
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகத்தில் பல்வேறு இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர். துணை அதிபர் தொடங்கி கரோனா தொற்று தடுப்பு குழு வரை இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.
கமலா ஹாரீஸ்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரப்புரம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க துணை அதிபா் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரீஸ் பைடன் நிர்வாகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நபராக கருதப்படுகிறார்.
விவேக் மூர்த்தி

அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தில் கரோனா தொற்று தடுப்பு பணிக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் பொது சுகாதாரம் மற்றும் ஆயுதப்படை குழுவின் மருத்துவ சேவைக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
வனிதா குப்தா

முன்னாள் அதிபர் ஒபாமா நிர்வாகத்தின் கீழ் சிவில் உரிமைகள் பிரிவின் தலைவராக பணியாற்றிய 45 வயதான வனிதா குப்தா தற்போது பைடன் நிர்வாகத்தில் அரசுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும் முதன்மை சட்ட அதிகாரியாக (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கப்பட்டுள்ளார்.
சாந்தி கலதில்
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவைப் பூர்வீகமாகக் கொண்ட 49 வயதான சாந்தி ஜனநாயக ஆய்வுகளுக்கான பன்னாட்டு மன்றத்தின் மூத்த இயக்குநராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாந்தி அதிபர் பைடன் நிர்வாகத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேதாந்த் படேல்

வெள்ளை மாளிகையின் உதவி பத்திரிகை செயலாளராக வேதாந்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த வேதாந்த் படேல் பைடனின் பிரசாரத்தில் பிராந்திய தகவல் தொடர்பு இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீரா பாசிலி

காஷ்மீரை பூர்வீகமாகக் கொண்ட சமீரா பெடரல் ரிசர்வ் வங்கியின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான இயக்குநராக பணியாற்றியவர். பைடனின் தேசிய பொருளாதார கவுன்சிலில் துணை இயக்குநராக நியமனம் பெற்றுள்ள இவர் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயிஷா ஷா
காஷ்மீரில் பிறந்த ஆயிஷா, வட கரோலினாவில் உள்ள டேவிட்சன் கல்லூரியில் பட்டம் பெற்றார். வெள்ளை மாளிகையின் டிஜிட்டல் திட்ட மேலாளர்களில் ஒருவராக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆயிஷா ஷா முன்பு பைடன் மற்றும் கமலா ஹாரீஸ் பிரசாரத்தில் இணைய கூட்டு மேலாளராக பணியாற்றியுள்ளார்.
வினய் ரெட்டி
கர்நாடக மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள பொதிரிரெட்டிபெட்டா எனும் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் வினய் ரெட்டி. அதிபராக பதவியெற்ற பைடனின் தொடக்க உரையைத் தயாரித்தவர் என அறியப்படும் வினய், பைடன் துணை அதிபராகப் பணியாற்றி காலத்தில் அவரின் தலைமை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். மேலும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் பைடனின் உரைகளைத் தயாரித்தவரும் இவரே.
சோனியா அகர்வால்
பைடனின் முக்கிய வாக்குறுதியான காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவில் சோனியா அகர்வால் பணியாற்ற உள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் ஆற்றல் குறித்த நிபுணரான இவர் கடந்த காலத்தில் அமெரிக்காவின் எரிசக்தி கொள்கையை உருவாக்கியுள்ளார். காலநிலை கொள்கையின் மூத்த ஆலோசகராக சோனியா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரினா சிங்

துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சப்ரினா சிங் கமலா ஹாரீஸின் துணை பத்திரிகை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக பிரசார நேரத்தில் கமலா ஹாரீஸின் பத்திரிகை செயலாளராக இருந்த சப்ரினா மைக் ப்ளூம்பெர்க், கோரி புக்கர் மற்றும் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் பணியாற்றியுள்ளார்.
நேஹா குப்தா
சான் பிரான்சிஸ்கோவில் ஒரு துணை நகர வழக்கறிஞராக இருந்த நேஹா குப்தா, பைடன் மற்றும் கமலா ஹாரீஸ் பிரசாரத்தின் விவாத தயாரிப்புக் குழுவில் பணியாற்றியுள்ளார். தற்போது வெள்ளை மாளிகையின் இணை ஆலோசகராக பணியில் இணைகிறார்.
உஸ்ரா ஜியா
காஷ்மீர் வம்சாவளியான உஸ்ரா பைடன் நிர்வாகத்தில் சிவில் பாதுகாப்புக்கான துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாலா அடிகா
கர்நாடகத்தின் குண்டாபூரை பூர்வீகமாகக் கொண்ட மாலா அடிகா ஜோ பைடனின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் பிரசாரத்தின் கொள்கை இயக்குநராகப் பணியாற்றியுள்ள மாலாவின் தாயார் வேலூரில் மருத்துவம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஒபாமா நிர்வாகத்தில் மாலா கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டங்களுக்கான துணை உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார்.
செலின் கவுண்டர்

கரோனா கட்டுப்பாட்டுக்காக அமெரிக்காவில் அதிபர் (தேர்வு) ஜோ பைடன் அமைத்துள்ள சிறப்புக் குழுவில் ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் செலின் ராணி கவுண்டர் இடம் பெற்றுள்ளார்.
இவர்களைத் தவிர இந்திய அமெரிக்கர்களாக்ன நீரா டாண்டன், அதுல் கவாண்டே, செலின் கவுண்டர், பாரத் ராமமூர்த்தி, மஜு வர்கீஸ் உள்ளிட்ட பலரும் பைடனின் நிர்வாகத்தில் முக்கியமான பதவிகளில் இடம்பெற்றுள்ளனர்.