நான் அவனல்ல பாணியில் பெண்ணை ஏமாற்றி மணக்க முயற்சி: மணமான தில்லுமுல்லு மாப்பிள்ளைக்கு வலை

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரனோ அல்லது சந்திரனோ எல்லா காலங்களிலும் எங்கிருந்தோ ஏமாற்றுவதற்கென்றே புறப்பட்டு வந்துகொண்டிருப்பார்கள்தான் போல
நான் அவனல்ல பாணியில் பெண்ணை ஏமாற்றி மணக்க முயற்சி: மணமான தில்லுமுல்லு மாப்பிள்ளைக்கு வலை


நான் அவனல்ல என்றொரு திரைப்படம், ஆள் மாறாட்டம் செய்து நிறைய திருமணங்களைச் செய்துகொள்வார் ஜெமினி கணேசன். தில்லுமுல்லு படத்தில் அண்ணன் - தம்பி என்று மீசையை வைத்துக்கொண்டு மாதவியிடம் டபாய்ப்பார் ரஜினிகாந்த்.

இந்தக் கதைகள் எல்லாம் திரைப்படங்களில்தான். நிஜ வாழ்விலும் அப்படியொருவர் மேற்கொண்ட மோசடி முயற்சியிலிருந்து தப்பித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளம்பெண்.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் வாலண்டர் பென்னட் ரயான், 30 வயது. போரூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

வேலை செய்த இடத்தில் அவருடன் பணிபுரிந்த ஆவடி வெள்ளனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணுக்கு வலை விரித்துக் காதல் வளர்த்துவந்துள்ளார். எல்லாம் வழக்கம்போல.

அடுத்தது, திருமணம்தான். அதற்கும் தயாராகிவிட்டார் ரயான். திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க, ரயானின் தாய் செலினா ரயான் உள்பட பலரும் வந்திருக்க, திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து, திருமணச் செலவுக்கு என்று கூறி ரூ. 3.5 லட்சம் பணமும் பெற்றுக்கொண்டிருக்கிறார் ரயான் வகையறாக்கள்.

இடைப்பட்ட காலத்தில் தெரிய வந்த ஒரு தகவலால் பெண்ணின் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்தனர் - ரயானுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது என்பதுதான் அது.

உடனே, ரயானின் வீட்டுக்கே சென்றுவிட்டனர் பெண் வீட்டார். அங்கே புகைப்படங்களும் இருந்திருக்கின்றன. என்னவென்று விசாரித்தால், அவர் நான் அல்ல, என்னுடைய சகோதரர், உடன் பிறந்தவர். நாங்கள் இரட்டையர் என்று கூறியிருக்கிறார் ரயான்.

சகோதரருக்குதான் மணமாகிவிட்டது. குடும்பத்துடன் துபையில் வசிக்கிறார் என்றெல்லாம் அளந்துவிட்டிருக்கிறார். கூடவே, தான் சொல்வதெல்லாம் உண்மை என்று காட்டுவதற்காகத் தன் (அண்ண)னுடைய  திருமணப் புகைப்படத்தில் தானும் இருப்பது போல படத்தைத் தயார் செய்தும் பெண் வீட்டாரிடம் காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை என சகலத்தையும் போலிகளாகத் தயார் செய்து காட்டியிருக்கிறார்.

சமாதானத்துக்கும் சந்தேகத்துக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்த பெண் குடும்பத்தினர், தீவிரமான விசாரணையை முடுக்கிவிட்டனர். வாலன்டர் திருமணமானவர்தான், குழந்தை இருக்கிறது என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது.

சரி என்று, இந்தாண்டு தொடக்கத்தில் சென்னை அரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் செய்த பெண் வீட்டார், தாங்கள் கொடுத்த பணத்தையும் திருப்பிப் பெற்றுத்தர வேண்டும் என்று புகார் செய்தனர்.

காவல்நிலையத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சமாதானப் பேச்சின் முடிவில் ரயானிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை வாங்கிப் பெண் வீட்டாரிடம் காவல்துறையினர் கொடுத்துள்ளனர்.

விட்டதடா சனி, விளாம்பழத்து ஓட்டோட என்று மீதிப் பணத்துக்குக் காத்திருந்தால், பணம் கிடைப்பதாகவே இல்லை. பெண் வீட்டில் எப்போது கேட்டாலும் இல்லை என்றிருப்பார்கள் போல.

கொஞ்சம் அழுத்திக் கேட்கவும் அந்தப் பெண்ணுக்கு ரயான்  கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

வேறு வழியில்லை என்று ஆவடி மகளிர் காவல்நிலையம் சென்றார் இளம்பெண். காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். ஏமாற்றிய பென்னட் ரயானும் மகனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அவருடைய தாய் செலினா ரயானும் இப்போது தேடப்படுகின்றனர்.

அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரனோ அல்லது சந்திரனோ எல்லா காலங்களிலும் எங்கிருந்தோ ஏமாற்றுவதற்கென்றே புறப்பட்டு வந்துகொண்டிருப்பார்கள்தான் போல, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com