ஆழ்துளைக் கிணற்றில் சுஜித் மடிந்து ஓராண்டு: இன்னுமும் தீராத பிரச்னைகள்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க செலவிடும் அரசு, அதைத் தடுப்பதற்கும், ஏற்படும் விபத்தினை எதிர்கொள்ளும் வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
தனது இரு மகன்களான புனித் ரோஷன், சுஜித்வில்சனுடன் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி.
தனது இரு மகன்களான புனித் ரோஷன், சுஜித்வில்சனுடன் பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி.

கடந்த 2019 அக்டோபர் 25 ஆம் தேதி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சின்னஞ்சிறு கிராமம் நடுக்காட்டுப்பட்டியில் தனது மூன்றரை வயது அண்ணன் புனித் ரோஷனுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பச்சிளம் பாலகன் சுஜித் வில்சன், விளைந்திருந்த சோளப்பயிரின் நடுவே மறைந்திருந்த பயனற்ற சுமார் 600 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். பல லட்சங்களில் உச்சக்கட்ட மீட்புப்பணிகள் - தோல்வியுற்று அளவுகோலின்றி அகில உலகையும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பிரளமாய் அடுத்த 80 மணி நேர போராட்டம்.

கட்டடத் தொழிலாளி பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதியினருக்கு 2017 ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இரண்டாவது மகனாக பிறந்தவர் சுஜித் வில்சன். தனது இரண்டாவது பிறந்தநாளைக் கொண்டாடிய சுஜித், அடுத்த 22 நாள்களில் தனது குடும்பத்தை மட்டுமின்றி இந்த உலகை மீளா துயரத்தில் விட்டுவிட்டு மறைந்துள்ளான். 

சுஜித்வில்சன் தவறி விழுந்த 600 அடி ஆழ ஆழ்துளை கிணறு.

2019 அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணியளவில் பயனற்ற ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனிடம், “அழுவாத சாமி, அம்மா செத்த நேரத்தில் உன்ன தூக்கிடுறேன்டி” தாய் கலாமேரி கடைசியாக பேசிய வார்த்தைகளை அவ்வளவு எளிதில் கண்ணில் நீர் வராமல் யாரும் காண முடியாது. சுமார் 5.40 மணியளவில் மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல காவல்துறை, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர், சட்டப்பேரவை உறுப்பினர், தமிழக அமைச்சர்கள், மாவட்ட சுகாதாரத்துறை என அனைவரின் மேற்பார்வையில் ஒட்டுமொத்த மீட்டுப்பணிகள் போர்கால அடிப்படை முழுவீச்சில் தொடங்கியது. 

தனிநபர்களின் உபகரணங்கள், மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்களின் முயற்சி, மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுகள், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் குழு என மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட மீட்புப்பணிகள் அனைத்தும் 29-ஆம் தேதி விடியற்காலை பயனற்றுபோய் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான்.

தற்போது நடுக்காட்டுபட்டி மிகுந்த சோகத்தைத் தழுவி அமைதியாக காணப்படுகிறது. சுஜித் குடும்பத்தினரும், எந்தவித சந்தோஷமும் இன்றி சோகத்தை சுமந்தே அடுத்தகட்ட வாழ்வியல் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

சுஜித் மறைவிற்குப் பின்னர் வீட்டைவிட்டு வெளியேகூட செல்லாமல் இருந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ்-கலாமேரி தம்பதியினர் இன்னமும் சுஜித் நினைவாகவே வாழ்ந்து வருகின்றனர். கிட்டத்தட்ட மூன்று மாதத்திற்கு பின்புதான் மீண்டும் கட்டிட பணிக்கு சென்றதாக சொல்லும் பிரிட்டோ ஆரோக்கியதாஸ், “முன்பு போல் தங்கி வேலைப் பார்க்கும் வேலைக்கு எல்லாம் செல்வதில்லை, தினமும் வீடு திரும்பி விடுகிறேன், நான் வேலை முடிந்து வீடு திரும்பியதும் என் மீது ஏறி விளையாடும் சுஜித் தற்போது இல்லை, ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய வெற்றிடத்தை நினைவூட்டுகிறேன்" என வேதனை தெரிவிக்கிறார். 

"நிதி உதவிகளும், பல அனுதாபக் கடிதங்களும் வந்தன, ஆனால் எந்த பணமும் என் குழந்தையை மீண்டும் உயிரோடு கொண்டு வர முடியாது. எங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு பணம் எதுவும் தேவையில்லை என்பதால் அரசியல் கட்சிகளிடமிருந்து வந்த எந்த பைசாவையும் நாங்கள் பயன்படுத்தவில்லை, என் கணவர் தினசரி சம்பாதிக்கும் ரூ.500 ஊதியத்தில் நாங்கள் திருப்தியடைகிறோம். 

எங்களுக்கு கிடைத்த நிதி உதவி பற்றி இவ்வளவு கூறப்பட்டுள்ளது, ஆனால் யாரும் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், எங்கள் கண் முன்னே எங்கள் குழந்தை உயிரிழப்பதை கண்ட உலகில் துரதிர்ஷ்டவசமான பெற்றோர்களாக நாங்கள் இருக்கிறோம்” என கண்களில் கண்ணீர் மல்க கூறுகிறார் கலாமேரி.

சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் நிரப்பப்பட்டு மூடப்பட்டுள்ளது.

“வந்தடைந்த பணம் மட்டும் பட்டியலிடப்பட்டது, இன்னும் பல குழந்தைகளை பெற்று அதையும் போர் குழியில் போட்டால் இன்னும் அதிகம் பணம் கிடைக்கும்” என முகவரியின்றி வந்த கடிதங்களால் கவலையுற்று வாழ்வை வெறுத்த தம்பதியினரின் மன உளைச்சல்களை யாரும் அவ்வளவு எளிதில் பாட்டியலிட முடியாது. 

365 நாள்கள் கடந்த நிலையிலும், சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த இடத்தில் கான்கிரீட் நிரப்பப்பட்ட ஆழ்துளைக் கிணற்றினை ஏராளமனோர் வந்து சோகத்துடன் பார்த்து செல்கின்றனர். 

அப்படி தங்களது வீட்டிற்கு வந்த நபர்களை, ஓடி சென்று கைபிடித்து அழைத்து வரும் புனித் ரோஷன், அவர்களுக்கு வீட்டிலிருந்து தண்ணீர் எடுத்து தருகிறான், கான்கிரீட் நிரப்பப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிற்கு அழைத்துச் சென்று சுஜித் இங்கே தான் விழுந்துள்ளான், சாமியாக இருக்கிறான் என அடையாளம் காட்டுகிறான்.

தற்போது கருவுற்றள்ள கலாமேரிக்கு டிசம்பர் 6-ஆம் நாள் மகப்பேறுக்கு தேதி குறிப்பிட்ட நிலையில், மீண்டும் சுஜித் தங்களது வீட்டிற்கு வருவான் என குடும்பம் முழுவதும் காத்திருக்கின்றது.

தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மத்திய மண்டல காவல்துறையினர், மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் இயக்குனர், மாநில பேரிடர் மேலாண் வீரர்கள், தேசிய பேரிடர் மேலாண் வீரர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே நடுக்காட்டுப்பட்டியில் பல லட்சங்களை செலவு செய்து சுஜிதை மீட்பதில் போராடியது. 

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்க பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இன்னமும் அதற்கான நிரந்தர தீர்வினை ஏற்படுத்தவில்லை என்பதே வருத்தமான செய்தி. 

மாவட்ட நிர்வாக அளவில் கூட இன்னமும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க போதிய உபகரணங்கள் இல்லை என்பதே உண்மை. 

ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க செலவிடும் அரசு, அதை தடுப்பதற்கும், ஏற்படும் விபத்தினை எதிர்கொள்ளும் வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே சுஜித் குடும்பம் மற்றும் இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

“பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட உறுதியேற்போம் – இனிவரும் சுஜித்களை பாதுகாப்போம்” என பாத்திமா புதூரில் உள்ள சுஜித் கல்லறையில் கிராம மக்களால் எழுதப்பட்டுள்ள உறுதிமொழியை நாமும் ஏற்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com