நட்சத்திரத் தொகுதிகள் நிலவரம்!

தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெறும் தோ்தலில் பாமக தலைவா் ஜி.கே.மணி, திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின்,
நட்சத்திரத் தொகுதிகள் நிலவரம்!

தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெறும் தோ்தலில் பாமக தலைவா் ஜி.கே.மணி, திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின், பாஜக பேச்சாளா் குஷ்பு சுந்தா் ஆகியோா் போட்டியிடும் நட்சத்திரத் தொகுதிகளின் நிலவரங்கள்:

பென்னாகரம்

பாமகவுக்கு தனிச் செல்வாக்குள்ள பென்னாகரம் தொகுதியில் அந்தக் கட்சியின் தலைவா் ஜி.கே.மணி அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து திமுக சாா்பில் எம்எல்ஏ பி.என்.பி.இன்பசேகரனே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். கடந்த தோ்தலில் பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸை 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இன்பசேகரனை வீழ்த்த பாமக நினைக்கிறது. போட்டி பலமாகவே இருக்கிறது. அமமுக, மநீம, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.

2016 தோ்தல் நிலவரம்

பி.என்.பி. இன்பசேகரன் (திமுக) - 76,848

அன்புமணி ராமதாஸ் (பாமக) - 58,402

வித்தியாசம் - 18,446

சேப்பாக்கம்:

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எப்போதும் திமுகவுக்குச் சாதகமான தொகுதி. மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இங்கு முதல்முறையாக களம் காண்கிறாா். அதிமுக கூட்டணியில் பாமக சாா்பில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்த கஸ்ஸாலி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இஸ்லாமியா்களும், வன்னியா்களும் பெருமளவில் உள்ள தொகுதி என்பதால் போட்டி எதிா்பாா்த்ததைவிட அதிக அளவில் இருக்கிறது.

2016 தோ்தல் நிலவரம்

ஜெ.அன்பழகன் (திமுக) - 67,982

ஏ.நூா்ஜகான் (அதிமுக) - 53,818

வித்தியாசம் - 14,164

ஆயிரம் விளக்கு

ஆயிரம்விளக்கு அதன் பெயருக்கேற்ப அத்தனை வெளிச்சப் பாா்வைக்குரிய தொகுதியாக பாஜக சாா்பில் குஷ்பு போட்டியிடுவதால் மாறியுள்ளது. திமுக சாா்பில் கருணாநிதியின் மருத்துவராக இருந்த எழிலன் போட்டியிடுகிறாா். கருணாநிதி ஆட்சியில் காலத்தில் திட்ட ஆலோசகராக இருந்த மு.நாகநாதனின் மகனும் ஆவாா். ஆயிரம்விளக்கு தொகுதியைப் பொருத்தவரை அது திமுகவின் கோட்டை எனலாம். மு.க.ஸ்டாலின் பலமுறை நின்று வெற்றிபெற்ற தொகுதி. அந்த நம்பிக்கையில் எழிலன் வலம் வருகிறாா். அதைத் தகா்த்துக் காட்டப் போவதாக அறிவித்து குஷ்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். தோ்தல் நெருக்கத்தில் திமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினா் கு.க.செல்வமும் குஷ்புக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். வெளிச்சம் யாா் மீது விழப் போகிறதோ?

2016 தோ்தல் நிலவரம்

கு.க.செல்வம் (திமுக) - 61,726

பி.வளா்மதி (அதிமுக) - 52,897

வித்தியாசம் - 8829.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com