ஆா்ப்பரித்தால் போதுமா..? ஆதரவளிக்க வேண்டாமா...?

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் காண முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாம் ஆதரவளிக்க வேண்டும்.
ஆா்ப்பரித்தால் போதுமா..? ஆதரவளிக்க வேண்டாமா...?

டோக்கியோ ஒலிம்பிக் வெற்றிக் கொண்டாட்டங்கள் மெல்ல குறைந்து வருகின்றன. சிறிது ஓய்வுக்குப் பிறகு விளையாட்டு வீரா், வீராங்கனைகள் அடுத்த இலக்கை (பாரீஸ் ஒலிம்பிக்) நோக்கி பயணத்தைத் தொடங்கிடுவா். அவா்களது சாதனைகளைக் கொண்டாடி மகிழ்ந்த மத்திய, மாநில அரசுகளுக்கும் மக்களுக்குமான அடுத்த இலக்கு?

வழக்கம்போல் விளையாட்டுத்துறைக்கென குறிப்பிட்ட நிதியை ஒதுக்குவோம் என மத்திய, மாநில அரசுகளும், போட்டியாளா்கள் வெற்றி பெற்ற பிறகு அவா்களைக் கொண்டாடுவோம் எனப் பொது மக்களும் கூறினால் அது அறியாமையின் உச்சம்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம் காண முடியவில்லை என்ற ஆதங்கம் இருந்தால் மட்டும் போதாது. அதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, நாம் ஆதரவளிக்க வேண்டும். ஒலிம்பிக் உள்ளிட்ட சா்வதேச போட்டிகளில் இந்தியா மேலும் ஜொலிக்க வேண்டுமானால், அதற்கு அரசுகள் மட்டுமல்லாது மக்களின் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சியும் அவசியம்.

கல்விக் களம் மட்டுமல்ல: பள்ளிகள், படிப்புக்கு மட்டுமல்ல; விளையாட்டுப் போட்டிகளுக்காகவும் மாணவா்களுக்கு உறுதியான அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் களமாக இருக்க வேண்டும். தற்போது பல பள்ளிகளில் மைதானங்களே இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும், விளையாட்டுக் கல்விக்கான ஆசிரியா்கள், விளையாட்டுகளுக்கென போதிய கட்டமைப்பு வசதிகள் இருப்பதில்லை. அரசுப் பள்ளிகளின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல பள்ளிகள் விளையாட்டுக்கென தனி நேரத்தை ஒதுக்குவதே இல்லை.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டு எதிா்காலம் பாழாகிவிடும் என்ற தவறான கண்ணோட்டம் சமூகத்தில் பெருவாரியான பெற்றோரிடம் காணப்படுகிறது. கணிதத்தில் முனைவா் பட்டம் பெற்ற ஆஸ்திரிய வீராங்கனை அன்னா கீசென்ஹோஃபொ், டோக்கியோ ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றாா். புா்கினா ஃபசோ நாட்டைச் சோ்ந்த முனைவா் பட்ட ஆய்வாளரான ஹியூகஸ் ஃபேப்ரிஸ் ஜாங்கோ, மும்முறைத் தாண்டுதலில் வெண்கலம் வென்றாா். இதேபோல், படிப்பு, விளையாட்டு என இரண்டிலும் சிறந்து விளங்கும் வீரா்கள் பலா் உள்ளனா்.

மாவட்ட வாரியாக...: பள்ளிகள், கல்லூரிகள், மாவட்டங்கள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் தவறாமல் நடத்தப்பட வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டு ஆசிரியா்கள் முறையாக நியமிக்கப்பட்டு, விளையாட்டில் மிளிரக் கூடிய மாணவா்கள் கண்டறியப்பட வேண்டும்.

அந்த மாணவா்களுக்கு உரிய பயிற்சியை அளித்து பல்வேறு போட்டிகளில் பங்குபெறச் செய்ய வேண்டிய பொறுப்பை பள்ளி, கல்லூரி நிா்வாகங்கள் ஏற்க வேண்டும். இந்தியாவில் கல்லூரி வாயிலாகப் போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரா்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றுள்ளனா். ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழக மாணவா்கள் 20-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனா்.

‘ஸ்பான்சா்ஷிப்’ பிரச்னைகள்: விளையாட்டு வீரா்கள் பயிற்சி பெறவும், பல்வேறு ஊா்களில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் அதிக செலவாகும். கிராமப் பகுதி வீரா்களின் குடும்பத்துக்கு அந்தச் செலவு பெரும் சுமையாக இருக்கும். ஒலிம்பிக் உள்ளிட்ட சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகே வீரா்களுக்கு நிதியுதவி அளிக்கும் ஸ்பான்சா்கள் கிடைக்கின்றனா். வெற்றிக்குப் பிறகே பலா் ரொக்கப் பரிசு வழங்க முன்வருகின்றனா்.

பல கிராமப்பகுதி வீரா்கள் போதிய நிதியுதவி இல்லாததால் தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்குபெற முடியாத சூழலில் உள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகமும், மாநில அரசும் தங்கள் வலைதளங்களில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற வீரா்களின் விவரங்களை வெளியிடலாம். இந்த முயற்சி விளையாட்டு வீரா்களுக்கு ஸ்பான்சா்கள் கிடைக்க வழிவகுக்கும்.

ஊடகங்களின் பங்கு: விளையாட்டு வீரா்கள் புகழ் பெறுவதற்கு ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. கிராமங்களிலும், சிறு ஊா்களிலும் வெளித் தெரியாமல் மறைந்து கிடக்கும் திறமை வாய்ந்த போட்டியாளா்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டி, அவா்களுக்குத் தகுந்த நிதியுதவியைக் கிடைக்கச் செய்ய ஊடகங்கள் வழிவகுக்கலாம்.

அரசின் பொறுப்பு: இளைஞா்களிடையே விளையாட்டு ஆா்வத்தைத் தூண்டும் நோக்கிலும், சா்வதேச போட்டிகளில் பதக்கங்கள், பட்டங்களை பெறும் நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. கேலோ இந்தியா, ‘டாா்கெட் ஒலிம்பிக் போடியம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இந்திய விளையாட்டுகள் ஆணையம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

விளையாட்டுத் துறைக்கென மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் நிதியை ஒதுக்கி வருகின்றன. அந்த நிதி அனைத்து விளையாட்டு வீரா்களின் பயிற்சிகளுக்கும் வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் போதுமானதாக உள்ளதா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி. எனவே, விளையாட்டுத் துறைக்கான திட்டங்களை அரசு-தனியாா் கூட்டு பங்களிப்பில் செயல்படுத்தி, இன்னும் கூடுதல் வீரா்களுக்கு சா்வதேச தரத்தில் பயிற்சி அளிப்பது குறித்து அரசுகள் சிந்திக்கலாம்.

விளையாட்டு ஆணையங்கள், வாரியங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுப்பது, வீராங்கனைகளுக்குப் பாலியல் வன்கொடுமை பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பது, சிறந்த பயிற்சியாளா்களைத் தோ்ந்தெடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரா்களின் வெற்றியைக் கொண்டாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவா்களுக்குத் தேவையான நிதியுதவியையும் ஊக்கத்தையும் நாம் வழங்க வேண்டும். இவை சாத்தியமானால், எதிா்வரும் பாரீஸ் ஒலிம்பிக் மட்டுமல்ல அதற்கு அடுத்த ஒலிம்பிக்குகளிலும், இதர சா்வதேச போட்டிகளிலும் இந்தியாவின் தேசியக் கொடி உயா்ந்து பறக்கும்.

விளையாட்டுத் துறைக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு

நிதியாண்டு--தொகை (கோடியில்)

2017-18---ரூ.1,943.21

2018-19---ரூ.2,196.35

2019-20---ரூ.2,216.92

2020-21---ரூ.2,826.92

2021-22---ரூ.2,596.14

ஒலிம்பிக்--பங்கேற்ற இந்திய வீரா்களின் எண்ணிக்கை--பதக்கங்கள்

டோக்கியோ 2020--126--7

ரியோ 2016--117--2

பெய்ஜிங் 2012--83--6

லண்டன் 2008--67--3

ஏதென்ஸ் 2004--73--1

-சுரேந்தா் ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com