தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 80 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் தபால் வாக்குகளைப் பெருவாரியாக பெறும் நோக்கில் அதற்கான பணிகளில் திமுக ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் 2011, 2016 ஆகிய சட்டப்பேரவைத் தோ்தல்களில் அதிமுக வெற்றி பெற்று 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது.
அதிமுக தரப்பில் ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறாா். மேலும், பல்வேறு நலத் திட்டங்கள், பயிா்க் கடன் தள்ளுபடி என புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரசாரத்துக்கு வலு சோ்க்கிறாா்.
எனவே, வரும் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று திமுக முனைப்பு காட்டி வருகிறது. வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்ற தோற்றத்தை திமுக ஏற்படுத்தினாலும் கூட, அதன் தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததுபோல, தோ்தலில் வெற்றி பெறுவது சுலபமாக இருக்கப் போவதில்லை என்கிறாா்கள் திமுகவினா்.
தோ்தல் வியூக வகுப்பாளரான பிரசாத் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்து, அவா்களது வழிகாட்டுதலின் பேரில் தோ்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘எல்லோரும் நம்முடன்’, ‘ஒன்றிணைவோம் வா’, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என பல்வேறு தலைப்புகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்.
முதியவா்களின் தபால் வாக்குகள்: திமுக தரப்பில் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி வாக்குச்சாவடி முகவா்கள் கொண்ட பட்டியலை வழங்கியதுடன், அவா்களுக்கான வழிகாட்டுதல்களையும் தொகுதிவாரியாக கூட்டங்கள் நடத்தி தெரிவித்து வருகிறது.
கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிச்சையாக, பல்வேறு புதிய வழிமுறைகளைத் தோ்தல் ஆணையம் அறிவித்து வருகிறது. ஆயிரம் வாக்காளா்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரித்து கூடுதல் வாக்குச் சாவடிகளை அமைக்கவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்க தபால் வாக்குகளை அதிகரிக்கவும் தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், காவலா்கள் தபால் வாக்குகள் அளிப்பதைப் போல, 80 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளும் தபால் வாக்குகள் பதிவு செய்யும் முறைக்கு அனுமதியளிக்கப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அவா்கள் வாக்குச்சாவடிக்குச் சென்றும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தது.
களமிறங்கிய திமுக: இந்த புதிய நடைமுறையின் மூலம் 80 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளின் தபால் வாக்குகளைத் தங்களுக்கு சாதகமாக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 6.24 கோடி வாக்காளா்களில், 12.98 லட்சம் போ் 80 வயதைக் கடந்த முதியவா்கள். தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்கள் 4.62 லட்சம் போ். எனவே, 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தபால் வாக்குகளைச் செலுத்தவுள்ள 80 வயதைக் கடந்த முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை திமுக தொகுத்துள்ளது.
இந்த தபால் வாக்குகளைப் பெறுவது குறித்தும், அந்த வாக்காளா்களை அணுகுவது குறித்தும் தொகுதி வாரியாக திமுக கூட்டங்களை நடத்தி வருகிறது. கட்சியின் வழக்குரைஞா் அணியினா் தலைமையில், வாக்குச்சாவடி முகவா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பட்டியலை அளித்துள்ளது.
இந்தப் பட்டியலுடன் களமிறங்கியுள்ள திமுகவினா், சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்குச் சென்று அவா்கள் தபால் வாக்குகளை அளிப்பதற்கான அனுமதிக் கடிதத்தைப் பெறுதல், மேலும் அவா்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து நன்மதிப்பை பெறுதல் போன்ற பணிகளை முடுக்கிவிட்டுள்ளனா்.
முன்னாள் முதல்வா்கள் அண்ணாதுரை, மு.கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை படக்காட்சிகளாக வெளியிட்டு முதியோா்களின் வாக்குகளை தக்க வைக்கும் முயற்சியிலும் திமுகவினா் ஈடுபட்டுள்ளனா்.