முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட தினம் இன்று: 125 ஆண்டுகள் நிறைவு

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான வாழ்வாதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இந்த மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப
முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

கம்பம்:  தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான வாழ்வாதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இந்த மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு (10.10.1895) 125 வது ஆண்டுகள் இன்று நிறைவடைகிறது. இந்த தினத்தை பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென்தமிழகத்தை வளப்படுத்தி வந்த ஆறுகள் பொய்த்துப் போயின. சீர்குலைந்த வேளாண்மையை மேம்படுத்த 1798-இல் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் மற்றும் அமைச்சர் முத்து இருளப்பரில் துவங்கி, 1808-இல் ஜேம்ஸ் கால்டுவெல், 1862-இல் மேஜர் ரைவீஸ், மேஜர் பேயின், 1870-இல் ஸ்மித் என பலர் ஆய்வுகளும் திட்டங்களும் தயார் செய்தனர். ஆனால் இறுதியில் கர்னல் ஜான் பென்னிகுக் தலைமையில் முல்லையாறுக்கும் பெரியாறுக்கும் நடுவே 152 அடி உயர அணை கட்ட முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு.

அணை நீரானது எல்லாக்காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தை அக் 29, 1886-இல் செய்துகொண்டது ஆங்கிலேய அரசு. இதைத் தொடர்ந்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியினை மேற்கொண்டது. 

அவரது தீவிர முயற்சியினால், 1895- இல் முல்லைப்பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது. அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக்டோபர் 10, 1895 மாலை 6 மணிக்கு சென்னை மாகாண கவர்ணர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணைத் தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை 125 ஆண்டுகளாக தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்துத்  தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது, முல்லைப்பெரியாறு அணை. 

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு, முதன்முதலாக தண்ணீர் திறக்கப்பட்ட நாளான அக்டோபர் 10 ஆம் தேதியை, கடந்த பல ஆண்டுகளாக 5 மாவட்டங்களிலுள்ள பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இன்றும் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட 125 ஆம் ஆண்டைக் கொண்டாடும் விதமாக, விவசாயிகளும், பொதுமக்களும் முல்லைப் பெரியாற்றங்கரையில் கேக் வெட்டி, பொங்கல்வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com