முதல்வர் பதவியில் இருந்து விலக்கப்படுவாரா எடியூரப்பா?

2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, முதல்வரை மாற்ற பாஜக தேசியத் தலைமை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
கர்நாடக முதல்வர் எடியூரப்பா
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

பெங்களூரு, செப். 21: தென் மாநிலங்களில் கர்நாடகத்தில் முதன்முறையாக பாஜக ஆட்சி அமைக்கக் காரணமானவர் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா. எனினும்,  2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கணக்கில் கொண்டு, முதல்வரை மாற்ற பாஜக தேசியத் தலைமை யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

77 வயதாகும் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு, இளம் தலைவரை தலைமை பொறுப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடப்படுகிறது. இதுதொடர்பாக பாஜகவில் கடந்த 3 மாதங்களாக திரைமறைவில் வேலைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படலாம் என்ற செய்தி, அவ்வப்போது ஊடகங்களில் கசிய விடப்படுகிறது. 3 நாள்களுக்கு முன்னர் முதல்வர் எடியூரப்பா புதுதில்லி சென்றிருந்தபோதும், இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதேநேரத்தில் முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதையும் கட்சி உணர்ந்திருக்கிறது.  

எனினும், அடுத்த 6 மாதங்களில் அதாவது அடுத்த ஆண்டு  நிதிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை விலக்கிவிட்டு, புதியவரைக் கொண்டுவரும் எண்ணத்தில் பாஜக தேசியத் தலைமை இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 
செல்வாக்குள்ள தலைவர்: கர்நாடகத்தில் 1970}ஆம் ஆண்டிலிருந்து ஜனசங்கத்திலும்,1980 முதல் பாஜகவிலும் முதுகெலும்பாகத் திகழ்ந்து வரும் எடியூரப்பா இல்லாத கட்சியின் எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அக்கட்சியின் தொண்டர்கள் தயங்கும் அளவுக்கு, மாநிலத்தில் அவரது செல்வாக்கு விரிந்து படர்ந்திருக்கிறது. 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த எடியூரப்பாவுக்கு மாற்று யார் என்ற கேள்விக்கு இதுவரை யாராலும் பதிலளிக்க முடிவில்லை.

அனைத்துத் தரப்பினரையும் அரவணைக்கும் தலைமைப் பண்பு, வசீகரமான பேச்சாற்றல், அரசியல் எதிரிகளை கேள்விகளால் துளைத்தெடுக்கும் திறன், இக்கட்டான காலகட்டங்களிலும் பதற்றமின்றி கட்சியை வழிநடத்துதல், போற்றினாலும் தூற்றினாலும் நிலையான அணுகுமுறை, அரசியல் வெற்றி } தோல்விகளைச் சமமாகக் கருதும் பாங்கு போன்ற பண்புகள் கொண்ட எடியூரப்பாவுக்கு ஒப்பான மக்கள் செல்வாக்குள்ள மாற்றுத் தலைமையைக் கண்டறிய முடியாமல் கட்சித் தலைமை திணறுகிறது. 

அவரது வயதைத் தவிர, அரசியல் ரீதியாக எடியூரப்பாவுக்கு எதிராக கை சொடுக்கும் எந்த விஷயமும் இல்லை என்றே கூறலாம். இருந்தாலும்கூட, எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்றுவது தொடர்பான பேச்சு கர்நாடக பாஜகவில் காற்றுவாக்கில் பரவத் தொடங்கியுள்ளது. 
மாற்று இல்லை: வயதைக் காரணம் காட்டி முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றிவிட்டு, அவருக்கு ஆளுநர் பதவியை வழங்கி கெüரவிக்க வேண்டும் என்று பாஜக தேசியத் தலைமை யோசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், சூழல் அதற்கு ஏற்றதாக இல்லை.

கர்நாடகத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. மாநிலத்தின் பொருளாதாரம் சீராக இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எடியூரப்பாவுக்கு நிகரான ஆளுமை கொண்ட மாற்றுத் தலைவரை பாஜக தேசியத் தலைமையால் கண்டறிய முடியவில்லை. எனவேதான், அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றத் தயக்கம் காட்டப்படுகிறது. 

நிகழாண்டின் இறுதிக்குள் கரோனா தொற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் பல மாநிலங்களின் ஆளுநர்கள் ஓய்வுபெற இருக்கிறார்கள். அந்த நேரத்தில், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றுவது சரியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதை உணர்ந்துள்ள பாஜகவின் மூத்த தலைவர்கள் பலர் எடியூரப்பாவுக்கு மாற்றாகத் தங்களை முன்னிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். 

தலைமை மாற்றம்: எடியூரப்பாவை நீக்குவதன் மூலம், அவர் சார்ந்துள்ள லிங்காயத்து சமுதாயத்தின் ஆதரவை இழக்க விரும்பாத பாஜக, அதே சமுதாயத்தைச் சேர்ந்த, வட கர்நாடகத்தைச் சார்ந்த, ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடர்புடைய தலைவரை முன்னிலைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.  
இதையடுத்து, துணை முதல்வராக உள்ள லட்சுமண் சவதி, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், உமேஷ் கத்தி, மத்திய அமைச்சராக உள்ள சுரேஷ் அங்கடி போன்றவர்கள் எடியூரப்பாவின் இடத்தை நிரப்பும் ஆசையில் தேசியத் தலைமையை அணுகி வருகிறார்கள். 

இவர்களைத் தவிர, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஒக்கலிகர் சமுதாயத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கெüடா, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா ஆகியோரும் திரைமறைவில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பாஜக தேசிய அமைப்புச் செயலாளராக உள்ள பி.எல்.சந்தோஷும் தலைமைப் பொறுப்பில் கண்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

எடியூரப்பாவின் ஆசை: இவை அனைத்தும் முதல்வர் எடியூரப்பாவுக்குத் தெரியாமல் இல்லை. எதுவும் நடக்காததுபோல மெüனம் காத்துவரும் எடியூரப்பா, எஞ்சியுள்ள 3 ஆண்டுகால ஆட்சிக் காலத்தை நிறைவு செய்வதில் உறுதியாக இருக்கிறார். அதற்கான அரசியல் நகர்வுகளையும் எடியூரப்பா செய்யாமல் இல்லை. தனக்கு மாற்றாக யாரையும் முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமையை வைத்திருப்பதே அவருக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. 

தன்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினால், அப்போது தனது பதவியைப் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணத்தில் எடியூரப்பா இருக்கிறார். அதற்கு அச்சாரமிடும் நிகழ்வாகவே முதல்வர் எடியூரப்பா} மஜதவின் முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி ஆகியோரின் சந்திப்பு பார்க்கப்படுகிறது. 
அதேசமயம், கர்நாடகத்தில் எடியூரப்பாவின் தனிமனித ஆளுமையை நம்பியிராமல், அனைத்து சமுதாயத்தினரின் நன்மதிப்பைப் பெறும் கட்சியாக பாஜகவைக் கட்டமைக்க தேசியத் தலைமை திட்டமிடுகிறது. அதற்காகவே, லிங்காயத்து சமுதாயத்தின் லட்சுமண் சவதி, ஒக்கலிகர் சமுதாயத்தின் அஸ்வத் நாராயணா, தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தின் கோவிந்த் கார்ஜோள் ஆகியோரை துணை முதல்வராக்கியது. அதேபோல, கடலோரக் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள பன்த் சமுதாயத்தின் நளின்குமார் பட்டீலை பாஜக மாநிலத் தலைவராகவும், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரியை பேரவைத் தலைவராகவும் நியமித்தது.

எடியூரப்பாவுக்குப் பிந்தைய பாஜகவைக் கட்டமைப்பதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அப்படியானால், எடியூரப்பாவை மாற்றுவது எப்போது? இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் காலம் இப்போதைக்குக் கனியவில்லை என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக 
உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com