வாழப்பாடி பகுதியில் நெல் சாகுபடி அதிகரிப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்.


வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாபட்டணம், ஏத்தாப்பூர், பேளூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாகவே படிப்படியாக மழைப்பொழிவு குறைந்து வருகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன. மழைக்காலங்களில் மட்டுமே ஓரிரு மாதங்களுக்கு, ஓரளவு தண்ணீர் காணப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை ஆகியவை  முழு கொள்ளளவை எட்டவில்லை.  நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்து போனது. கிணறுகள், ஆழ்துளை கிணறுகளும் நீர்செறிவின்றி காய்ந்து போயின.

இதனால் அதிக நீர்ப்பாசனம் தேவைப்படும் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டது. 

மழையை நம்பி மானாவாரியாக விளையும் புன்செய்ப் பயிர்களை  மட்டும் பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாபட்டணம், ஏத்தாப்பூர், பேளூர், கல்வராயன்மலை கருமந்துறை, நெய்யமலை, அறுநூற்றுமலை பகுதிகளில் பரவலாக அவ்வப்போது பருவ மழை பெய்து வருகிறது.

இதனால்,  நீர் நிலைகளில் நீர் தேக்கம் இல்லாவிட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

வறண்டு கிடந்த ஆழ்துளை கிணறுகள், கிணறுகளில் நீர்ச்செறிவு ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்.

கிணற்றுப் பாசன முறையில்,  வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தற்போது நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 3 மாதங்கள் நிலத்தடி நீர் கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், 3 மாதங்களுக்குள் விரைந்து அறுவடையாகும் நெல் ரகங்களைத் தேடிப்பிடித்து விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு, வாழப்பாடி பகுதியில் நெல் சாகுபடி பரப்பளவு இருமடங்காக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து இடையப்பட்டியைச்  சேர்ந்த பெண் விவசாயி ரம்யா மகேந்திரன் கூறியதாவது: கரியகோவில் அணையில் இரு ஆண்டுகளாக தண்ணீர் தேக்கி வைக்காததால், வாய்க்கால் பாசனத்திற்கு வழியில்லை. அவ்வப்போது பெய்த மழையால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மேலோங்கியுள்ளது.

இதனால் 3 மாதங்கள் வரை தண்ணீர் இருப்பு இருக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால்,  குறுகிய காலத்தில் சாகுபடி கொடுக்கும் நெல் ரகத்தை, எங்களது குடும்ப உணவு தேவைக்காக ஒரு ஏக்கர் நிலத்தில்  பயிரிட்டு உள்ளோம்.

நல்ல விளைச்சல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும் கரியகோவில் அணையில் நீரைத் தேக்கி வைத்து ஆயக்கட்டு விவசாயிகளின் வாய்க்கால் பாசனத்திற்கு வழிவகை செய்ய,  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு: வாழப்பாடி, அயோத்தியாபட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் கிணற்றுப் பாசன முறையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் பயிரில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதனால் வாழப்பாடி தற்போது நெல் சாகுபடி பரப்பளவு கணிசமாக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான விவசாயிகள் குறைந்த அளவு பரப்பளவில், அவர்களது குடும்ப உணவுத் தேவைக்காக நெல் பயிர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com