தீபாவளி பலகாரங்களில் மவுசு குறையாத கைச்சுற்று முறுக்கு! பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு

தீபாவளிப் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பலகாரங்கள் தயாரிப்பு களைகட்டியுள்ளது. 
திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்
திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்

திருநெல்வேலி: தீபாவளிப் பண்டிகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பலகாரங்கள் தயாரிப்பு வெள்ளிக்கிழமை தீவிரமாக நடைபெற்றது. பேக்கரிகளில் புத்தம்புது இனிப்பு வகைகள் ஏராளமாக வந்தாலும், தீபாவளி பலகாரங்களில் கைச்சுற்று முறுக்குகள் தனித்தன்மை குறையாமல் விற்பனையாகி வருகின்றன. ஆனால், அதனைத் தயாரிக்கும் பணியாளர்களுக்குத் தட்டுப்பாடு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை சனிக்கிழமை (நவ. 14) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பலகாரங்களில் முறுக்கு தனியிடம் பிடிக்கிறது. தீபாவளிக்கு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை பெரும்பாலான வீடுகளில் முறுக்குகளே முதலில் செய்யப்படுகின்றன. பச்சரிசி முறுக்கு, புழுங்கல் அரிசி முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு, முள் (மகிழம்பு) முறுக்கு, நெய் முறுக்கு, வெண்ணெய் முறுக்கு, தாம்பூல முறுக்கு, ஜவ்வரிசி முறுக்கு, வாசனை முறுக்கு, வெந்தய முறுக்கு, கேப்பை முறுக்கு, தேங்காய்ப்பால் முறுக்கு என முறுக்குகளில் பல்வேறு வகைகள் உள்ளன. 

முள் முறுக்கு, தேன்குழல் முறுக்கு போன்றவை குழல்-அச்சு கொண்டு மட்டுமே தயாரிக்க முடியும். இதர முறுக்குகளை குழல்களில் மட்டுமன்றி கைகளால் வட்டமாகச் சுற்றி கைசுற்றல் முறுக்காகவும் தயாரிக்கிறார்கள்.

முந்திரிக்கொத்து எனப்படும் இனிப்பு வகை திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் அதிகம் விரும்பி உண்ணப்படுகிறது. கருப்புக்கட்டி, சிறுபயிறு, புழுங்கல் அரிசி உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்படும் இதனை குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் கொடுக்கலாம். அதிரசம், சோமாசி, தட்டை, சீடை போன்றவையும் தீபாவளிக்காக ஆர்டர்கள் பெற்று தயாரிக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு முந்தைய நாள்களாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் விடிய விடிய பலகாரங்கள் தயாரிப்பு திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில் களைகட்டியது.

        திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்   
        திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்   

ஆண்டு முழுவதும் உற்பத்தி

இதுகுறித்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த முறுக்கு தயாரிப்பாளர் தனலட்சுமி கூறியது:

பாளையங்கோட்டையில் திருமணம், சீமந்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முறுக்குகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆண்டு முழுவதும் முறுக்கு உற்பத்தி செய்கிறோம்.  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வீடுகளில் பல்வேறு பலகாரங்களையும் தீபாவளிக்காக செய்வார்கள். இப்போது கடைகளில் வாங்குவது அதிகரித்துள்ளது. மாவு அரவை ஆலைகள் குறைந்ததாலும், எண்ணெய் விலையேற்றம், இருபாலரும் பணிகளுக்குச் செல்லுதல் உள்ளிட்ட காரணங்களால் வீடுகளில் பலகாரங்கள் செய்வது மிகவும் குறைந்துள்ளது.

மேலும் இன்றைய தலைமுறையினர் பீட்சா, பர்கர் உள்பட மேற்கத்திய உணவு வகைகளை விரும்புவதால் பாரம்பரியம் கருதி பண்டிகைக் காலங்களில் மட்டும் பலகாரங்களை கடைகளில் வாங்குகிறார்கள்.

முறுக்கு, அதிரசம், முந்திரிக்கொத்து போன்றவை அதன் தரத்துக்கு ஏற்ப ரூ.5 முதல் 7 வரை விற்பனையாகின்றன. இதுதவிர உளுந்து வடை, கார வடை, ஆமை வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், உன்னியாப்பம், சுசியம் உள்ளிட்டவை ஒன்று ரூ.5 முதல் ரூ.8 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன. சீடை, தட்டை, மினிதட்டை போன்றவை கிலோ ரூ.180 முதல் விற்பனையாகின்றன. அதனால் நகர்ப்பகுதிகளில் வசிப்போர் பெரும்பாலும் கடைகளிலேயே தீபாவளி பலகாரங்களை வாங்குகிறார்கள் என்றார்.

  திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்   
  திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பெண்கள்   

பணியாளர்கள் தட்டுப்பாடு

அதேபோல திருநெல்வேலி சந்திப்பைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி ராஜா கூறியதாவது:

பச்சரிசி,  புழுங்கல் அரிசி,  உளுந்து, எள்ளு,  சீரகம்,  வனஸ்பதி ஆகியவை சேர்த்து முறுக்கு தயாரிக்கப்படுகிறது.  கைச்சுற்றல் முறுக்கை எல்லோராலும் தயாரிக்க முடிவதில்லை. அதற்கென பயிற்சி பெற்றவர்களே தயாரிக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கைச்சுற்றல் முறுக்கு தயாரிக்கத் தெரிந்தவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இத்தொழிலில் பெண்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். மாவு மற்றும் இதர பொருள்களை வழங்கினால் தீபாவளி பண்டியையொட்டி வீடுகளுக்கே வந்து கைச்சுற்றல் முறுக்கு தயாரித்துக் கொடுப்போரும் உள்ளனர்.  ஒரு கிலோ மாவில் 60 முறுக்குகள் தயாரிக்க முடியும். 

திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்வுகளுக்கும் இப்போது கைச்சுற்றல் முறுக்குகளே அதிகம் வாங்கப்படுகிறது. தீபாவளிக்காக பலரும் கைச்சுற்றல் முறுக்குகளை ஆர்டர் கொடுத்து செல்கிறார்கள். ஆனால், அதனை தயாரிக்கும் பணியாளர்கள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இத்தொழிலில் கைத்தேர்ந்தவர்களை பெரும் பணக்காரர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து தீபாவளி பலகாரம் செய்து தர அழைத்துச் செல்வதால் மொத்தமாக தயாரிக்கும் இடங்களில் பணியாளர்கள் வர மறுக்கிறார்கள். மேலும், பண்டிகை காலங்களில் கூடுதலாக கூலி கேட்கிறார்கள் என்றார். 


இயந்திரமயம்

திருநெல்வேலியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ஆண்டுதோறும் முறுக்கு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. பேக்கரிகள் புதிது புதிதாக இனிப்பு மற்றும் கார வகைகளை உற்பத்தி செய்தாலும் முறுக்கு தனித்துவமாக விற்பனையாகி வருகிறது. கைச்சுற்றல் முறுக்குக்கு போட்டியாக இப்போது முறுக்கு தயாரிப்பு இயந்திரங்களும் வந்துவிட்டன. கோவையில் இருந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பில் கொண்டு வரப்படும் இந்த இயந்திரத்தின் உதவியால் பூண்டு முறுக்கு, கார முறுக்கு, சீரக முறுக்கு என விதவிதமாக தயாரிக்கப்படுகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com