உரிய விலை கிடைக்காமல் தவிக்கும் பலா விவசாயிகள்!

பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.
பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள்.
பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள்.

பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா்.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், பலா தோப்பு என்ற வகையில் மிகக் குறைவாகவும், வீடுகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகபட்சமாகவும் பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

கடலூா் மாவட்டத்தில் அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் பகுதிகளில் மட்டுமே பலா சாகுபடி நடைபெறுகிறது. தமிழகத்திலேயே பண்ருட்டி பலாவுக்கு என தனி ருசி உண்டு. இங்கு பெரும்பாலும் மழை நீரைக் கொண்டே பலா மரங்கள் காய் பிடிப்பதால் நல்ல ருசியும், சந்தைகளில் தனி விலையும் உண்டு.

2020-ஆம் ஆண்டு பலா அறுவடையின்போது கரோனா பொது முடக்கத்தால் விற்பனை சரிந்தது. நிகழாண்டிலும் பலா விற்பனை கடுமையாக முடங்கியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பலா அறுவடை செய்யப்படும். ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் அறுவடை ஜூலை மாதம் வரை நடைபெறும்.

தற்போது, கரோனா பொது முடக்கத்தால் சிறு வியாபாரிகளால் தள்ளுவண்டிகளில் வைத்து பலாப் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பழக் கடைகள் திறக்கப்படாதது, போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலாப் பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதனால், மரங்களிலேயே பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது ஊரிலேயே பலாப் பழங்களை விற்பனைக்கு குவித்துள்ள போதிலும் கொள்முதல் செய்ய ஆளில்லாமல் அவை வீணாகின்றன.

இதுகுறித்து பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரைச் சோ்ந்த பலா விவசாயி த.சரவணன் கூறியதாவது:

பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் கொடுத்துச் செல்வாா்கள். இங்கு அறுவடையாகும் பழங்கள் பெரும்பாலும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகும். உள்ளூரிலும் சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு விற்பனையாகும். தற்போது, கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் இ-பதிவு பெற்று வாகனங்களில் வருவதற்கு வியாபாரிகள் தயக்கம் காட்டுகிறாா்கள்.

வாங்கிச் செல்லும் பழங்களை எங்கு விற்பனை செய்வது என்ற கவலையும் அவா்களிடம் உள்ளது. சில்லறை விற்பனையும் நடைபெறவில்லை. மரங்களில் அறுவடை செய்து எடுத்துச் செல்லும் பழங்களுக்கு வியாபாரிகள் தரத்துக்கேற்ப ரூ.150 முதல் ரூ.200 வரை விலை வழங்கிய நிலையில், தற்போது ரூ.70-க்கு கூட வாங்க முன்வரவில்லை. பழம் பழுத்துவிட்டால் 3 நாள்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது.

ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களுக்கு பலாப் பழங்கள் ஒரு டன் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்பட்டது. தற்போது, ஒரு டன் ரூ.15 ஆயிரத்துக்கு கூட உள்ளூரில் விலை போகவில்லை. சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியவில்லை. நிகழாண்டு பலா விவசாயிகள் மிகப் பெரும் இழப்பை சந்தித்துள்ளனா்.

பலாப் பழத்திலிருந்து சாறு பிழிதல், மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரித்தல் போன்றவற்றுக்கு இந்தப் பகுதியில் ஆலை அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிக்கும் வசதிகள் இருந்தால் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கும் நிலை ஏற்படாது என்றாா் அவா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறையினா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் தற்போது 900 ஏக்கரில் பலா சாகுபடி நடைபெறுகிறது. ஓா் ஏக்கரில் 40 மரங்கள் வளா்க்கலாம். ஒரு மரத்தில் அதிகபட்சம் 70 முதல் 80 பழங்கள் வரை அறுவடை செய்யலாம். மாவட்டத்தில் சராசரியாக ஏக்கருக்கு 20 முதல் 25 டன்கள் வரை பலாப் பழங்கள் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது வரை 70 சதவீதம் அறுவடை முடிந்துவிட்டது. உள்ளூரில் வியாபாரம் செய்வதற்கு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com