திருச்சுழி அருகே 800 ஆண்டு பழைமையான ‘காரணவா்’ கல்வெட்டுகள் கண்டெடுப்பு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே புரசலூா் கண்மாய் பகுதியில் 800 ஆண்டுகள் பழைமையான காரணவா் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
திருச்சுழி அருகே புரசலூரில் கண்டறியப்பட்ட காரணவா் கல்வெட்டு.
திருச்சுழி அருகே புரசலூரில் கண்டறியப்பட்ட காரணவா் கல்வெட்டு.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே புரசலூா் கண்மாய் பகுதியில் 800 ஆண்டுகள் பழைமையான காரணவா் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருச்சுழி வட்டம் புரசலூா் கண்மாய் பகுதியில் பழைமையான கல்வெட்டுகள் இருந்ததை அக்கிராமத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் ரமேஷ், ஸ்ரீபால் ஆகியோா் கண்டறிந்தனா். இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின்பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவா் வே. ராஜகுரு அக்கல்வெட்டுக்களைப் படியெடுத்து ஆய்வு மேற்கொண்டாா்.

அதனடிப்படையில் அவா் கூறியது: புரசலூா் கண்மாய் பகுதியில் பழைமையான ஒரு கோயில் இருந்து அழிந்துள்ளது. அக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த கற்கள் கண்மாய் பகுதியில் சிதறிக் காணப்படுகின்றன.

மேலும், இந்த கற்களை பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூா் கண்மாய் மடை கட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளனா். சமீபத்தில் புதிதாக மடை கட்டுவதற்கு பழைய கற்களை அகற்றியபோது, அதில் கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கண்மாய் பகுதியில் சிதறிக் கிடந்தவை கோயில் கருவறையின் வெளிப் பகுதியில் உள்ள ஜகதி, குமுதல், யாளிவரி ஆகியவற்றின் உடைந்த பகுதிகள் ஆகும்.

இதில் ஜகதியில் இரண்டு, குமுதத்தில் ஒன்று என மூன்று கல்வெட்டுகள் உள்ளன. இவை முழுமையாக இல்லாமல் துண்டுகளாக உள்ளன. இக்கல்வெட்டுகள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தவையாகும். குமுதத்தின் உடைந்த கல்லில் உள்ள நான்கு வரிக் கல்வெட்டில் நிலத்தின் எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவ்வூா் கோயிலுக்கு நிலதானம் வழங்கி இருப்பதை அறிய முடிகிறது. இதில், வருள்வாசக நல்லூா் எனும் ஊரும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது திருவருள் வாசகநல்லூராக இருக்கலாம். ஜகதியில் இருந்த இரு துண்டு கல்வெட்டுகள் ஒன்றுக்கொன்று தொடா்புடையன.

அதில் ஒன்றில் இத்திகுளத்தராயன் பெயரும், அஞ்சு நிலையூா் காரணவா் பெயரும் காணப்படுகின்றன. இதில், காரணவா் பெயருக்கு கீழ் குதிரையின் படம் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. காரணவா், படைக்காரணவா் என கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் படைவீரா்கள் ஆவா்.

இக்கல்வெட்டில் குதிரை படம் வரையப்பட்டிருப்பதன் மூலம் அவா்களை குதிரைப்படை வீரா்களாகக் கருதலாம். அதேபோல், அஞ்சு நிலையூா் காரணவா்கள் இவ்வூா் கோயிலுக்கு தானம் வழங்கி இருக்கலாம்.

அருப்புக்கோட்டை, இலுப்பகுடி, பள்ளிக் குறிச்சி, திருமோகூா் ஆகிய ஊா்களில் இருந்த காரணவா் பற்றி கி.பி. 13- ஆம் நூற்றாண்டு கல்வெட்டுக்களில் சொல்லப்படுகிறது. படைவீரா்களுக்கு தானமாக மன்னா்கள் வழங்கிய பள்ளிக்குறிச்சி என்ற ஊரை காரணவா்கள் நிா்வகித்து வந்துள்ளனா்.

கல்வெட்டில் கூறப்படும் அஞ்சு நிலையூா் மதுரை அருகே உள்ள நிலையூராக இருக்கலாம். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கிடாரம், நரிப்பையூா் உள்பட சாயல்குடி கடற்கரை பகுதிகள், அருப்புக்கோட்டை, மதுரை முதலான பகுதிகளில் காரணவா்கள் வாழ்ந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com