கூடுதல் சுமையா தேசியக் கட்சிகள்?

தென்னிந்தியாவில் தமிழகத்திலும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானாவிலும் மாநிலக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
கூடுதல் சுமையா தேசியக் கட்சிகள்?


தென்னிந்தியாவில் தமிழகத்திலும் அண்டை மாநிலங்களான ஆந்திரம், தெலங்கானாவிலும் மாநிலக் கட்சிகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கர்நாடகம், கேரளத்தில்  தேசியக் கட்சிகளுக்கு இன்னமும் கூட முக்கியத்துவம் உள்ளது. தமிழகத்தில் என்னவோ தேசியக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெல்ல முடியாத நிலைதான் நீடிக்கிறது.
நாட்டின் பிற பகுதிகள், எல்லையோரங்களில் இருக்கும் பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்தினாலும், அங்கு தேசியக் கட்சிகள் குறிப்பிடத்தக்க செல்வாக்கை வைத்திருக்கின்றன. 
தேசியக் கட்சிகளால் தனிப்பட்ட செல்வாக்கை உருவாக்க முடியாத அளவுக்கு திராவிடக் கட்சிகள் வளர்ந்து நிற்பதுமே, தேசியக் கட்சிகளுக்கு தமிழகத்தின் மீது ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஈர்ப்புதான் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை தமிழ் மொழியின் பெருமைகளைப் பேச வைத்திருக்கிறது. ராகுல் காந்தியை அடிக்கடி தமிழகத்துக்கு வரவழைக்கிறது.
காங்கிரஸின் வீழ்ச்சி:  சுதந்திரத்துக்குப் பிறகான தமிழகத்தில் முதல் ஆட்சி (1952) காங்கிரஸ் கட்சியினுடையது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. ஆந்திர மாநிலத்தில் பொதுவுடமைக் கட்சி வலுவாக இருந்ததால் முதல் தேர்தலில் 62 இடங்களைப் பிடித்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மொழிவாரி மாநில பிரிப்புக்குப் பிறகு 1957-இல் நடைபெற்ற தேர்தலில் வெறும் 4 இடங்களை மட்டுமே பிடித்தது.
முதல் தேர்தலுக்கு முன்பே உருவாகியிருந்த திமுக, இப்போது தேர்தல் அரசியலுக்கு வந்திருந்தது. சுயேச்சைகளாகப் போட்டியிட்ட திமுகவினர் 13 இடங்களைக் கைப்பற்றி இடதுசாரிகளின் இடத்தைப் பிடித்திருந்தனர். இரண்டாவது பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் வென்றிருந்தது.
சென்னை மாகாண காங்கிரஸ் கட்சியில் உள்கட்சிப் பூசல் பிரச்னை நாடு விடுதலை பெறுவதற்கு முன்னதாகவே தொடங்கியிருந்தது. டி.பிரகாசம், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், பி.எஸ்.குமாரசுவாமி ராஜா, ராஜாஜி, காமராஜர் தலைமையில் தனித்தனி குழுக்கள் செயல்பட்டு வந்தன. அடிக்கடி முதல்வர்கள் மாற்றம் நடைபெற்று வந்தது. 
1962 தேர்தலில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் வென்றிருந்தாலும் திமுக 50 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாகியிருந்தது.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு காமராஜர் முதல்வர் பதவியில் இருந்து விலகி தேசிய அரசியலுக்குச் சென்றது, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், உணவு தட்டுப்பாடு பிரச்னை போன்றவற்றால் காங்கிரஸ் மீது கடுமையான அதிருப்தி உருவாகி 1967 தேர்தலில் திமுக தனிப்பெருங்கட்சியாக உருவானது. தமிழகத்தில் காங்கிரஸ் என்ற தேசியக் கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது.
1969-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு தமிழகத்தில் அதன் மறு எழுச்சிக்குத் தடையாகிப்போனது. இதைத் தொடர்ந்தே காங்கிரஸ் கட்சியால் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகவோ, எதிர்க்கட்சியாகவோ உருவெடுக்க முடியவில்லை. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் போராடி 25 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, அதைவிட கடுமையான போராட்டங்களுக்கு இடையில்தான் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட்டது.
1972-இல் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய பிறகு, காங்கிரஸ் விட்டுச் சென்ற இடத்தை அதிமுக பிடித்துக் கொண்டது. அதன் பிறகான தமிழக அரசியல் திமுக, அதிமுகவுடனேயே நிலைபெற்றது.
பாஜகவின் நிலை:  மற்றொரு தேசியக் கட்சியான பாஜக  1980-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. (இதன் முன்னோடி கட்சியான ஜன சங்கம் 1962-இல் 4 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை). பாஜக 1996 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நிலையில் அதனால் ஓர் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று 4 இடங்களில் வெற்றி பெற்றதுதான் இதுவரை தமிழகத்தில் அதன் அதிகபட்ச வெற்றியாக உள்ளது.
கடந்த தேர்தல் வரையிலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று எனக் கூறி வந்த அக்கட்சி, 2021 பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேசியக் கட்சிகள் வளர முடியாததன் காரணம்?
தமிழகத்தில் தேசியக் கட்சிகள் வளர முடியாததற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லலாம். இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றையொன்று கடுமையாக விமர்சித்துக் கொண்டாலும், விரோதிகளாகவே கருதி செயல்பட்டாலும் சமூக நீதிக் கொள்கை, இட ஒதுக்கீடு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் பாரம்பரிய பாதையில் இருந்து விலகிவிடாமல் செயல்படுகின்றன.
இருபெரும் திராவிடக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதைப்போல மேற்கண்ட விஷயங்களில் போட்டி போட்டு செயல்படுகின்றன. இந்தப்  போட்டியில் நுழைவதற்கு எந்த ஒரு தேசியக் கட்சிக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை. 
காமராஜரின் மறைவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கான ஆளுமைகள் உருவாகாதது, திராவிடக் கட்சிகளைப் போன்று திரைத் துறையின் பின்னணி கொண்ட பிரபலங்கள், கொள்கை பின்புலம் கொண்ட வலுவான தலைவர்கள் உருவாகாதது போன்றதும் தேசியக் கட்சிகளுக்கான இடத்தையும் அவற்றுக்கான அரசியல் முக்கியத்துவத்தையும் இங்கு உருவாக்கவில்லை.
தமிழகத்தில் நிலைபெற முடியாமல் இருக்கும் இருபெரும் தேசியக் கட்சிகளும் தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிடக் கட்சிகளை, பணிய வைத்தோ, பணிந்து சென்றோ தங்களுக்கான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.
பேரவைத் தேர்தலில் தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் எதிரணிக்கே சாதகமாகும் நிலை இருப்பதால்தான் திராவிடக் கட்சிகள் அவற்றுக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்குகின்றன. 
2020-ஆம் ஆண்டில் பிகாரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு குறைவான தொகுதிகளில் காங்கிரஸ் வென்றதால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடியாமல் போனது என விமர்சனங்கள் எழுந்தன.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிட்டது. பாஜக எதிர்ப்பை மையப்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதால் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 12-இல் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
ஒருபுறம் பழைய செல்வாக்கை இழந்து நிற்கும் காங்கிரஸ்...மறுபுறம் செல்வாக்கை இன்னும் வளர்த்திக் கொள்ளாத பாஜக. தமிழகத்தில் இதுதான் தேசிய கட்சிகளின் இன்றைய நிலையாக உள்ளது. அதனால் தேர்தல் கால தொகுதி பேரம் ஒருதலைப்பட்சமாகவே உள்ளது.
தேசியக் கட்சிகள் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் சக்தி வாய்ந்தவையாக இருக்கலாம், ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை அவை திராவிடக் கட்சிகளின் கூடுதல் சுமைதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com