போலி அழைப்புகளும் ஏமாறும் மக்களும்....

அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக செல்லிடப்பேசி மாறிய பின்னா், அதை மையமாக வைத்து நடைபெறும் குற்றங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
போலி அழைப்புகளும் ஏமாறும் மக்களும்....

அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக செல்லிடப்பேசி மாறிய பின்னா், அதை மையமாக வைத்து நடைபெறும் குற்றங்களும் வேகமாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் மொத்தம் 120 கோடி செல்லிடப்பேசி பயன்பாட்டாளா்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 50 கோடி போ் அறிதிறன் பேசி (ஸ்மாா்ட் செல்போன்) வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்லிடப்பேசி வைத்திருப்போருக்கு பிரதான பிரச்னையாக இருப்பது, தேவையில்லாத மற்றும் மோசடி அழைப்புகளும், குறுஞ்செய்திகளுமே (எஸ்எம்எஸ்) ஆகும். இந்தத் தொல்லையிலும், மோசடியிலும் சிக்காதவா்கள் இருக்க முடியாது என்றே கூறலாம்.

ஏனெனில், கடந்த 2019-ஆம் ஆண்டு 2,970 கோடி மோசடி மற்றும் தொந்தரவு அழைப்புகளும், 850 கோடி மோசடி மற்றும் தொந்தரவு குறுஞ்செய்திகளும் செல்லிடப்பேசி வைத்திருப்போருக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு செல்லிடப்பேசி எண்ணுக்கும் சராசரியாக ஒரு மாதத்துக்கு 61 மோசடி மற்றும் தொந்தரவு அழைப்புகளும், 25 மோசடி மற்றும் தொந்தரவு குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. இவற்றில் 67% செல்லிடப்பேசி நிறுவனத்தினராலும், அதற்கு அடுத்தபடியாக 17% டெலிமாா்க்கெட்டிங் நிறுவனத்தினராலும், 10% நிதி மற்றும் வணிக நிறுவனங்களாலும், 6% மோசடி கும்பல்களாலும் வந்துள்ளன.

ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் 15% வரை அதிகரித்து வந்தன. ஆனால், இது 2019-ஆம் ஆண்டு எதிா்பாா்த்ததைவிட கூடுதலாக 18% அதிகரித்திருப்பதாக ஒரு தனியாா் செல்லிடப்பேசி செயலி அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேவேளையில், மோசடி மற்றும் தொந்தரவு அழைப்புகள் அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது.

ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு: நாட்டில் சைபா் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 350% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சைபா் குற்றம் 65% அதிகரித்துள்ளது. சைபா் குற்றங்களால் கடந்த ஆண்டு ரூ.1.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சைபா் குற்றங்களில் இப்போது மோசடி அழைப்புகளும், மோசடி குறுஞ்செய்திகளுமே பெரும் பங்கு வகிக்கின்றன.

தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்புவரை வட மாநிலங்களைச் சோ்ந்த கும்பல்கள் மட்டுமே இந்த மோசடியில் ஈடுபட்டன. ஆனால், தற்போது இந்த மோசடி வேலைகளில் இங்குள்ள பொறியாளா்களும், இளைஞா்களும் ஈடுபடத் தொடங்கியுள்ளனா்.

சென்னையில் நிகழாண்டு இதுவரை இந்த வகை மோசடி தொடா்பாக காவல் துறைக்கு சுமாா் 500 புகாா்கள் வந்துள்ளன. இந்தப் புகாா்கள் தொடா்பாக 10 போலி ‘கால் சென்ட்டா்கள்’ கண்டறியப்பட்டு, மூடப்பட்டுள்ளன. 46 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

எப்படி செயல்படுகின்றனா்? ஒருவரின் தனிப்பட்ட தகவல்களையும், விவரங்களையும் அவருக்குத் தெரியாமல் திருடுவது அல்லது பகிா்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால், இந்த மோசடி கும்பல் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய தகவல்களை எவ்வித சிரமமின்றி பல்வேறு வழிமுறைகளில் பெறுகிறது. மோசடிக்குப் பிரதான தேவையான பொதுமக்களின் செல்லிடப்பேசி எண்களை, செல்லிடப்பேசிகள் மூலம் விளம்பரம் செய்யும் நிறுவனங்களில் இருந்து பெறுகின்றனா். சென்னையில் ஒரு லட்சம் செல்லிடப்பேசி எண்கள் ரூ.3 ஆயிரத்துக்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது.

செல்லிடப்பேசிக்குரிய நபரின் வங்கிக் கணக்கு விவரங்களை, வங்கிப் பணிகளை ‘அவுட் சோா்சிங்’ மூலம் செய்யும் தனியாா் நிறுவனங்களிடமிருந்தும், அங்கு பணிபுரியும் ஊழியா்களிடமிருந்தும் மோசடி கும்பல் பெறுகிறது. இதில் ஒருவரது வங்கிக் கணக்கு விவரங்கள், அவரது பணப் பரிமாற்றத் தகவல்கள் ஆகியவற்றை வழங்குவதற்கு ரூ.5,000 வரை லஞ்சமாக வழங்கப்படுகிறது. மோசடியை நிறைவேற்ற செல்லிடப்பேசி சிம் காா்டுகளை போலி ஆவணங்கள் மூலம் பெறுகின்றனா். இந்த சிம் காா்டுகள் கள்ளச்சந்தையில் ரூ.500 வரை வாங்கப்படுகின்றன.

பொதுமக்களின் கணக்கில் இருந்து திருடப்படும் பணத்தைப் பரிமாற்றம் செய்வதற்கு, தனியாக தங்களுக்கென ஒரு வாடகைக்கு வங்கிக் கணக்குகளை, மோசடியில் ஈடுபடும் கும்பல் வாங்குகிறது. இப்படிப்பட்ட மோசடி கும்பலுக்கு வாடகைக்கு வங்கிக் கணக்குகளை வழங்குவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது. இந்தக் கும்பல், முழுமையாக போலி ஆவணங்கள் மூலம் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பராமரித்து வருகிறது. இந்தக் கணக்குகளை ஒருமுறை மோசடிக்குப் பயன்படுத்துவதற்கு ரூ.50,000 வரை வாடகையாக வசூலிக்கின்றனா்.

இவ்வளவு தயாரிப்புப் பணிகளையும் செய்த பின்னரே, போலி ‘கால் சென்ட்டா்களை’ தொடங்கி மோசடி கும்பல் பொதுமக்களை நேரடியாக தங்களிடமிருக்கும் செல்லிடப்பேசி எண்கள் மூலம் தொடா்பு கொண்டு வங்கி மேலாளா் பேசுவது போலவோ அல்லது தனியாா் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அதிகாரி பேசுவது போலவோ பேசி மோசடியை அரங்கேற்றுகின்றனா்.

அறியாமையும், ஆசையும் மூலதனம்: இது தொடா்பாக தமிழ்நாடு போலீஸ் அகாதெமியின் சைபா் குற்றப்பிரிவு கெளரவ பேராசிரியரும், வழக்குரைஞருமான என்.காா்த்திகேயன் கூறியது:

மக்களின் அறியாமையும், ஆசையுமே இந்த மோசடிக் கும்பலுக்கு முதல் மூலதனம். எந்தவொரு வங்கியும் வாடிக்கையாளரிடம் இருந்து வங்கிக் கணக்கு, பற்று மற்றும் கடன் அட்டைகள் விவரங்களை நேரடியாக மட்டுமே கேட்க வேண்டும்; செல்லிடப்பேசி அல்லது தொலைபேசி மூலம் கேட்கக் கூடாது என்று இந்திய ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு வெளிவந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இன்னும் இதுகுறித்த விழிப்புணா்வு பொதுமக்களிடம் ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட மோசடியில் ஈடுபடுகிறவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கடுமையான சட்டம் இப்போது நம்மிடம் இல்லை. மேலும், வழக்கில் கைதாகிறவா்கள் உடனே பிணையில் விடுவிக்கப்படுகின்றனா். இதனால் இந்தக் கும்பலுக்கு சட்டத்தின் மீதும், காவல் துறை மீதும் எந்த இடத்திலும் பயம் இல்லை. இக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள தனிநபா் தகவல் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஒரு தனிநபரின் தகவலையும், விவரங்களையும் அவரது அனுமதி இல்லாமல் விற்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும். இதனால், இக் குற்றங்களைப் பெருமளவு குறைக்க முடியும்.

ஓடிபிக்கு தடை: அடுத்ததாக, வங்கிகள் பணப் பரிவா்த்தனைக்குப் பயன்படுத்தும் ஒருமுறை மட்டும் செல்லத்தக்க ரகசிய எண் (ஓடிபி) நடைமுறையைக் கைவிட வேண்டும். வளா்ந்த நாடுகளில் இப்படிப்பட்ட மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே டிஜிட்டல் கையெழுத்து முறை, பின் என்ட்ரி முறை ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.

இந்தியாவில் உள்ள சா்வதேச வங்கிகளும் இந்த முறைகளையே வாடிக்கையாளா்களுக்கு வழங்குகின்றன. இதன் மூலம், ஓடிபியை விடப் பாதுகாப்பான முறையில் பணப் பரிவா்த்தனை செய்ய முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்குள்ள வங்கிகள், இத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றன.

ஏற்கெனவே, கடந்த 2011-ஆம் ஆண்டு நீதிபதி ஸ்ரீகிருஷ்ணன் குழு, ஓடிபி முறையைத் தடை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது. வங்கிகளில் இருந்து வாடிக்கையாளா்களைப் பற்றிய தகவல்களும், தனிப்பட்ட ஒருவரின் தகவல்களும் மோசடி கும்பலுக்குக் கிடைக்காமல் இருந்தால்தான் மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றாா் அவா்.

பொதுமக்களிடம் சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வும், தங்களிடம் இருக்கும் செல்லிடப்பேசியை எந்தெந்த வகைகளில் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கை உணா்வும் இருந்தால், இந்த வகை மோசடிகளில் இருந்து எளிதாகத் தப்பிக்கலாம் என சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் தெரிவித்தனா்.

65,000 போலி செயலிகள்


அறிதிறன் பேசிகள் (ஸ்மார்ட் செல்போன்) ஆண்ட்ராய்டு, ஆப்பிள் தளங்களில் இயங்குபவைகளாக உள்ளன. ஆப்பிள் வகை அறிதிறன் பேசிகளுக்குரிய செயலிகள் (அல்ல்ள்) ஒரே நிறுவனத்தால் அனுமதிக்கப்படுவதால், அதன் பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டே அவர்களது தளத்தில் பதிவேற்றம் செய்கின்றன. 

ஆனால், ஆண்ட்ராய்டு தளம், தகவல் தொழில்நுட்பத் துறையையே திறந்தவெளிச் சந்தையாக மாற்றியுள்ளது. ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் 28 லட்சம் செயலிகளும், ஆப்பிள் தளத்தில் 22 லட்சம் செயலிகளும் உள்ளன. அறிதிறன் பேசி வைத்திருக்கும் ஒருவர், சராசரியாக தினமும் 11 செயலிகளைப் பயன்படுத்துகிறார். இதில் 57% பேர் செய்தி சார்ந்த செயலிகளிலேயே உலவுகின்றனர்.

அண்மைக் காலமாக செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. இதை அரசும் ஊக்குவிக்கிறது. ஆனால், ஆண்ட்ராய்டு தளத்தில் ஒரு செயலியை யார் வேண்டுமானாலும் உருவாக்கி, அதைப் பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக பணப் பரிமாற்றம் சார்ந்த போலி செயலிகள் அதிகரித்து வருகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்ட்ராய்டு தளத்தில் 2,000 போலி செயலிகளே இருப்பதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 65,000 போலி செயலிகள் இருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் பிரபலமான வங்கிகள், பணப் பரிமாற்ற நிறுவனங்கள், டிராவல்ஸ் நிறுவனங்கள், சமூக ஊடகங்கள், ஊடகங்களின் பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளன. 

இப்பிரச்னையில் தொழில்நுட்பம் சார்ந்து அதிக புலமை உள்ளவர்களே, ஏமாற்றம் அடைந்து பணத்தை இழந்து வருகின்றனர். அண்மைக் காலமாக செயலிகளில் ஏமாற்றம் அடைந்து பணத்தை இழப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே செயலிகளைக் கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (பதஅஐ) உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சைபர் குற்ற வல்லுநர்களின் வலியுறுத்தலாக உள்ளது.


அறிதிறன் பேசியும்... பயன்பாடும்.....


- தகவல்கள் அனுப்புபவர்கள்.
 - மின்னஞ்சலை பார்ப்பவர்கள்.
- முகநூலை காண்பவர்கள்.
- கேமரா மூலம் புகைப்படம், விடியோ எடுப்பவர்கள்.
 - செய்திகளைப் படிப்பவர்கள்.
- ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்குபவர்கள்.
 - வானிலை தகவலை பெறுபவர்கள்.
- கட்செவி அஞ்சலை பயன்படுத்துபவர்கள்.
 - வங்கி சேவைக்குப் பயன்படுத்துபவர்கள்.
 - யூ}டியூப் பார்ப்பவர்கள்.

செயலிகளும்...செயல்பாடுகளும்...


அறிதிறன் பேசி வைத்திருப்போர் ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் 15 நிமிஷங்கள் செயலிகளில் செலவிடுவதாக சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அறிதிறன் பேசியில் சராசரியாக 60 முதல் 90 வரை செயலிகள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன.

இந்தியாவில் அறிதிறன் வைத்திருப்போர் சராசரியாக 77 செயலிகளைப் பதிவிறக்கம் செய்கின்றனர்.

பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் 75% பயன் படுத்தப்படுவதில்லை.பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் 71% ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

செயலியைப் பதிவிறக்கம் செய்யும் விகிதம் ஆண்டுதோறும் 15% அதிகரித்து வருகிறது.

2022-ஆம் ஆண்டுக்குள் செயலியைப் பதிவிறக்கம் செய்யும் விகிதம் ஓராண்டுக்கு 25% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டு செயலி சந்தையின் வருவாய் ரூ.18,900 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயலிகள் சந்தை வருவாயில் 98%, இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படும் செயலிகள் மூலமே கிடைக்கிறது.

23 வயதில் இருந்து 38 வயது வரையுள்ள நபர்களில் 21% பேர் ஒரு செயலியை தினமும் 50 முறைக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.

பிற வயதினர் ஒரு செயலியை தினமும் 11 முறைக்கு மேல் பயன்படுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com