மங்களகரமாக மஞ்சளில் தொடங்கி வைர பட்டன் விருது வாங்கிய 'வில்லேஜ் குக்கிங் சேனல்'

இளைஞர்களின் படைப்பாற்றல் திறமையை அங்கீகரித்து மக்களிடம் அத்திறமைகளைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது யூடியூப்.
மங்களகரமாக மஞ்சளில் தொடங்கி வைர பட்டன் விருது வாங்கிய 'வில்லேஜ் குக்கிங் சேனல்'

இளைஞர்களின் படைப்பாற்றல் திறமையை அங்கீகரித்து மக்களிடம் அத்திறமைகளைக் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது யூடியூப். இன்றைய இளம் தலைமுறையினரின் ஆதர்ச நாயகர்களாக யூடியூபர்கள் வலம் வரத் தொடங்கியுள்ளனர். படித்து முடித்து பிரபல யூடியூபராக வேண்டும் என தற்கால குழந்தைகள் நினைக்கும் அளவுக்கு விரிந்து பரந்திருக்கிறது யூடியூப்.

உலகம் முழுவதும் 50 மில்லியன் யூடியூப் படைப்பாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  உலகின் மிக பிரபலமான யூடியூபராக ஸ்வீடனைச் சேர்ந்த பியு டீ பே (Pew die pie) கருதப்படுகிறார். யூடியூபில் இவர் வெளியிடும் விடியோக்களுக்கு உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு கிடைக்கிறது. கடந்த 2010-ஆம் ஆண்டு யூடியூப் சேனல் தொடங்கினார். கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை இவரது சந்தாதாரர்கள் 105 மில்லியன். இவர் தனது யூடியூப் சேனலை அமெரிக்காவில் பதிவு செய்துள்ளார்.

சுடுதண்ணீர் வைப்பது தொடங்கி சுடுகாட்டுக்கு சுலபமாக செல்வது வரை தேவையான அனைத்துத் தகவல்களையும் யூடியூப் விளாகர்கள் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் உலகம் முழுவதும் யூடியூப் சேனல்கள் பல்வேறு வகையான கருத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படுகிறது. அவற்றுள் உலக அளவில் முதலிடத்தில் இருப்பது பொழுதுபோக்கு தொடர்பானவை. உலகின் மிக பிரபலமான பியு டீ பே (Pew die pie) உள்பட அதிகமாக வருவாய் ஈட்டக்கூடிய 72 பேரின் யூடியூப் சேனல்கள் பொழுதுபோக்கு வகையைச் சேர்ந்தவைகளே.

உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவை விளையாட்டுக்கள் சார்ந்த யூடியூப் சேனல்கள். உலக அளவில் அதிகமாக வருவாய் ஈட்டக்கூடிய 25 பேரின் யூடியூப் சேனல்கள் விளையாட்டை மையமாக கொண்டவை. மூன்றாவது இடத்தில் "இது எப்படி " என்ற தலைப்பின் கீழ் விவரிக்கும் யூடியூப் சேனல்கள் உள்ளன. யூடியூப் மூலம் அதிகமான வருவாய் ஈட்டும் 187 பேரில் 18 பேர் இந்த வகையான யூடியூப் சேனல்களை நடத்துகின்றனர்.

யூடியூப் ஒருவரது கருத்தாக்கத்தை வெளியே கொண்டு வர உதவுவதுடன் அவர்களுக்கு வருவாயையும் கொடுத்தே அழகு பார்க்கிறது. அதோடு மட்டுமின்றி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சந்தாதாரர்களை அந்த யூடியூப் சேனல் அடையும் போது, சந்தாதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெள்ளி, தங்கம், வைர பட்டன்கள் என அழைக்கப்படும் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அதாவது ஒரு யூடியூப் சேனல் 1 லட்சம் சந்தாதாரர்களை எட்டும் போது வெள்ளி பட்டன், 10 லட்சம் சந்தாதாரர்களை எட்டும் போது தங்க பட்டன், 1 கோடி சந்தாதாரர்களை எட்டும் போது வைர பட்டன் வழங்கப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள சின்னவீர மங்களம் என்ற கிராமத்தைச் சேர்ந்த 'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற சமையல் விடியோக்களைப் பதிவிடும் யூடியூப் சேனல் அண்மையில் 1 கோடி சந்தாதாரர்களை எட்டியது. இதற்காக யூடியூப் நிறுவனம் அவர்களுக்கு வைர பட்டன் விருது வழங்கியுள்ளது. இந்த வைர பட்டன் விருதை தென்னிந்தியாவில் பெறும் முதல் யூடியூப் சேனல் வில்லேஜ் குக்கிங் சேனல் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த சேனலின் ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கூறியதாவது: விவசாயம்தான் எங்களின் பிரதானத் தொழில். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது வழக்கம். இந்த சூழலில் மூத்தவர் பெரியதம்பி , அய்யனார், முருகேசன், தமிழ்செல்வன், முத்துமாணிக்கம் மற்றும் நான் எல்லோரும் சேர்ந்து  யூடியூப் சேனல் தொடங்க முடிவெடுத்தோம். கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கினோம். முதல் 8 மாதங்களுக்கு மக்களிடம் பெரிதாக சென்றடையவில்லை. ஆனாலும் மக்கள் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் கைவிடவில்லை. அவர்களால் கிடைத்துள்ள விருதாகவே இதனை நாங்கள் பார்க்கிறோம்.ஒரு லட்சம், 10 லட்சம், 1 கோடி இதெல்லாம் வெறும் எண்ணிக்கை தான், எங்கள் வெற்றியை மக்கள் தங்களது வெற்றியாக பார்க்கின்றனர். அதைத்தான் நாங்கள் பெரிய விருதாக கருதுகிறோம் என்றார்.

மங்களகரமாக மஞ்சளில் தொடங்கி சமைக்கும் இவர்களது விடியோக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் பலர். நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்து சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் இவர்களுடன் சேர்ந்து காளான் பிரியாணி சமைத்து சாப்பிட்ட விடியோ மிக பிரபலமானது.

செல்லிடப்பேசியில் இணையதளமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழியும் இந்த காலக்கட்டத்தில் படைப்பாற்றலை முறையாகப் பயன்படுத்தினால் வைர பட்டன் விருதையும் வாங்க முடியும் என தமிழக இளையோருக்கு நம்பிக்கையை விதைத்துள்ளனர் இந்த வில்லேஜ் குக்கிங் குழுவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com