் வெற்றி பெற்றாலும், எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாக உருவெடுத்த ஜெயலலிதாவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, அதிமுகவுடன் முரண்பட்ட மூத்தத் தலைவர்கள் எஸ்.டி.சோமசுந்தரம், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர், சு.முத்துசாமி உள்ளிட்ட சிலர், எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்தி, மாற்று அரசியல் இயக்கங்களைக் கண்ட போதும், ஜெயலிதாவுக்கு எதிரான அவர்களின் அரசியல் எடுபடவில்லை.

எம்.ஜி.ஆரின் கலையுக வாரிசு என அழைக்கப்பட்ட நடிகர் பாக்கியராஜ், எம்.ஜி.ஆருடன் எப்போதும் முரண்பட்டிருந்த  டி.ராஜேந்தர் போன்றவர்கள்கூட, அவரது பெயரைப் பயன்படுத்தியும் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். போலவே மிகவும் துணிச்சலான முடிவு, ஈகை குணம் கொண்ட விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் "கருப்பு எம்.ஜி.ஆர்.' எனக்கூறி, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை தேர்தல் முடிவுகள், புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகள், வட தமிழகத்திலும் அதிமுக பின்னடைவைச் சந்திக்க விஜயகாந்தின் கருப்பு எம்.ஜி.ஆர். முழக்கம் முக்கியப் பங்கு வகித்தது.
2006 முதல் 2011 வரை நடைபெற்ற இடைத்தேர்தல்களிலும் விஜயகாந்தின் கருப்பு எம்.ஜி.ஆர். முழக்கம் அதிமுகவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

விஜயகாந்தின் கருப்பு எம்.ஜி.ஆர். முழக்கத்துக்கு  முற்றுப்புள்ளி வைக்க, ஒரே எம்.ஜி.ஆர்.தான், கருப்பு எம்.ஜி.ஆர். எல்லாம் கிடையாது என ஜெயலலிதா எதிர்வினையாற்றினார். இருந்தாலும், எம்.ஜி.ஆர். சக்திகள் இணைகிறோம் எனக் கூறி, கடந்த 2011-இல் அதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்ட பிறகுதான் கருப்பு எம்.ஜி.ஆர். முழக்கத்துக்கான வீரியம் குறைந்தது.

தற்போது மீண்டும் எம்.ஜி.ஆர். பெயரை மையப்படுத்தி, சொந்தம் கொண்டாடும் அரசியல் தலைதூக்கியுள்ளது. 2017-இல் கல்லூரி விழா ஒன்றில் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், "எம்.ஜி.ஆர். ஓர் அவதார புருஷர். அவரைப் போல ஆக முடியாது. ஆனால், அவரின் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்' என்று கூறி, அரசியல் பிரவேச அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.

தற்போது தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், நானும் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் எனக் கூறியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வேல் யாத்திரை நடத்திய பாஜககூட பிரசார வேனில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தைப் பயன்படுத்தியது. மேலும், யாத்திரை முடிவில் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான், "பாஜகவால் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வர முடியும்' என்றார்.

இவற்றையெல்லாம் பார்த்தால், வரவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் உத்திகளில் ஒன்றாக எம்.ஜி.ஆர். பெயர் மாறக்கூடும் என்பது தெளிவாகிறது. எம்.ஜி.ஆர். மறைந்து 33 ஆண்டுகளுக்கும் பிறகும், தேர்தல் களத்தில் அவரின் பெயரைப் பயன்படுத்த பகீரத முயற்சி தொடர்கிறது.

எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் வாக்குகள் விழும் என்ற எண்ணம், அவர் பெயரைப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு உள்ளது. கால வெள்ளத்தால் தேர்தல் களத்திலும் அழிக்க முடியாத சக்தியாக எம்.ஜி.ஆர். இருக்கிறார் என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசு யார் என்பதை கடந்த 1989 தேர்தலிலேயே ஜெயலலிதா நிரூபித்துவிட்டார். ஆயினும், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுவதற்கான போட்டி தற்போதும் தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com