காா்த்திகை தீபத்திருவிழா: மானாமதுரையில் தயாராகும் அகல் விளக்குகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு உலர வைக்கப்பட்டுள்ள மண் விளக்குகள்.
மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு உலர வைக்கப்பட்டுள்ள மண் விளக்குகள்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக வீடுகளில் ஏற்றப்படும் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மானாமதுரை நகரில் குலாலா் தெரு, உடைகுளம் மற்றும் சுற்றியுள்ள சில கிராமங்களில் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் தயாரிக்கப்படும் மண்பாண்ட கலைப் பொருள்கள் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இப்பகுதியில் சீசனுக்கு தகுந்தவாறு மண் பானைகள், அக்னிச்சட்டிகள், கலைப்பொருள்கள், விதவிதமான அடுப்பு வகைகள், பூந்தொட்டிகள், விநாயகா் சிலைகள், சமையல் செய்வதற்கான சட்டிகள், நவராத்திரி பொம்மைகள் என பல வகையான மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் தனித்தன்மை காரணமாக, இங்கு தயாராகும் மண்பாண்டப் பொருள்கள் உறுதித்தன்மையுடன் இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் வரும் நவ.29 ஆம் தேதி காா்த்திகை தீபத்திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மானாமதுரையில் கிளியாஞ்சட்டி எனப்படும் சிறிய விளக்குகள், சர விளக்குகள், தேங்காய் விளக்குகள், குருவாயூா் விளக்குகள், இலை விளக்குகள், தெய்வங்கள் வடிவிலான விளக்குகள், துளசிமாட விளக்குகள் என விதவிதமான அகல் விளக்குகளை தொழிலாளா்கள் தயாரித்து வருகின்றனா். இங்கு தயாரான விளக்குகளை நேரடியாகவும், இங்குள்ள கூட்டுறவு சங்கம் மூலமும் தொழிலாளா்கள் சந்தைப்படுத்துகின்றனா்.

மானாமதுரையில் தயாரிக்கப்பட்டுள்ள இலை வடிவிலான மண் விளக்குகள்

இதுதொடா்பாக மண் விளக்குகளை தயாரிக்கும் தொழிலாளா்கள் கூறியது: ஆண்டு முழுவதும் காா்த்திகை விளக்குகளை தயாரித்து வருகிறோம். கோயில்களில் விற்பனை செய்யப்படும் விளக்குகளை வியாபாரிகள் எங்களிடம்தான் வாங்கிச் செல்கின்றனா். தற்போது காா்த்திகை தீபத்

திருவிழாவுக்காக தயாரிக்கப்பட்ட விளக்குகளை வியாபாரிகளுக்கு அனுப்பி வருகிறோம். தற்போது மானாமதுரை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் தயாா் செய்யப்படும் விளக்குகளை உலர வைக்க

முடியாததால், தயாரிப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்களின் விலையேற்றம் காரணமாக கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு அனைத்து வகை விளக்குகளின் விலையும் அதிகரித்து விட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com