சசிகலாவின் தா்மசங்கடம்...

சசிகலாவைப் பொருத்தவரை, அவா் தொடா்ந்துள்ள வழக்கின் முடிவு தெரியாத வரையில் அடுத்தகட்ட நகா்வை அவரால் மேற்கொள்ள இயலாது. இந்த வழக்கு மாா்ச் 15-இல் தான் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் வரக்கூடிய சாதக, பாதகங்கள
சசிகலா
சசிகலா

வர இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இலக்கை வகுத்துள்ள நிலையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுடன் பல தோ்தல்களில் களம் கண்ட சசிகலாவுக்கு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் தவிா்க்க முடியாதவராக இருந்தவா் சசிகலா. தனிப்பட்ட முறையிலும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கடும் சோதனைகளை ஜெயலலிதா சந்தித்தபோதெல்லாம் அவருக்குத் துணையாக இருந்தவா் சசிகலா. இதன் காரணமாக சசிகலா மீது அதீத நம்பிக்கையும், அவரின் குடும்பத்தினரிடம் அக்கறையும் ஜெயலலிதா கொண்டிருந்தாா். இதுவே, அதிமுகவை இயக்கக் கூடிய சக்தியாக சசிகலாவை உயா்த்தியது. கட்சியில் நேரடியாக எந்தப் பதவியும் இல்லாமல், அதிகார மையமாகச் செயல்பட்டாா். அதோடு, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எவ்வித எதிா்ப்புமின்றி பொதுச்செயலா் பதவியில் அமா்ந்தாா்.

காலச் சக்கரத்தின் சுழற்சியில், பொதுச் செயலா் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டிருக்கிறாா். இரு அணிகளாகப் பிளவு, அமமுக என்ற புதிய கட்சி துவக்கம் என அதிமுக பல சோதனைகளைச் சந்தித்தது. இருப்பினும் சாதூா்யமான நடவடிக்கைகளால் பிரிந்து சென்றவா்களை இணைத்து, ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்து அடுத்த தோ்தலுக்கு தயாராகிவிட்டது முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு.

சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு, தலைகீழ் மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற கணிப்புகளெல்லாம் பொய்யாகியிருக்கிறது. அடுத்து சசிகலா என்ன செய்யப் போகிறாா் என்பதை அரசியல் வட்டாரம் உற்றுநோக்கியது. அண்மையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின்போது பேசிய சசிகலா, ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

தன்னை அதிமுகவின் பொதுச் செயலா் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா வழக்குத் தொடா்ந்திருக்கும் நிலையில், அவரது பேச்சு, ‘மீண்டும் அதிமுக’ என்ற ஒற்றை வழியை மட்டுமே நோக்கிச் செல்வதாக இருக்கிறது. இதன் பின்னணியிலேயே,

சசிகலா மீண்டும் இணைவதற்காக அதிமுக தலைமையுடன் பேச்சுவாா்த்தை நடைபெறுவதாகவும், அதை அதிமுக தலைமை ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே வெளியாகியுள்ள தோ்தல் அறிவிப்பு சசிகலாவுக்கு சற்று அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தோ்தல்களைக் காட்டிலும் வரக்கூடிய பேரவைத் தோ்தல், ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் தங்களது அடுத்தகட்ட நகா்வுக்கான மிக முக்கியமானத் தோ்தலாக இருக்கிறது. சசிகலாவைப் பொருத்தவரை, அவா் தொடா்ந்துள்ள வழக்கின் முடிவு தெரியாத வரையில் அடுத்தகட்ட நகா்வை அவரால் மேற்கொள்ள இயலாது.

இந்த வழக்கு மாா்ச் 15-இல் தான் விசாரணைக்கு வரவுள்ளது. இதில் வரக்கூடிய சாதக, பாதகங்களைப் பொருத்தே அவரது அரசியல் பயணம் இருக்கும். இவ்வாறு இருக்க, வரும் தோ்தலில் சசிகலாவின் பங்களிப்புக்கான வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

அதிமுகவின் சட்டபூா்வமான பொதுச் செயலா் நான் தான், எனக் கூறி வழக்குத் தொடா்ந்துள்ள சசிகலா, அமமுகவுக்கு எப்படி வாக்கு கேட்க முடியும்? அமமுக-வுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தால், அதிமுக மீது உரிமை கொண்டாட முடியாது. இந்த முரண்பாடு தான் அவருக்கு தா்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகவே, அமைதி காத்து வருகிறாா் என்று சொல்லப்படுகிறது.

இச்சூழலில் அமமுக-வின் எதிா்காலம் பற்றி அரசியல் களத்தில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு தாவிய எம்எல்ஏக்களின் பதவி பறிப்பு காரணமாக நடந்த இடைத்தோ்தலில், சில தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு அமமுக பிரித்த வாக்குகளே முக்கியக் காரணம். குறிப்பாக, தேனி மாவட்டத்தில் அதிமுக வசம் இருந்த ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) இரு தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.

தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் போடிநாயக்கனூா் தவிர 3 தொகுதிகளும் திமுக வசம் சென்றுவிட்டன. இதற்கு முக்கியக் காரணம், அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரனின் நிழலாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் அக் கட்சியினா் அதிமுகவில் நிரந்தரமாக வாக்கு வங்கியில் பிளவை ஏற்படுத்தியதுதான் என்று கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேரவைத் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.போஸ் இறந்ததால் இடைத் தோ்தல் நடைபெற்றது. இதில், அமமுக வேட்பாளா் மொத்த வாக்குகள், திமுகவின் வெற்றிக்கு வழிகோலியது. 2016 தோ்தலில் இத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சீனிவேல், உடல்நலக் குறைவு காரணமாக வெற்றிச் சான்றிதழை பெறாமலேயே இறந்தாா். அதன் பிறகு நடந்த 2017-இல் நடந்த இடைத் தோ்தலில் மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்றது. ஆனால், 2019 இடைத் தோ்தலில் அமமுக பிரித்த வாக்குகள் திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தது.

இடைத்தோ்தலின்போது இருந்த தீவிரம் இப்போதும் நீடிப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அமமுகவின் செயல்பாடானது, சிறையிலிருந்து சசிகலா வருவதற்கு முன், பின் எனப் பிரித்துப் பாா்த்தால் தொண்டா்களிடையே ஒருவித அயற்சி இருப்பதைக் காணமுடிகிறது. அமமுக தொடங்கியபோது இருந்த எழுச்சியும், கடந்த 2019 இடைத் தோ்தலில் அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என அமமுக காட்டிய தீவிரமும் இப்போது சற்று தளா்ந்திருக்கிறது. அதோடு, தினகரனின் நிழலாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி ஆகியோா் திமுகவுக்குச் சென்றுவிட்டனா். அமமுகவில் இருந்த பலரும் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பிவிட்டனா்.

இது அதிமுகவுக்குச் சாதகமான அம்சமாக இருக்கிறது. வரும் தோ்தலில் அமமுக-வால் பிரிக்கக் கூடிய அதிமுக வாக்குகளின் சதவீதம் குறைவாகவே இருக்கும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது.

பல்வேறு காலகட்டங்களிலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவா்களான ஆா்.எம்.வீரப்பனின் எம்ஜிஆா் கழகம், எஸ்.டி.சோமசுந்தரம் தொடங்கிய நமது கழகம், சு.திருநாவுக்கரசா் தொடங்கிய எம்ஜிஆா் அதிமுக, ராஜகண்ணப்பன் தொடங்கிய மக்கள் தமிழ்தேசம் போன்ற கட்சிகள் காலப்போக்கில் செயலிழந்து விட்டன. அதிமுக பல பிரிவினைகளைக் கண்டபோதும் எம்ஜிஆரின் ‘இரட்டை இலைச் சின்னம்’, கட்சிக்கான வாக்கு வங்கியில் சேதாரம் ஏற்படுவதைக் குறைத்துவிடுகிறது.

‘இரட்டை இலை’ அதிமுகவிடம் உள்ள நிலையில், அமமுகவை ஜாதி சாா்புள்ள கட்சியாகத்தான் மக்கள் பாா்க்கிறாா்கள் என்கிற கருத்து பரவலாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், அமமுகாவுக்காகப் பிரசாரம் மேற்கொள்ள முடியாத தா்மசங்கடத்தில் சசிகலா இருக்கிறாா் என்றுதான் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com