பாதுகாப்பான செயலியா, கிளப்ஹவுஸ்?

சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற  சொல் கிளப்ஹவுஸ். கிளப்ஹவுஸ் செயலிக்கு வரவேற்பும் விமர்சனங்களும் ஒருசேர உருவாகி வருகின்றன. 
பாதுகாப்பான செயலியா, கிளப்ஹவுஸ்?
பாதுகாப்பான செயலியா, கிளப்ஹவுஸ்?

சமீபத்தில் இணையத்தில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிற  சொல் கிளப்ஹவுஸ். இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்  அறிமுகமான சமூக வலைத்தளமான கிளப்ஹவுஸ் செயலிக்கு வரவேற்பும் விமர்சனங்களும் ஒருசேர உருவாகி வருகின்றன. 

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டின் சந்தையைப் பிடிக்க பல்வேறு சமூக வலைத்தள நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. எனினும் அனைத்து நிறுவனங்களுக்கும் அந்தக் கனவு நிறைவேறிவிடுவதில்லை. அதேவேளை ஒருமுறை ஒரு செயலி பிரபலமானால் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு சுற்று சுற்றிவரும் நல்வாய்ப்பும் இங்கே சாத்தியம். 

இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பதுதான் கிளப்ஹவுஸ். இந்தியாவில் ஆண்ட்ராய்டு தளத்தில் அறிமுகமாகியுள்ள இதில் பயனர்கள், செயலியில் உள்ள எந்தவொரு பயனர்கள் அறையிலும் ஒலி (ஆடியோ) வடிவில் உரையாட முடியும். விரும்பிய தலைப்பு, கருத்து என ஒத்த அல்லது வேறுபட்ட கருத்து கொண்ட அறைகளில் (அல்லது குழுக்களில்) நடக்கும் விவாதங்களில் கலந்துகொண்டு தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள, பதிவு செய்ய முடியும் என்பதால் இந்த செயலி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கிளப்ஹவுஸில் எந்தத் தலைப்பும் இல்லாமல் வெட்டிப் பேச்சு பேசி வீண் அரட்டை அடிக்கும் கலந்துரையாடல்களும் நிகழ்கின்றன. இன்றைய தலைப்பு இதுதான், துறை சார்ந்த நிபுணர்கள் இவர்கள்தான் என சரியான திட்டமிடலுடன் நடைபெறும் கலந்துரையாடல்களையும் கேட்க முடிகிறது.

எடுத்துக்காட்டாக, தமிழ்ச் சூழலில் திரைத் துறையில் வெற்றியடைய வேண்டிய முனைப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த செயலி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. கதை எழுதுவது எப்படி, திரைக்கதை எழுதுவது எப்படி, கதையை எப்படி அணுக வேண்டும், ஓடிடி தளங்களுக்கு எப்படி கதை எழுத வேண்டும், தயாரிப்பாளர்களை எப்படி அணுக வேண்டும், தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு என்ன, ஓடிடி தளங்களின் எதிர்பார்ப்பு என்ன என்பது போன்ற தலைப்புகளில் எல்லாம்கூட ஏராளமான கலந்துரையாடல்கள் தினந்தோறும் அரங்கேறுகின்றன.

இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது அந்தந்த விவாதங்களில் உரிய துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களே லட்சியங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நேரடியாகப் பதிலளித்து விளக்கங்களை அளிப்பதுதான். இது கனவை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்குத் தங்களது பாதை குறித்த தெளிவை உண்டாக்குகிறது. 

திரைத் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் இதே சூழல்தான். 

பிரபலங்கள், நிபுணர்களிடம் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பாலமாக ஊடகங்கள் இருந்து வந்தன. அந்தப் பாலத்துக்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நபரிடம் நேரடியாகவே விளக்கங்களைக் கேட்டறியும் வகையிலான வசதியைத்தான் இந்த கிளப்ஹவுஸ் ஏற்படுத்தித் தந்துள்ளது. 

பிரபலங்கள், ஜாம்பவான்கள், நிபுணர்கள் என்ற பிம்பங்கள் அனைத்தையும் உடைத்து, யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் எந்தக் கேள்விகளை வேண்டுமானாலும் எழுப்பி விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற சமநிலை மற்றும் ஜனநாயகத் தன்மையை கிளப் ஹவுஸ் உறுதி செய்திருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது. 

இத்தளத்தை பலர் பலவிதமாக உபயோகித்து வருகின்றனர். வேலைவாய்ப்பு, உடல் நலன் சார்ந்த விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதையும் கேட்க முடிகிறது.

ஆனால், சுதந்திரமாக உலாவ வசதி உள்ள இந்த செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விகளும் எழாமல் இல்லை. பயனர்களின் தனியுரிமை குறித்த எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லை என்கிற விமர்சனம் பரவலான குற்றச்சாட்டாக உருவாகியுள்ளது.

இன்றைய டிஜிட்டல் சூழலில் எந்தவொரு செயலி அறிமுகமானாலும் தனியுரிமைப் பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுவது இயல்பாகிவிட்டது.

இந்த செயலியைப் பயன்படுத்தும் பயனர்களின் தொடர்புகள் பயனர்களின் அனுமதி இல்லாமல்  அழைக்கப்படுவதும், தரவு பாதுகாப்பு குறித்த போதிய வசதியின்மையும் கிளப்ஹவுஸ் தளப் பயன்பாட்டை ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது. 

கிளப்ஹவுஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கும் பலரை காலை எழுந்தது முதல் விடிய விடிய அதிலேயே நேரத்தைச் செலவிட வைக்கும் அளவிற்கு அடிமையாக்கி விடுகின்றது. முகநூலைப் போல அடிமையாக்கிவிடக் கூடிய ஆபத்தும் இருக்கிறது.

கிளப்ஹவுஸைப் பயன்படுத்தும் பயனரின் உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அவற்றின் மேலாண்மையில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதாகவும் இணைய வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இந்தப் பதிவுகள் யாவும் சீனாவில் உள்ள நிறுவனத்தில் கையாளப்படுவதாகவும் கூறப்படுகின்றன.

நாளுக்கு நாள் புதிதுபுதிதாகப் பல செயலிகள் வந்தாலும் அவை பயனர்களின் தனியுரிமை குறித்தும், பாதுகாப்பு குறித்தும் எந்தவிதக் கவனமும் கொள்ளாமல் செயல்பட்டு வருவது தொடரும் நிலையில் இணைய பயன்பாட்டாளர்கள்தான் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள் இணைய வல்லுநர்கள். கிளப்ஹவுஸ் செயலியின் பயனர்களுக்கும் இவை பொருந்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com