சிவகங்கை மாவட்டத்தில் எச். ராஜாவுக்கு எதிராகத் தொடரும் பாஜக நிர்வாகிகளின் ராஜிநாமா படலம்

பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவின் குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்ட பாஜக  நிர்வாகிகளின் ராஜிநாமா படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எச்.ராஜா
எச்.ராஜா


மானாமதுரை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான எச். ராஜா தனது தேர்தல் தோல்வி குறித்து எழுப்பும்  குற்றச்சாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத அவரது சொந்த மாவட்டமான சிவகங்கை மண்ணின் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளின் ராஜிநாமா படலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் அடித்தளம் போட்டவர் காரைக்குடியைச் சேர்ந்த எச்.ராஜா, இவர் தனது கட்சி சார்ந்த செயல்பாடுகளால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் பதவி வரை உயர்ந்தார்.

அதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் தன்னுடைய ஆதரவாளர்களை பல்வேறு பொறுப்புகளிலும் நியமித்து கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரத்திடம் தோல்வியை சந்தித்தார்.

அதன் பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

தனது தோல்விக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தான் காரணம் என ராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாத பாரதிய ஜனதா கட்சியின் சிவகங்கை மாவட்ட தலைவர் செல்வராஜ் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறத் தொடங்கியது. செல்வராஜூக்கு ஆதரவாகவும் ராஜாவுக்கு எதிராகவும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக ஒன்றிய நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அறிவித்தனர்.

பாலமுருகன்
பாலமுருகன்

பதவியை ராஜிநாமா செய்த திருப்புவனம் மேற்கு மண்டல் தலைவர் பாலமுருகன் இதுகுறித்து கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் செல்வராஜ், நிர்வாகிகளிடமும் கட்சித் தொண்டர்களிடமும் காட்டிய அணுகுமுறையால் தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தை இரண்டாவது இடத்திற்கு கொண்டுவந்து காட்டியவர்.

காரைக்குடி தொகுதியில் தனது தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராயாமல் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தனது வெற்றிக்கு சரியாக வேலை செய்யவில்லை. தனது தோல்விக்கு அவர்கள் தான் காரணம் என ஏற்றுக்கொள்ள முடியாத குற்றச்சாட்டை ராஜா தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

தேர்தல் செலவுக்கான பணத்தை செலவழிப்பது சம்பந்தமாக கூறப்படும் புகாரை மறைப்பதற்காக ராஜா தரப்பினர், நிர்வாகிகள் மீது தேர்தல் வேலை செய்யவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். 

மாவட்டத் தலைவர் செல்வராஜ் மீது புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து வருகிறோம். மேலும், தொடர்ந்து இந்த ராஜிநாமா படலம் தொடரும். திருப்பணி ஒன்றியத்தில் மேற்கு மண்டல தலைவர் பதவியை நான் ராஜிநாமா செய்துவிட்டேன். மேலும் இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட 59 பாஜக கிளைகளும் கலைக்கப்பட்டு விட்டது.

சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியில் நிலவும் குழப்பம் குறித்து கட்சியின் மாநிலத் தலைமைக்கும் தெரியும். 

மாநிலத் தலைமை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ராஜிநாமா பற்றியும் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com