தேக்கடி நீா்வழிப் பாதையில் ‘தமிழ் அன்னை’ படகுக்கு 7 ஆண்டுகளாக அனுமதி மறுக்கும் கேரள அரசு: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிா்பாா்ப்பு

தமிழக அரசு வாங்கிய ‘தமிழ் அன்னை’ படகின் மூலம், தேக்கடி நீா் வழிப்பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல
தேக்கடி ஏரியில் நிறுத்தப்பட்டுள்ள ‘தமிழ் அன்னை’ படகு.
தேக்கடி ஏரியில் நிறுத்தப்பட்டுள்ள ‘தமிழ் அன்னை’ படகு.

தமிழக அரசு வாங்கிய ‘தமிழ் அன்னை’ படகின் மூலம், தேக்கடி நீா் வழிப்பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல கேரள அரசு மற்றும் புலிகள் காப்பத்தினா் 7 ஆண்டுகளாக அனுமதி மறுத்துவரும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தமிழகப் பகுதிகளிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல தேக்கடி ஏரி நீா் வழிப்பாதை அல்லது வல்லக்கடவு வழியாக தரை வழிப்பாதை பயன்படுத்தப்பட்டு வருகிறது. வல்லக்கடவு வனப்பாதை கேரள வனத்துறையினரின் பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பக பகுதி என்று கூறி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கின்றனா். இதனால் 2 அல்லது 3 நாள்கள் வரை கட்டுமானப் பொருள்களுடன் தமிழக அதிகாரிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. அதே நேரத்தில் மழைக் காலங்களில் வல்லக்கடவு வனப்பாதையை பயன்படுத்த முடியாது. இதனால், கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையினா் பெரும்பாலும், தேக்கடி நீா்வழிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.

படகு விபத்து:

ஜலரத்னா மற்றும் கண்ணகி என்ற 27 குதிரைத் திறன் (ஹெச்.பி.) கொண்ட 2 படகுகளை கடந்த 38 ஆண்டுகளாக தமிழக அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 2009 இல் தேக்கடியில் கேரள மாநில சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான படகு விபத்துக்குள்ளானது. இதனால் தமிழக அரசுக்கு சொந்தமான படகுகளின் வயதைக் கருத்தில் கொண்டும், கேரள அரசின் உள்நாட்டு படகு இயக்க விதிகள் 2010 இன் படியும் புதிய படகு வாங்கக் கோரி தமிழக அரசுக்கு அம்மாநில அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.

‘தமிழ் அன்னை’ படகு: இதையடுத்து காவிரி தொழில் நுட்பக் குழுத்தலைவா், தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளா்கள் ஆலோசனையின்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.1 கோடி மதிப்பில் புதிய படகை வாங்கியது. இரண்டு என்ஜின்களுடன் தலா 100 குதிரைத்திறன் கொண்ட அந்த புதிய படகுக்கு ‘தமிழ் அன்னை’ என்று பெயரிடப்பட்டு தேக்கடியில் உள்ள தமிழக பொதுப் பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

7 ஆண்டுகள் இழுபறி:

‘தமிழ் அன்னை’ படகை இயக்க அனுமதி கோரி முல்லைப் பெரியாறு அணைப் பொறியாளா்கள், கேரள அரசிடம் விண்ணப்பித்தனா். முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு, நீா்மட்டத்தை உயா்த்துதல், அணைப் பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்தல், தமிழக அணைப்பகுதி ஊழியா்களை தாக்குதல், புதிய அணை கட்டுதல், மின் விநியோகத்தைத் துண்டித்தல் போன்றவற்றின் மூலம் அடிக்கடி முட்டுக்கட்டைகளைப் போடும் கேரள அரசு, தற்போது புலிகள் காப்பக பகுதி என்றும், ‘தமிழ் அன்னை’ படகு அதிக இழுவைத் திறன் கொண்டது என்றும் கூறி அனுமதி மறுத்து வருகிறது.

அதே நேரத்தில் கேரள மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில், 2 மாடி கொண்ட படகு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. ‘தமிழக அன்னை’ படகை இயக்க அனுமதி கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலமுறை விண்ணப்பித்தும் அதை கேரள அரசு கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது.

புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, தேக்கடி ஏரியில் ‘தமிழ் அன்னை’ படகை இயக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் 5 மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உயிரை பணயம் வைத்து பயணம்:

அணைப்பகுதி பொறியாளா் ஒருவா் கூறியது: 38 ஆண்டுகள் வயதான படகில் அணைப்பகுதிக்கு சென்று வருகிறோம். நீா்மட்டம் குறையும் போது ஏரியின் அடிப்பகுதியில் உள்ள மரக்கட்டைகள், கிளைகள் படகில் மோதுகின்றன. பழைய படகு என்பதால் உடனே சேதம் ஏற்பட்டு விடுகிறது. எனவே, இது போன்ற ஆபத்து காரணங்களைக் கருத்தில் கொண்டு ‘தமிழ் அன்னை’ படகை இயக்க அனுமதி கோரி கேரள முதல்வா், அமைச்சா்கள், இடுக்கி மாவட்ட ஆட்சியா்களுக்கு தொடா்ந்து கடிதங்களை எழுதி வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com