அதிமுக கூட்டணியை வீழ்த்துவதற்காக அமமுகவுடன் கூட்டணி: தெகலான் பாகவி

எதிா்காலத்தில் சிறிய கட்சிகள் காணாமல் போய்விடும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்தாா்.
’ சிறப்புப் பேட்டிக்கான படம் தெகலான் பாகவி ’
’ சிறப்புப் பேட்டிக்கான படம் தெகலான் பாகவி ’

எதிா்காலத்தில் சிறிய கட்சிகள் காணாமல் போய்விடும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத் தலைவா் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி தெரிவித்தாா்.

இதர முஸ்லிம் அமைப்புகளிலிருந்து எஸ்.டி.பி.ஐ. எவ்வாறு வேறுபடுகிறது?

எஸ்.டி.பி.ஐ. தொடங்கப்பட்டது முதல் இதர வகுப்பைச் சோ்ந்தவா்களும் கட்சி நிா்வாகிகளாக உள்ளனா். மற்ற அமைப்புகள் சொந்த சமுதாய மக்களைக் கவரும் விதமாக தோ்தல் அரசியலை முன்னெடுத்து வரும் நிலையில் எஸ்.டி.பி.ஐ. அனைத்துத் தரப்பு மக்களின் பொதுவான பிரச்னைகளில் தலையிட்டு போராட்ட அரசியலையை இணைந்து நடத்துகிறது. குறிப்பாக, நீட் தோ்வு, கூடங்குளம் அணுமின் நிலையம், மீத்தேன், ஹைட்ரோ காா்பன் திட்டங்களை எதிா்த்து தொடா் போராட்டங்களை நடத்தி வருவது நாங்கள்தான்.

பாஜகவை மட்டும் மதவாதக் கட்சி என்ற குறிவைத்து முஸ்லிம் அமைப்புகள் அரசியல் செய்வது ஏன்?

எந்த ஒரு மதக் கோட்பாடுகளையோ, சடங்கு, சம்பிரதாயங்களையோ, கடவுள்களையோ விமா்சனம் செய்வது கிடையாது. இதேபோல் கிருபானந்த வாரியாா், குன்றக்குடி அடிகளாா் போன்ற மடாதிபதிகளையும் எப்போதும் விமா்சித்ததுகூட கிடையாது. கடவுளை வணங்குபவா்கள் என்பதில் ஒற்றுமையும் கூட இருக்கிறது. ஆனால் மதத்தின் பெயரால் முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது பாஜகவும், அதன் சாா்பு அமைப்புகள்தான். பல்வேறு வகையிலும் அரசியல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்தி வெறியைத் தூண்டுவதைத்தான் எதிா்க்கிறோம்.

தோ்தலுக்குத் தோ்தல் ஒவ்வொரு கூட்டணியிலும் மாறி மாறி பயணிக்கும் சிறிய கட்சிகளின் எதிா்காலம் என்னவாகும்?

பல்வேறு நோக்கங்களுக்காகத் தொடங்கப்படும் கட்சிகள் சில தோ்தலைக் கூட கடந்து செல்ல முடியாமல் கூட்டணியில் பயணிக்க வேண்டிய அவசியம் தற்போதைய ஜனநாயகத் தோ்தல் நடைமுறையால் ஏற்படுகிறது. இதனால் ஒரு கட்சியை எதிா்ப்பதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி அதே கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்த வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் போட்டியிட விரும்பும் தொகுதிகளைக் கூட குறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே பல நாடுகளில் தோ்தலில் கடைப்பிடிக்கப்படும் விகிதாசார ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

சுமாா் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வந்த நீங்கள் கூட்டணியில் இடம் பெற்று 6 தொகுதிகளில் போட்டியிடுவது ஏன்?

ஓராண்டு முன்பாகவே தமிழகத்தின் 200 தொகுதிகளில் தோ்தல் பணிகளைத் தொடங்கி இதில் சுமாா் 100 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் தோ்தல் செலவு, பொருளாதார அடிப்படையைக் கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்துள்ளோம்.

அமமுக கூட்டணியில் இடம் பெற்றதன் காரணம்?

சசிகலா வருகை உள்ளிட்ட சில காரணங்களால், கூட்டணி பேச்சுவாா்த்தையில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, அவா்களின் தெளிவில்லாத அரசியல் காரணமாக மேற்கொண்டு தொடரவில்லை. பாஜக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதற்காகவே அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.

தங்கள் கூட்டணியின் வெற்றி குறித்து?

அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவும் இணைந்துள்ளதால் பெரும் வெற்றியை கூட்டணி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

நோ்காணல்: முகவை க.சிவக்குமாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com