பிரசார உத்தியில் திமுகவினர் அதிருப்தி!

திமுக பிரசார கூட்டங்களை தனியார் தேர்தல் உத்தி வகுக்கும் குழுவினர் கையகப்படுத்தி, அதிநவீன தொழில்நுட்ப (ஹைடெக்) முறையில் செயல்படுத்தி வருவது, அந்தக் கட்சியினரை அதிருப்தியடையச் செய்துள்ளது.
'ஹைடெக்' முறையில் திமுக நடத்தும் மக்கள் சபைக் கூட்டம்.
'ஹைடெக்' முறையில் திமுக நடத்தும் மக்கள் சபைக் கூட்டம்.



விழுப்புரம்: திமுக பிரசார கூட்டங்களை தனியார் தேர்தல் உத்தி வகுக்கும் குழுவினர் கையகப்படுத்தி, அதிநவீன தொழில்நுட்ப (ஹைடெக்) முறையில் செயல்படுத்தி வருவது, அந்தக் கட்சியினரை அதிருப்தியடையச் செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, பிரசார பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளன. குறிப்பாக, கரோனா பொதுமுடக்கக் காலத்தில் இணையவழியில் தேர்தல் பணிகளைத் தொடங்கிய திமுக, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு விதிகளைத் தளர்வு செய்து அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, மக்கள் சபைக் கூட்டங்கள் என்ற பெயரில் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள பிரபல அரசியல் செயல்பாட்டாளர் பிரசாந்த் கிஷோரின் "ஐ-பேக்' நிறுவனக் குழுவினர், பல்வேறு வகைகளில் பிரசார வடிவங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால், கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சிப் பணிகளில் சோர்வடைந்த திமுக நிர்வாகிகளை அதிருப்திக்குள்ளாக்கும் வகையில், இந்தத் தனியார் குழுவினரின் செயல்பாடுகள் உள்ளதாக அக்கட்சியினர் குமுறுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் சென்னையில் நடத்தப்பட்ட கட்சி ஆலோசனைக் கூட்டத்தில்கூட இந்தக் குழுவினரின் கெடுபிடிகளால் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்திக்குள்ளாகினர். இதனிடையே, திமுக நடத்தி வரும் மக்கள் சபைக் கூட்டங்கள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என கட்சி நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

இந்தக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலினின் ஒவ்வொரு அசைவையும் தனியார் குழுவினரே தீர்மானிக்கின்றனர். ஸ்டாலின் வரும் பாதைகள், வழியில் அவரது வாகனத்தை எங்கு நிறுத்துவது, யாரைச் சந்திப்பது, கூட்டங்களில் பேச வேண்டிய கருத்துகள், மக்கள் தரப்பில் எழுப்ப வேண்டிய கேள்விகள், கேள்வி எழுப்ப வேண்டியவர்களைத் தேர்வு செய்வது, கேள்விகளுக்கு தர வேண்டிய பதில்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, குறிப்புகள் ஸ்டாலினிடம் முன்கூட்டியே அந்தக் குழுவினரால் வழங்கப்படுகின்றன.

வடமாநில அரசியலுக்கேற்ப இந்தத் தனியார் குழுவினர் தேர்தல் உத்தி வகுத்து வருகின்றனர். தமிழக அரசியல் களச் சூழல், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த தெளிவில்லாத ஆய்வுகள், புள்ளிவிவரங்களுடன் இவர்கள் அளிக்கும் பிரசார உத்தி குறிப்புகளை முழுமையாக நம்பி மு.க.ஸ்டாலின் செயல்படுவது தொண்டர்களுக்கு ஏமாற்றம் தருவதாக உள்ளது. 

நெகிழியாலான பிரத்யேக பந்தல்கள், பச்சை நிற கம்பளி தரை விரிப்புகள், பெண்கள், பெரியவர்கள் தனித்தனியாக அமர கேபின்கள் என எல்லாமே "ஹைடெக்' முறையில் வடிவமைக்கப்படுகிறது. இந்தக் கூட்டங்களில் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பில் உள்ள எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள்கூட மேடைப் பகுதியிலிருந்து ஓரம் கட்டப்படுகின்றனர். 

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பங்கேற்கும் மக்கள் சபைக் கூட்டங்களிலும் இதே நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதுபோன்ற செயற்கைத்தனமான செயல்பாடுகள் பொதுமக்கள், நிர்வாகிகளிடமிருந்து கட்சியையும், கட்சித் தலைமையையும் அன்னியப்படுத்தும் என்கின்றனர்.

இதுகுறித்து கட்சியினர் கூறியதாவது: தமிழக அரசியலில் களச் செயல்பாடுகளில் திமுகவினருக்கு நிகராக யாரும் இல்லை. அவர்கள் கட்சி, கொள்கைகள் மீதான தீவிரப் பற்று, கட்சியை ஆட்சி பீடத்தில் ஏற்றத் துடிக்கும் முனைப்பு போன்ற உணர்வுடன் வாக்குகளைச் சேர்ப்பதில் அயராது உழைப்பவர்கள். தமிழக அரசியலில் சாணக்கியர்களாகக் கருதப்படும் திமுக தொண்டர்களின் பிரசார பணிகள், செயல்பாடுகளை, ஒரு தனியார் நிறுவனம் கட்டுப்படுத்துவதும், திட்டமிடுவதும் தேர்தல் களத்தில் எதிர்பார்க்கும் பலனைத் தராது.

அண்மையில் இந்தக் குழுவினரின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்ட இணையவழி கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்ட குளறுபடிகளே உதாரணம். அதாவது, மாற்றுக் கட்சி முக்கிய நிர்வாகிகளைக்கூட இணையவழி மூலம் திமுக உறுப்பினராக்கி விமர்சனத்தை ஏற்படுத்தியது.

கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியை சமூக வலைதளங்களில் பிரசாரத்துக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் பயன்படுத்துவது மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். ஆனால், தனியார் குழுவினரின் "வியாபாரத் தொடர்புகள்' போன்ற பிரசார வடிவங்கள், ஒரு பாரம்பரிய கட்சியின் தலைமையுடன் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு உள்ள பிணைப்பில் விரிசலை ஏற்படுத்தவும், களச் செயல்பாடுகளில் தொய்வை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைப் பாதிக்கவுமே வழிவகுக்கக் கூடும் என்கின்றனர்.

தனியார் குழுவினர் தரும் முன் தயாரிப்பு குறிப்புகளைக் கொண்டு திமுக நடத்தும் மக்கள் சபை கூட்டங்களில் அக்கட்சி 10 சதவீத அளவுக்கு வாக்குகளை இழக்கும் என தமிழக அமைச்சர் க.பாண்டியராஜன் அண்மையில் கருத்து தெரிவித்திருந்ததை திமுக தொண்டர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதுகுறித்து கட்சியின் மாநில நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: தனியார் தேர்தல் உத்தி வகுக்கும் குழுவினர் வடிவமைத்த "விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்', "எல்லோரும் நம்முடன்',  "ஒன்றிணைவோம் வா', "அதிமுகவை நிராகரிப்போம்' என்ற பெயரில் நடத்தப்படும் மக்கள் சபைக் கூட்டங்கள் போன்ற அனைத்து பிரசார வடிவங்களும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. 

இதற்கு சமூக வலைதளங்கள், பொதுமக்களிடம் காணப்படும் வரவேற்பே சான்று. அதனாலேயே ஆளும் கட்சி தரப்பு, திமுகவின் புதிய வடிவிலான பிரசார கூட்டங்களுக்கு தடையையும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறது. ஆகவே, திமுகவின் பிரசாரம் சரியான பாதையில் செல்கிறது. தேர்தலில் எங்கள் கட்சிக்கு வெற்றி உறுதி என்கின்றனர் அவர்கள்.

பெரும் தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் தேர்தல் உத்தி வகுக்கும் குழுவினரின் செயல்பாடுகள், திமுகவுக்கு எந்தளவு பலனைத் தரப்போகிறது என்பதை வரும் தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com