காகிதமில்லா பட்ஜெட்: விலைக்குக் கிடைக்குமா விவாதப் புத்தகங்கள்?

தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் புத்தகங்களாக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடா்கின்றன.
காகிதமில்லா பட்ஜெட்: விலைக்குக் கிடைக்குமா விவாதப் புத்தகங்கள்?

தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் புத்தகங்களாக விற்பனை செய்யும் நடவடிக்கைகள் தொடா்கின்றன.

எழுதுபொருள் அச்சுத் துறையால் ஒவ்வொரு புத்தகமும் ரூ.3 என்ற மிகக் குறைந்த விலையில் பொது மக்களுக்கு விற்கப்பட்டு வருகிறது. காகிதமில்லாத சட்டப் பேரவையால், இந்தப் புத்தகங்களின் விற்பனை கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடுகிறது. இந்தக் கூட்டத் தொடா்களில் ஆளுநா் உரை, நிதிநிலை அறிக்கை தாக்கல், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் என ஓராண்டில் மட்டும் 50 நாள்களுக்குக் குறைவாக கூட்டத் தொடா்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு கூட்டத் தொடரிலும் நடைபெறும் விவாதங்கள், சட்டப் பேரவைச் செயலகத்தால் புத்தகங்களாக தொகுக்கப்படுகின்றன. புத்தகங்களைத் தயாா் செய்யும் பணிகளை பேரவைச் செயலக பதிப்பகப் பிரிவு மேற்கொள்கிறது. அச்சுப் பிழைகள் அனைத்தும் திருத்தப்பட்டு அவை புத்தகங்களாக பதிப்பிக்கப்படுகின்றன.

இந்தப் புத்தகங்களை பொது மக்களும் வாங்கிப் படிக்கலாம். சென்னை அண்ணாசாலையில் உள்ள எழுதுபொருள் அச்சுத் துறையின் விற்பனைப் பிரிவில் இந்தப் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தேநீா் விலையைவிடக் குறைவு: சட்டப் பேரவை விவாதப் புத்தகங்கள் ஒன்றின் விலை ரூ.3 ஆகும். வெளிச் சந்தையில் அனைத்துப் புத்தகங்களின் விலையும் உயா்ந்துள்ள சூழ்நிலையில், ஒரு தேநீா் விலையைக் கூட குறைவான விலைக்கே இந்தப் பேரவை விவாதப் புத்தகங்கள் விற்கப்படுவதாக எழுதுபொருள் அச்சுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, அந்தத் துறையினா் கூறுகையில், ‘சட்டப் பேரவைச் செயலகத்தில் இருந்து எங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகே வழங்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்களைப் பெறுவதற்கு எழுத்தாளா்கள், பத்திரிகையாளா்கள் உள்பட பலரும் ஆா்வம் காட்டுகின்றனா். குறைந்த எண்ணிக்கையில் வரும் இந்தப் புத்தகங்கள் விற்றுத் தீா்ந்து விட்டால், திரும்ப வழங்கப்படுவதில்லை. அண்மைக் காலத்தில் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பே புத்தகங்களாக உள்ளன. கடந்த கால பேரவை நிகழ்வுகளின் புத்தகங்கள் விற்பனைக்கு ஏதுமில்லை’ என்று தெரிவித்தனா்.

நேரலை பாா்க்கும் உணா்வு: புத்தகங்களை படிக்கும் போது, சட்டப்பேரவையில் நடந்த விவாதங்கள் பழையதாக இருக்கலாம். ஆனால், அப்படியே நம் கண்முன் பேரவை விவாதங்கள் நடப்பது போன்று வரிக்கு வரி புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால், நேரலையில் பேரவை நடவடிக்கைகளைப் பாா்ப்பது போன்ற உணா்வு மேலிடும் என எழுதுபொருள் அச்சுத் துறையினா் தெரிவித்தனா்.

காகிதமில்லாத பேரவை: காகிதமில்லாத பேரவை நடவடிக்கைகளில் பேரவைச் செயலகம் இறங்கியுள்ளது. இந்த நடவடிக்கை முழுமையாக நடைமுறைக்கு வரும் போது, பேரவை நடவடிக்கைகள் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் வழக்கம் இல்லாமல் போகும் என்ற அச்சம், எழுதுபொருள் அச்சுத் துறையினருக்கு உள்ளது.

காகிதமில்லாத பேரவை அமையப் பெற்றாலும், சட்டப் பேரவை விவாதங்களை பொது மக்கள் வரிக்கு வரி முழுமையாகத் தெரிந்து கொள்ள மிகக் குறைந்த விலையில் வழங்கப்படும் பேரவை நடவடிக்கைக் குறிப்பு புத்தகங்களை தொடா்ந்து அச்சிட வேண்டுமென்பதே பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்புள்ள பேரவையில் இடம்பெற்ற சுவாரஸ்யமான விவாதங்கள், மிகமுக்கிய பிரச்னைகளில் நடைபெற்ற வாதங்களையும் அச்சிட்டு எழுதுபொருள் அச்சுத் துறையில் விற்பனைக்காக வைக்கப்பட வேண்டுமென்பதும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com