மீன்வள மசோதா என்ன சொல்கிறது? மீனவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள்?

நாடு முழுவதும் உள்ள கடலோர கிராமங்களிலிருந்து படகுகள், சிறுசிறு கப்பல்கள் மூலம் கடலுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலைவிட்டே செல்லும் அவல நிலை ஏற்படும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021 அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடம் நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மருத்துவம், மின்சாரம், தொழில்நுட்பம், மீன்வளம், ஆயுத தொழிற்சாலை உள்ளிட்டவை தொடர்பான 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களும், 5 அவசரச் சட்டங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. 

இவற்றில், முக்கியமான ஒன்று, இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021. இந்த சட்டம் இயற்றப்பட்டால் நாட்டிலுள்ள பெருமளவிலான பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிடும் நிலை உருவாகும் என்ற அச்சத்தில் மீனவ சமூகத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாகத் தாக்கல் செய்யப்படவுள்ள மீன்பிடி மசோதா மூலம், இந்திய கடற்பகுதி மூன்றாக பிரிக்கப்படவுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் வரை பிராந்திய கடல், 12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம், 200 கடல் மைலுக்கு அப்பால் உள்ள பன்னாட்டுக் கடல் பகுதி என வரையறுக்கப்படவுள்ளது.

இதில் நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல் தொலைவு வரையில் மட்டுமே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்தப் பகுதிகளில் மட்டுமே நாட்டு ப் படகு, விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் பாரம்பரிய மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

12 கடல் மைல் முதல் 200 கடல் மைல் வரையிலான சிறப்புப் பொருளாதார மண்டலமானது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்தப் பகுதிகளில் மீன் பிடிக்க வேண்டுமெனில், மத்திய அரசால் நியமிக்கப்படும் கடற்படை அதிகாரிகளிடம் கட்டணம் செலுத்தி, அனுமதி பெற்ற பிறகே மீன் பிடிக்க இயலும். 

பல தலைமுறைகளாக மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் உள்ளூர் மீனவர்கள் நிலப்பரப்பிலிருந்து 12 கடல் மைல்கள் வரையில் மட்டுமே மீன் பிடிக்கச் செல்ல வேண்டுமெனவும், அவர்களும் ஒரு குறிப்பிட்ட மதிப்புள்ள அளவுக்கு மட்டுமே மீன்களைப் பிடிக்க வேண்டுமெனவும் விதிமுறை குறிப்பிடுகிறது.

மேலும், 12 மைல்களைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றால் அதற்கென பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போதும் அதிகாரிகளிடம் அனுமதி மற்றும் மீன்பிடி உரிமம் உள்ளிட்டவை பெற்றால் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இதில் மிகவும் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று, மீன்பிடி உரிமம் பெற வணிகக் கப்பல் சட்டம் 1958இன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட வேண்டுமெனில், உரிமம் பெற்ற ஓட்டுநர் ஒருவரும் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் மீன்பிடிக் கலத்தில் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது.  

மேலும், மீன்பிடித் தடைக்காலம், மீன் பிடிக்க நேரம் நிர்ணயிப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் கைகளிலிருந்து மத்திய அரசின் கைகளுக்கு மாறும் சூழல் உருவாகவுள்ளது.
 
இந்த விதிமுறைகளில் ஏதேனும் ஒன்றை மீறிக் கடலுக்குச் சென்றால், ரூ. 5 லட்சம் வரை அபராதம், சிறைத் தண்டனை மற்றும் மீன்பிடிக்க வாழ்நாள் தடை விதிப்பு என மீனவர்களைக் குற்றவாளியாக்கும் அம்சங்களும் மசோதாவில் உள்ளன.  

இதற்கிடையே மத்திய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தால் மீனவர்களுக்கு சிறை தண்டணை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மத்திய அரசின் அதிகாரிகள் தவறுதலாகப் பயன்படுத்தலாம் என்ற அச்சமும் பரவலாக நிலவுகிறது. 

பரந்து விரிந்த கடற்பரப்பில் தமிழகத்திலிருந்து குஜராத் மாநிலம் வரையிலும், கேரளத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் வரையும் சென்று மீன் பிடித்தால்கூட அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணத்தையே மீனவர்களால் ஈட்ட முடியும் என்ற நிலையில், கழிவுகளால் நிரம்பியிருக்கும் கடலின் தொடக்க - கரையையொட்டிய பகுதிகளில் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என கூறினால் டீசல் விற்கின்ற விலையில் எரிபொருளுக்குக்கூட பணம் ஈட்ட முடியாத நிலை மட்டுமே உருவாகும் என்கிறார்கள் மீனவர்கள்.

இவ்வளவு காலம் இந்திய கடல் எல்லையைத் தாண்டி அண்டைநாட்டுக் கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டு, சிறைத் தண்டனைக்கு உள்ளாகிவந்த நிலையில், சொந்த நாட்டு கடல் பரப்பிலேயே எல்லை நிர்ணயம் செய்து, சாலையில் சுங்கக்கட்டணம் வசூல் செய்வது போல கடலில் மீன் பிடிக்கச் செல்வதற்கும் கட்டணம் வசூலிக்கும் மோசமான நிலை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

"இந்திய கடல்சார் மீன்வளச் சட்டம் இயற்றி நடைமுறைக்கு வந்துவிட்டால், நாடு முழுவதும் உள்ள கடலோர கிராமங்களிலிருந்து படகுகள், சிறுசிறு கப்பல்கள் மூலம் கடலுக்குச் செல்லும் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலைவிட்டே செல்லும் அவல நிலை ஏற்படும்.

"இதற்கிடையே இந்த சட்டத்தில், இந்திய கடற்பரப்பில் வெளிநாட்டு கப்பல்கள் வந்து மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படும் என சாதகமான அம்சத்தை தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான அம்சங்கள் மீனவர்களின் நலனுக்கு எதிராகவே உள்ளன.

"முக்கியமாக மீனவர் யார் என்று மசோதாவில் ஒரு இடத்தில்கூட கூறவில்லை. இதன் மூலம், மீன் பிடிக்கும் அனைவரும் மீனவர்கள் என்ற நிலை உருவாகி, தனியார் நிறுவனங்களின் பெரிய கப்பல்கள் சிறப்பு பொருளாதார மண்டலப் பகுதியில் மீன்பிடிக்க எளிதாக அனுமதி பெறும் நிலை உருவாகும்" என்று மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த மசோதாவை கைவிடக்கோரி, தமிழகத்தில் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள 12 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் உள்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் மசோதாவை தாக்கல் செய்யக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய கடல்சார் மீன்வள மசோதாவுடன், மாநில அரசுகளின் பொறுப்பிலுள்ள சிறிய துறைமுகங்களையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் மசோதாவும் நிறைவேறவுள்ளது. இதன் மூலம், கடல்சார் தொழில் முழுவதும் மத்திய அரசின் கைக்கு சென்றுவிடும்.
 
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, இரு அவைகளிலும் விவாதமின்றி எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியிலும் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்கள் போல இந்தச் சட்டத்தையும் நிறைவேற்றி அமல்படுத்த வாய்ப்புள்ளதாக மீனவர்களிடம் அச்சம் நிலவி வருகிறது. 

இத்தகைய சூழலில், நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது முதலே பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கையிலெடுத்த எதிர்க்கட்சியினர், சாதாரண மக்களின் பிரச்னைகளான தடுப்பூசி தட்டுப்பாடு, நூறைக் கடந்த பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை இன்னும் பேசவில்லை.

தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சியினர் வருகின்ற நாள்களில் மக்களின் பிரச்னைகள் பற்றியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கவுள்ள மீன்வள மசோதாவுக்கு எதிராகவும் மக்களின் பிரதிநிதிகளின் குரல்கள் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் மீன் தொழிலை நம்பியுள்ள மக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com